ஆளுநர் மாளிகை காவிச் சாயம் ஏற்றப்படும் நிலை வளருமானால், அது தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவாலாகவே தமிழ்நாட்டு மக்களால் கருதப்படவேண்டி வரும் என்பது கசப்பான உண்மையாகும் என கொந்தளித்துள்ளார் திராவிட கழக தலைவர் வீரமணி இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-
1. ‘நீட்’ தேர்வுக்குத் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவேண்டும்; காரணம், ‘நீட்’ தேர்வு என்பது மாநில உரிமையைப் பறிப்பது மட்டுமல்ல; ஏழை, எளிய மக்கள், கிராமப்புறத்திலிருந்து டாக்டராக ஆசைப்பட்டு வருபவர்கள், மாநில அரசில் உள்ள கல்வித் திட்டமான 12 ஆம் வகுப்பு மெட்ரிகுலேசன் தேர்வுமூலம், படித்தவர்களுக்குப் பெருமளவு வாய்ப்பு மறுக்கப்பட்டு, ஒன்றிய கல்வி முறையான சி.பி.எஸ்.இ. என்ற படிப்பு முறையில் படித்தவர்களும், பல லட்சங்கள் செலவழித்து “கோச்சிங் சென்டர்கள்’’மூலம் - மருத்துவக் கல்விக்கு அடிப்படையான பாடங்களைக் கற்பதைக்கூட பின்தள்ளிவிட்டு, ‘நீட்’ தேர்வு போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதுபற்றி மட்டுமே கற்கவேண்டிய படிப்பாக அது மாற்றப்படுவதை எதிர்த்து,
தமிழ்நாடு அரசு ‘நீட்’ தேர்வை ஏற்க இயலாது என்று திட்டவட்டமாகக் கூறியதுடன், அதற்கென ஒரு நீதிபதி தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை நியமித்து, அதன் ஆய்வறிக்கையைப் பெற்று, அதனடிப்படையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘நீட்’ தேர்வுக்கு விலக்குத் தரவேண்டி, ஒரு மசோதாவை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மாநில ஆளுநர்மூலம் அனுப்பியது - 5 மாதங்களுக்கு முன்பு. ஆளுநர் உரையில், ஆளுநர் ‘நீட்’ எதிர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லையா?
2. ஆளுநர் உரை என்று சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களால் நிகழ்த்தப்பட்ட உரையில் ‘நீட்’ தேர்வு கூடாது என்பதை அவர் படித்தார்; அது அரசின் கொள்கை முடிவையொட்டியது என்பதை அதன்மூலம் ஏற்றுள்ளார்.
3. இந்த நிலையில், 5 மாதங்கள் அதை கிடப்பில் போட்டு வைத்துவிட்டு, தமிழ்நாட்டிலும், நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் இந்த ‘நீட்’ தேர்வு மசோதவை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் வைத்திருந்ததற்குப் பலத்த எதிர்ப்பு, கண்டனங்கள் வெடித்த பிறகு, பிப்ரவரி முதல் நாள் - இரண்டு நாள்களுக்குமுன் ஆளுநர் திருப்பி அனுப்பியது,
அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரான (Unconstitutional and anti-Constitutional) கண்டிக்கத்தக்க, முறைகேடான நடவடிக்கையாகும். மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது அரசமைப்புச் சட்டத்தின் கூறு 200-க்கு விரோதமானதே!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு (Article) 200-இன்படிக்கூட, ஒரு மசோதா மாநில அரசால் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படவேண்டிய அவசியத்திலிருக்கும்போது, அம்மசோதாவை (Bill) எப்போது ஆளுநர் நிறுத்தி வைக்க முடியும் என்றால், அம்மசோதா - உயர்நீதிமன்றத்தின் உரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தால் மட்டுமே செய்ய முடியும்.
மற்றபடி ஆளுநர் - இந்த ‘நீட்’ தேர்வு விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவேண்டிய - தபால் ஆபீசு பணி போன்று - செய்யவேண்டிய பணியே தவிர, இவர் அதுபற்றி ஆராய்ந்து, திருப்பி அனுப்பியது அரசமைப்புச் சட்டத்தின் மேலே சுட்டப்பட்ட கூறுகளுக்கு விரோதமானதாகும்.
இதனை உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகளும்கூட வலியுறுத்தியுள்ளன. குடியரசுத் தலைவர் அலுவலகம் ஆராயவேண்டிய ஒன்று!
4. திருப்பி அனுப்பியதற்கு இவர் மேற்கோள் காட்டிய வேலூர் சி.எம்.சி. வழக்கு ‘நீட்’ தேர்வுபற்றி போடப்பட்ட அந்த வழக்கு அறவே பொருந்தாத ஒன்றாகும்; அது சிறுபான்மை கல்விக் கூடத்தின் உரிமை என்ற அடிப்படையிலேயே அமைந்த ஒன்று.
அதையெல்லாம் கூட ஆராய வேண்டியது குடியரசுத் தலைவரின் அலுவலகம், அவரது அதிகாரத்திற்குட்பட்டதே தவிர, ஆளுநரின் அதிகாரத்திற்குள் வருவது அல்ல!
சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை ஏற்கத்தக்கதல்ல என்பது போன்று கருத்துக் கூறவும் - இம்மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், திருப்பி அனுப்புவதற்கும் எந்த உரிமையும் சட்டப்படி அவருக்கு இல்லை.
கேபினெட் சிஸ்டத்திற்கு விரோதமானது . மற்றொரு பொதுவான அரசமைப்புச் சட்டத் தத்துவம் - ‘‘நாடாளுமன்றம் (Parliament) என்பது குடியரசுத் தலைவரும், இரண்டு அவைகளையும் கொண்டது என்பது எப்படி ஒரு வரையறையோ (Definition) அதேபோலத்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளுநர் - சட்டமன்றம் இவை ஒருங்கிணைந்த ஒன்று - அது முடிவு செய்ததற்கு எதிரான நிலைப்பாட்டை ஆளுநர் எடுப்பதற்கு, அரசமைப்புச் சட்டப்படி இடமே இல்லை; காரணம், நம்முடைய முறை ‘கேபினெட் சிஸ்டம்‘ என்ற அமைச்சரவையில் அமைந்துள்ள காரணத்தால்.
வீட்டோ அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது, எனவே, ‘வீட்டோ’ (Veto) என்ற திருப்பி அனுப்புவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லாத அதிகாரத்தை பொல்லாத முறையில் மாநில ஆளுநர் பயன்படுத்தியது வன்மையான கண்டனத்திற்குரியது.
சட்டமன்றத்தில் இந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவது மக்களாட்சியின் மாண்பையும், அரசமைப்புச் சட்டத்தின் மதிப்பையும் காப்பாற்றுவதாகும்!
நாளை முதலமைச்சர் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை (5.2.2022) முதலமைச்சர் கூட்டவிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இதுபற்றி ஒரு சிறந்த அரசமைப்புச் சட்ட ரீதியான முடிவை எடுத்து அறிவிக்கவேண்டும் என்பது அவசரம் - அவசியம்.
தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ள ஆளுநர், மாநில அரசுடன் அரசமைப்புச் சட்ட ரீதியாக சுமூக உறவுடன் இல்லாமல், தமிழ்நாடு அரசின் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சியின் கொள்கை முடிவுகளை எல்லாம்பற்றி மாற்றுக் கருத்தோடு அறிக்கைகள் விடுப்பதும், தமிழ்நாட்டில் உள்ள மக்களாட்சியின் மாண்பை சிதைக்கும் மோதல் போக்கின் தொடக்கம்போல் இருப்பது விரும்பத்தக்கதல்ல.
ஆளுநர் மாளிகை காவிச் சாயம் பூசுவதா? ஆளுநர் மாளிகை காவிச் சாயம் ஏற்றப்படும் நிலை வளருமானால், அது தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவாலாகவே தமிழ்நாட்டு மக்களால் கருதப்படவேண்டி வரும் என்பது கசப்பான உண்மையாகும் என குறிப்பிட்டுள்ளார் வீரமணி.
வீரமணி இவ்வளவு ஆவேசமாக அறிக்கை கொடுத்தால் அதில் சென்று பாஜகவினர் சிரித்து வைத்துள்ளனர், வீரமணி கருத்தை ஏற்று கொண்டவர்களை விட சிரிப்பவர்கள் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது இது தவிர்த்து உங்களுக்கு வேறு வேலையே இல்லையா வீரமணி அவர்களே என கமென்டில் பல விதமாக பாஜகவினர் கலாய்த்து வருகின்றனர்.
More Watch videos