அண்ணா கலைஞர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவை பற்றி தொடர்ந்து பல்வேறு எதிர் கருத்துக்களை பதிவிட்டு வந்ததாக கைது செய்யப்பட்ட கிஷோர் கே சாமி சிறையிலிருந்து வெளிவந்த உடன் தன்னுடைய முதல் பதிவை மீண்டும் முகநூலில் பதிவிட்டு உள்ளார் இவரது பதிவிற்கு அவருடைய ஆதரவாளர்கள் நொடிக்கு நொடி பதிவுகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வாங்க தலைவா வாங்க என உற்சாக பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
பல்வேறு எதிர் கருத்துக்களின் மூலம் அவதூறு பரப்பியதாக கிஷோர் கே சாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் கிஷோர் கே சாமி மீது குண்டர் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
எனவே ஜாமீன் குறித்து நீதிமன்றத்தில் கிஷோர் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. பிறகு சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்திலும் மனுத்தாக்கல் செய்திருந்தார் கிஷோர் ஆனால் அங்கு கிஷோர் மீதான குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்டது இதனை அடுத்து எப்போது கிஷோர் கே சாமி வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த சமயத்தில்,
தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் கிஷோர் கே சாமி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து இன்று வெளியே வந்த கிஷோர் தன்னுடைய முதல் பதிவாக எதனை குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த தருணத்தில்,
"ஜெயில் கம்பிகள் வழியே வெளியே வரக்கூடிய நிலையில் உள்ள என் மீது குண்டாஸ் போட்டு அழகு பார்த்த , கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத திராணியற்ற முதுகெலும்பில்லாத மு க ஸ்டாலின் தலைமையிலான கோமாளிகள் தர்பாருக்கு வணக்கமுங்க". இப்படி ஒரு பதிவை இட்டுள்ளார்.இதனை அவருடைய ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் வெகுவாக பகிர்ந்து ஆதரவு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
6 மாதம் சிறையில் இருந்தாலும் தன்னுடைய கொள்கையில் சமரசம் செய்யவில்லை என்பதை தனது முதல் சமூக வலைத்தள பதிவின் மூலம் நிரூபித்துள்ளார் கிஷோர் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள், இந்நிலையில் கிஷோர் பதிவிட்ட கருத்திற்கு எதிராக திமுக உடன் பிறப்புகள் அவரது பதிவிற்கு கீழே கடுமையாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தும் வருவது குறிப்பிடத்தக்கது.