தனது ஏழ்மை நிலையில் இருந்து முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் கடினமாக தனது உழைப்பை செலவழிக்கிறார்கள் ஆனால் ஏற்கனவே வசதி படைத்தவர்கள் மேலும் தங்கள் சொத்துக்களை அதிகரித்துக் கொள்ள நினைக்கிறார்கள் அதுவும் குறுக்கு வழியில் தான் அவற்றை பெறுகிறார்கள். அப்படித்தான் சமீபத்தில் போலி சான்றிதழ்கள் மற்றும் தகவல்களை வழங்கி ஐஏஎஸ் பயிற்சியாளர் என்ற அளவிற்கு உயர்ந்திருந்தர் மகாராஷ்டிராவை சேர்ந்த பூஜா கேட்கர். இவர் தனது விதிகளை மீறி சொந்த காரில் சிவப்பு மற்றும் நீல கலரின் சைரன் விளக்குகளை பொருத்தி மகாராஷ்டிரா அரசு என்ற பலகையையும் வைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் இல்லாத நேரங்களில் அவரது இருக்கையில் அமர்ந்து கொண்டு தான் மாவட்ட ஆட்சியர் என்று பல சர்ச்சைகளை செய்துள்ளார். அதுமட்டுமின்றி தனக்கு தனிப் பலகை, தனி ஊழியர், இன்டர் காம் மற்றும் தனி வீடு, கார் போன்றவற்றை கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்துள்ளார்.
இப்படி தொடர்ச்சியாக இவர் நெருக்கடி கொடுத்து வந்ததால் மாவட்ட ஆட்சியர் பூஜா குறித்து மாநில அரசுக்கு கடிதம் எழுதியதை அடுத்து பூஜா வாசில் என்ற மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். இதனை அடுத்து ஐஏஎஸ் பயிற்சியாளராக உள்ள பூஜா மீதான விசாரணைகள் அதிகரிக்க ஆரம்பித்தது அப்பொழுதுதான் இவர் தேர்வில் என் 800வது இடத்திற்கு வந்து, ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதற்காக சற்று பார்வை குறைபாடு உள்ளது என மாற்றுத்திறனாளி சான்றிதழை வழங்கி சிறப்பு இட ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 8 லட்சத்திற்கும் குறைவான வருமானத்தை பெறுவோர் என்ற சான்றிதழையும் பெற்று அதிலும் இட ஒதுக்கீடு பெற்றிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பூஜாவின் தந்தை ஒரு அரசு அதிகாரி, மேலும் இவர்களது குடும்பம் ஒரு கோடீஸ்வர குடும்பம் அப்படி இருக்கும் பொழுது அவற்றை மறைத்து விட்டு போலியான சான்றிதழ்களை வழங்கி இட ஒதுக்கீட்டில் இவர் இந்த அளவிற்கு முன்னேறி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதனால் பூஜா மீதான புகாரை விசாரிக்க மத்திய அரசு தனி கமிட்டி ஒன்றை அமைத்திருக்கிறது. இதனை அடுத்து செய்திகளில் இவரது புகைப்படங்களும் இவர் செய்த சர்ச்சைகளுமே பரவலாக பேசப்பட்டு வருகிற நிலையில் தற்போது இவரது தாய் துப்பாக்கியால் விவசாயி ஒருவரை மிரட்டும் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது முன்னாள் அரசு அதிகாரியான பூஜாவின் தந்தை முல்சி கிராமத்தில் 25 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். அங்கு ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக விவசாயிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளார் பூஜாவின் தாய்! இந்த வீடியோ கடந்த ஆண்டு எடுக்கப்பட்டதாக இருந்தாலும் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்படுவதால் பூஜாவின் தாயான மனோரமா வைத்துள்ள துப்பாக்கி உரிமம் பெற்றதா என்பது குறித்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் கமெண்ட்கள் எழுந்து வருகிறது.
ஏற்கனவே ஐஏஎஸ் பயிற்சியாளராக இருந்து கொண்டு பூஜா செய்த அட்டூழியங்கள் பெருமளவிலான விமர்சனங்களையும் பிரச்சனைகளையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது அவரது தாயின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அவர் மீதான விசாரணையும் தற்போது வலுவெடுத்து வருகிறது. ஒரு வேலை பூஜா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவரது பணியே பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது.