ஈரோடு இடைத்தேர்தல் முடிந்த கையோடு பாஜக - அதிமுக கூட்டணி முடிவுக்கு வந்தவிட்டது என்ற பேச்சு அடிப்பட்டு வரும் நிலையில், மூத்த அரசியல் விமர்சகரான பாண்டே தெரிவித்துள்ள கருத்து பரபரப்பைக் கூட்டியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழக பாஜகவில் மாநில அளவில் முக்கிய பொறுப்புகளில் இருந்த நிர்வாகிகள் அதிமுகவிற்கு தாவியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கி வருகிறது. 2024 தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி நிலைக்காது... எனவே நாடும் நமதே 40 நமதே என்ற கனவில் ஆளும் திமுக அரசு மிதந்து கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் விதமாக மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான பாண்டே கூறியுள்ள கருத்து அதிமுக, பாஜக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல யூ-டியூப் சேனலில் பேசியுள்ள பாண்டே, என்ன தான் அதிமுக - பாஜக தலைவர்கள் வெளியில் சமாதானமாக சென்றதாக காட்டிக்கொண்டாலும் தொண்டர்கள் மட்டத்தில் நிலவும் மோதல்கள் நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அடித்துக்கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஒரே குரலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என விளக்கம் அளித்து வருகின்றனர். ஆனால் தொண்டர்கள் மட்டத்தில் எடப்பாடி உருவப்படத்தை பாஜகவினரும், அண்ணாமலையின் உருவப்படத்தை அதிமுகவினர் மாறி, மாறி கொழுத்தி சண்டையிட்டுக்கொண்டது இரு கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளதாக பாண்டே கூறியுள்ளார்.
2024ல் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலை தனது பழைய கூட்டணியுடன் சிந்தாமல், சிதறாமல் சந்திக்க திமுக தயாராகி வருகிறது. மற்றொருபுறம் அதிமுக - பாஜகவிற்கு இடையே வெடித்துள்ள மோதல் போக்கு தலைவர்கள் இடையே சமாதானம் அடைந்தாலும், தொண்டர்களிடையே நீருபூத்த நெருப்பாக புகைத்து கொண்டிருப்பதை பாண்டே சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் வர உள்ள தேர்தலில் அதிமுகவுக்கு பாஜகவினரும், பாஜகவினருக்கு அதிமுகவினரும் ஓட்டு போட மாட்டார்கள் எனக்கூறியுள்ள அவர், இதனால் அதிமுக - பாஜக கூட்டணி 15 இடங்களில் வெற்றி பெறுவதே பெரும் திண்டாட்டமாக இருக்கும் என்ற கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி இடையே விழுந்துள்ள விரிசலால், திமுக பெருவாரியான தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணித்துள்ள அவர், இனியாவது விழித்துக்கொள்ளாவிட்டால் பாஜகவின் வளர்ச்சியும், அதிமுகவின் வாக்கு வங்கியும் வர உள்ள தேர்தலில் பலத்த அடிவாங்கும் என எச்சரித்துள்ளார். தொண்டர்களுக்கு இடையே நிலவும் பூசலை சரி செய்ய இரு கட்சி தலைமையும் இப்போதிலிருந்தே முயற்சிப்பதும், தேர்தல் பணிக்காக இருகட்சிகளும் அடுத்தடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதுமே 2024ம் ஆண்டு தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு குறைந்தது 20 தொகுதிகளிலாவது வெற்றி வாய்ப்பை பெற்றுத் தர உதவும் என்ற அட்வைஸையும் பாண்டே கூறியிருக்கிறார்.
அதிமுக - பாஜக இடையே நிலவி வரும் பிரச்சனைகள் எக்காரணம் கொண்டும் திமுகவிற்கு சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பதை இலை மறைக்காயாக எடுத்துரைத்துள்ள பாண்டேவின் கருத்துக்கள் இரு கட்சி தலைமையையும் சிந்திக்க வைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...