2024ல் பாஜக மற்றும் திமுக கூட்டணி சேருவதற்கான முதற்கட்ட சந்திப்பு போலும் என தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அரசியல் விமர்சகர் சத்யகுமார். இதுகுறித்து அவர் பதிவிட்ட கருத்துக்கள் பின்வருமாறு :-
தமிழ் நாட்டின் அரசியல் களம் மாறுபட்டது. தமிழகத்தில் பாஜக காலூன்ற வேண்டும் என்றால், இங்கு இருக்கும் பெரும்பான்மை மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு அரசியல் செய்ய வேண்டும். 1917ல் நீதிக் கட்சியாகத் தொடங்கி, பின்பு திராவிட கழகமாக உருவெடுத்து, பிறகு திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியாகக் கடந்த 50 வருடங்களுக்கும் மேற்பட்டு ஆட்சி செய்து, மக்கள் மனதில் நிலைநிறுத்தி இருப்பதால், பாஜகவின் திராவிட சித்தாந்த எதிர்ப்பு அரசியல் பயனளிக்காமல் போனது.
ஹ.ராஜா, கே.டி. ராகவன், இலகனேசன் போன்ற பாஜக மூத்த தலைவர்களின் தீவிர திராவிட எதிர்ப்பு அரசியல் வெற்றி அடையவில்லை. தமிழகம் இன்று இந்தியாவிலேயே முன்னேறி வரும் மாநிலங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது என்றால், இங்கு வாழும் மக்களின் மனதில் திராவிட அரசியல் மீதுள்ள பற்று வேரூன்றியுள்ளது என்று அர்த்தம். ஆகையால், இங்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால்,
திராவிட கட்சிகளையும் தாண்டி, இங்கு வாழும் மக்களுக்கு பாஜக இதற்கும் பல படிகள் மேலாக நல்ல திட்டங்களைச் செய்து கொடுத்தாக வேண்டும். கட்சிக்காகப் பேசாமல், மக்களுக்காகப் பேச வேண்டும். அதற்கான முதற்படி, தற்போது எதிர்க் கட்சி பலவீனமாக உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நட்பு பாராட்டுதல் ஆகும்.
மம்தா பேனர்ஜீ அவர்களுக்குத் தேசிய அளவில், இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டும் என்ற அரசியல் கனவு உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் பக்கம் நிற்பது நல்லது. சீன அரசு இலங்கையில் கட்டப்போகும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். அதுமட்டுமில்லாமல் சென்னைக்கு அருகில் தான் பாதுகாப்பு கோரிடார் கட்டமைக்கப்படப்போகிறது. ஆகையால், இதுவும் ஒரு முக்கியமான காரணம், இரு கட்சிகளும் ஒன்றிணைவதற்கு.
இந்த சந்திப்பிற்காக மத்திய பாஜக குழு சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தது. ஒரு சிறப்பு பாதுகாப்புக் குழுவின் புல்லட் ப்ரூஃப் கார் தமிழ் நாடு மாளிகையிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை அழைத்துக்கொண்டு 7 ஜான் கல்யாண் மார்க் விலாசத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அழைத்துச் சென்றது. இந்த மரியாதை மற்ற முதலமைச்சர்களுக்கு நீட்டிக்கப்படவில்லை.
திரு மு.க.ஸ்டாலினைச் சந்தித்த பிரதமர் மோடி தனது தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, தமிழகத்தின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பையும் உறுதி செய்தார். அதற்கடுத்து தலைநகரில், பாஜக அலுவலகத்திற்கு அருகிலேயே கட்டப்பட்டு வரும் கட்டுமானத்தில் உள்ள திமுக அலுவலகத்தைத் திரு. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், ஹ.ராஜா, கே.டி.ராகவன், இலகனேசன் போன்றவர்கள் தீவிர திமுக-எதிர்ப்பு அரசியல் செய்யாமல் இருப்பதே 2024ல் பாஜகவின் வெற்றிக்கு நல்லது. இவர்கள் செய்யும் திமுக எதிர்ப்பு அரசியலை, மக்களை எதிர்த்துச் செய்யும் அரசியலாகத் தமிழக மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
தமிழக பாஜக, மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்றால், முதலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த சகோதர சகோதரிகளை முக்கிய தலைமை பொறுப்புகளில் நியமிக்க வேண்டும். அதை செய்வார்களா? 2024ல் தேர்வாகும் அடுத்த பிரதமரை திமுக நிர்ணயிக்குமா?திரு. நரேந்திர மோடி அவர்கள் 2024ல் இன்னொரு அடல் பிஹாரி வாஜ்பாயாக திகழ்ந்து, பிரதமராக உருவெடுப்பாரா? என கேள்வி குறியுடன் முடித்துள்ளார் சத்யகுமார்.