கையேந்தி பிச்சை எடுத்த பாஜகவினர்; திமுகவால் நேர்ந்த அவலம்! போடியில் பாரதிய ஜனதா கட்சியினர் நகராட்சியை கண்டித்து கையில் ஓடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம் போடி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் மக்கள் பணி எதுவும் செய்யாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், இதை கேட்டால் நகராட்சியில் கஜானா காலியாக இருப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவிப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்து போடி நகர பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் கையில் ஓடு ஏந்தி பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் பிசி பாண்டியன், மாவட்ட செயலாளர் தண்டபாணி மற்றும் போடி 9வது வார்டு பாஜக கவுன்சிலர் மணிகண்டன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டு போடி பேருந்து நிலையத்தில் இருந்து நகராட்சி அலுவலகம் வரை கையில் ஓடு ஏந்தியும் கழுத்தில் நகராட்சியை கண்டித்து பதாகை மற்றும் மாலை போட்டு கொண்டு பிச்சை எடுத்தனர்.
மேலும் நகராட்சியை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் கோஷங்களும் எழுப்பினர். பின்பு போடி நகராட்சி அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற பாரதிய ஜனதா கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.இதனால் காவல்துறையினருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்பு காவல்துறையினரின் பேச்சு வார்த்தைக்கு பிறகு போடி நகராட்சி 9வது வார்டு பாஜாக கவுன்சிலர் மணிகண்டன் மற்றும் மாவட்ட செயலாளர் தண்டபாணி ஆகியோர் நகராட்சி அலுவலகத்திற்குள் சென்று பொதுமக்களிடம் ஓடு ஏந்தி பிச்சை எடுத்த பணத்தை நகராட்சி அலுவலகத்தில் வைத்து விட்டு சென்றனர்.இதனால் நகராட்சியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.