கடந்த 3 தினங்களாக தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ள பொன்முடி சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு சென்னையில் உள்ள அமலாகத்துறை அலுவலகத்திற்கும் அமைச்சர் பொன்முடியை அழைத்து விசாரணை மேற்கொண்டதும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இந்த சோதனையில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 41.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. அதோடு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் 81.7 லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முக்கிய ஆவணங்கள் ஒவ்வொன்றுமே பொன்முடி இந்த ஆட்சியில் மேற்கொண்ட ஊழல் மற்றும் சில பண பரிவர்த்தனை நடவடிக்கைகளை உள்ளடக்கிய தகவல்களாக உள்ளது என்று அமலாக்கத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
அதோடு பெரிதும் அதிர்ச்சிகர தகவலாக வெளிநாட்டு பண நோட்டுகள் கட்டு கட்டாக பொன்முடியின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இந்திய மதிப்பில் அந்த கரன்சி நோட்டுகள் அனைத்தும் 13 லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படி ஈடி சோதனையில் இறங்கிய அடுத்த சில மணி நேரங்களில் அதிர்ச்சிகர ஆவணங்கள் மற்றும் ரொக்க பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது தமிழக மக்களிடையே திமுக மீது இருந்த மதிப்பை இன்னும் சேதப்படுத்தியது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 13 மணி நேர சோதனைக்கு பிறகு அமைச்சர் பொன்முடி நேரில் வந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக அமலாக்க துறையின் விசாரணையில் அமைச்சர் பொன்முடி இருந்து வருகிறார்.
இதற்கிடையில் மோசடி வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்க அமலாக்கத்துறை புழல் சிறைக்கு அவரை அழைத்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த ரெய்டின் மூலம் அமைச்சர் பொன்முடி தரப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் விவரமும் அமைச்சர் தேர்தலுக்கு முன்பு சமர்ப்பித்த சொத்துக்களின் விவரமும் வேறுபட்டு இருப்பதாக சமூக வலைதளத்தில் ஒரு தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அமைச்சர் பொன்முடி 2021 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக சமர்ப்பித்த சொத்துக்களின் விவர கணக்குப்படி கையிருப்பு பணம் 23 லட்சம் மற்றும் நிரந்தர வைப்பு நிதி 1.38 கோடி ஆகும். ஆனால் அமலாக்கத்துறை சோதனையில் இரண்டு தினங்களுக்கு முன்பு கைப்பற்றப்பட்ட கையிருப்பு பணம் 81.7 லட்சம் அதோடு முடக்கி வைத்த நிரந்தர வைப்பு நிதி 41 கோடி தேர்தலுக்கு முன்பு இருந்த சொத்துக்களின் மதிப்பை விட தேர்தலில் வெற்றி பெற்று இரண்டு ஆண்டுகளே ஆட்சி செய்து உள்ள நிலையில் சொத்துக்களின் மதிப்பு பல மடங்காக உயர்ந்துள்ளது எப்படி என்ற கேள்வி தற்போது சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
அதற்கான ஆதாரத்தையும் தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் இருந்து அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த பிராமண பத்திரத்தில் இருந்து எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு இணையவாசிகள் பலரால் பகிரப்பட்டு வருகிறது, இந்த தகவலும் அமலாக்க துறையின் பார்வையில் பட்டு எப்படி இந்த இரண்டு வருடத்தில் இவ்வளவு வித்தியாசத்தில் உங்களால் சொத்துக்கள் சேமிக்க முடிந்தது என்று அமலாக்கத்துறை பொன்முடியிடம் கிடுக்குப்பிடி கேள்விகளை கண்டிப்பாக கேட்கும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதோடு இதற்கு அடுத்தும் அதிரடி நடவடிக்கைகள் பொன்முடி மீது எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இப்படி வைப்புத் தொகையில் தேர்தலின் போது காட்டிய நிதியை விட தற்போது அதிகமாக பிடிபட்டிருப்பதால், அமைச்சர் பொன்முடிக்கு மேலும் சிக்கல் என தெரிகிறது.