இந்தியாவில் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்கள் நீட் தேர்வை எதிர்ப்பதை அரசியலாக செய்யாமல் இருந்து வரும் நிலையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து திமுக அரசு இதனை அரசியல் காரணங்களுக்காக எதிர்த்து வந்தது. குறிப்பாக நீட் தேர்வினால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்! நீட் தேர்வு என்பது படிக்கவே முடியாத ஒன்று! நீட் தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களின் கனவை சிதைக்கும் ஒரு தேர்வு! நீட் தேர்வு என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே ஆனது! நீட் தேர்வு என்பது லட்சங்களில் பணத்தை கொட்டி கோச்சிங் சென்டர் சென்று படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே ஆனது! நீட் தேர்வு என்பது ஏழை எளிய மாணவர்கள் படிக்க முடியாத தேர்வு என இப்படி பல்வேறு விதமான பயமுறுத்தும் பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் திமுக செய்து வந்தது.
இதன் காரணமாகவே திமுக அரசின் தேர்தல் அறிக்கையும் கூட நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதியும் கொடுக்கப்பட்டது, வாக்குறுதி கொடுத்தது மட்டுமல்லாமல் திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போது அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் எனில் அதற்கு ரகசியம் தெரியணும், அந்த ரகசியம் எனக்கு தெரியும் அது எப்படி என்று சொல்ல மாட்டேன்! வெட்கம் மானம் சூடு சொரணை இருந்தால் ரத்து செய்ய முடியும் என கூறி மக்களிடத்தில் கைதட்டுகள் வாங்கியது மட்டும் இல்லாமல் வாக்குகளை வாங்கினார். ஆட்சிக்கு வந்து 20 மாதமாகியும் நீட் தேர்வு ரத்து செய்ய முடியவில்லை என தற்போது ஆங்காங்கே கேள்வி எழுந்துள்ள இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிரதமரை சென்று நேரில் சென்று சந்தித்தார் உதயநிதி.
தனது திருமண நாள் கொண்டாட்டத்திற்கு சிங்கப்பூர் போய்விட்டு வந்த உதயநிதி நேராக தமிழகம் வராமல் டெல்லியில் இறங்கி அங்கிருந்து பிரதமரை பார்க்க நேரம் கேட்டு பின்னர் பிரதமரை சந்தித்து விட்டு வந்தார். சந்தித்து விட்டு அந்த பத்து நாட்களில் நீட் தேர்வு ரகசியம் எனக்கு தெரியும் நீட் தேர்வை எப்படி ரத்து செய்வோம் என பாருங்கள் என பேசி வந்த உதயநிதி தற்பொழுது நீட் குறித்து பல்டி அடிக்கும் விதமாக பேசியது அரசியல் ரீதியாக பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அரியலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். உதயநிதி ஸ்டாலின் இந்த அரியலூர் மருத்துவக் கல்லூரியில் நிகழ்ச்சியில் திறந்து வைத்து பேசிய பின் கூறியதாவது, 'எதிர்க்கட்சித் தலைவர் நீட் ரகசியம் பற்றி பேசுகிறார், அதில் எந்த ரகசியமும் இல்லை தைரியமாக எங்கள் கல்வி உரிமை பறிக்கப்படும் போது குரல் கொடுப்பதே ரகசியம். தொடர்ச்சியாக சட்டப்படி சட்ட போராட்டத்தை தொடர்வோம் இதுதான் ரகசியம்' என கூறினார். இதையா இவ்வளவு நாள் நீட் தேர்வு எதிர்ப்பு எனக் கூறி வந்தீர்கள் என தற்பொழுது மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைத்ததையும் பெருமையாக கூறிக் கொண்டார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால் வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் போதும் என ஜம்பமாக கூறிவிட்டு நீட் தேர்வு ரத்து செய்ய எந்த ரகசியமும் இல்லை என தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் பல்டி அடிக்கும் விதமாக பேசியது தற்போது அரசியல் ரீதியாக சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 10 நாளைக்கு முன்பு பிரதமரை சந்தித்து விட்டு வந்த பிறகு நீட் தேர்வில் எந்த ரகசியமும் இல்லை என உதயநிதி ஸ்டாலின் பின் வாங்கும் விதமாக பேசியுள்ளது தேர்தல் பிரச்சாரத்தின் போது செங்கல்லை தூக்கி காண்பித்த உதயநிதி ஸ்டாலினா இப்படி பேசுகிறார் என திமுகவினர் மத்தியிலேயே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.