திமுகவில் மீண்டும் உதயநிதிக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி கொடுத்தது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. வாரிசு அரசியலுக்கு பெயர் போன திமுகவில் வார்டு கவுன்சிலர் முதல் முதலமைச்சர் வரை அனைத்து பதவிகளுக்கும் வாரிசுகள் தான் இடம் பிடிப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த கதையே. அதனால் தான் சமீபத்தில் சோசியல் மீடியாவில் கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அவருக்கு அடுத்து இன்பநிதி என வரிசையாக வாரிசு அரசியலை நக்கலடிக்கும் விதமாக டிசைன் செய்யப்ப்பட்ட வாரிசு பட போஸ்டர்கள் வைரலாகி வருகிறது. இதெல்லாம் போதாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உதயநிதி ஸ்டாலினை பங்கமாய் கலாய்த்துள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கடந்த 2017ம் ஆண்டு சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டத்தில் பங்கேற்று விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், வன்முறையை தூண்டு விதத்திலும் பேசியதற்காக அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றிருந்த சீமான், சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால் அவர் இரண்டு முறை ஆஜராகததால், அவருக்கு பிடி ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் இன்று சேலம் நீதிமன்றம் மூன்றாவது குற்றவியல் நடுவர் எண்ணில் சீமான் இன்று ஆஜரானார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் திமுக விரைவில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி தர உள்ளதாக கூறப்படுகிறது. உதயநிதி அமைச்சரானால் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பினர். அதற்கு ‘நாடே தலைகீழாக மாறிவிடும், சிங்கப்பூர் மாதிரி மாறிடும்... எதையாவது சொல்லி சிரிப்பு காட்டாதீங்க’ என்றார். இந்த பதில் செய்தியாளர்கள் உள்ளிட்ட அனைவர் மத்தியிலும் சிரிப்பலையை உருவாக்கியது.
மாதம் ஒருமுறை மின்கட்டணம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த திமுக இப்போது அந்தர் பல்டி அடித்து ஏன் என்றும், நீதிமன்றத்திலேயே தமிழ் இல்லை, பிறகு எப்படி தமிழை வளர்க்க முடியும் என திமுகவை அடுத்தடுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.