தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதில் கொடுத்துள்ளார் அது பின்வருமாறு :-
தமிழகத்தின் சில அரசு பள்ளி மாணவர்கள், ஒழுக்கக்கேடான முறையில் நடந்துகொள்ளும் பல்வேறு காட்சிகளை சமூக ஊடகங்களின் மூலம் பார்க்க நேர்ந்தது. 'மூர்க்கமாக விளங்கும் மாணவர்களை, இரண்டாம் தாயாக விளங்கும் ஆசிரியர்கள் தான் திருத்த வேண்டும்' என்று கூறியுள்ளார் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்.
இதுபோன்ற ஒழுக்க கேடுகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளில் நடப்பது ஏன்? 'எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே' என்ற வரிகளில் உள்ள 'அன்னை', ஆசிரியர்கள் தான்.
மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் பயம் கலந்த மரியாதை இருந்த காலம் போய், இப்போது ஆசிரியர்களை அவமானப்படுத்துவது, தாக்குவது என்ற நிலைக்கு காரணம், தகுதியற்ற ஆசிரியர்களை உருவாக்கிய ஊழல் அரசு அமைப்புகளே. ஆசிரியர் பணிக்கு லஞ்சம், ஊழல் என்று எப்போது விலை பேசப்பட்டதோ அப்போதே ஒழுக்கமின்மையும், கட்டுப்பாடின்மையும், தரமற்ற கல்வியும் தமிழகத்தில் வளர்ந்து இன்று படர்நது பெருகிவிட்டது.
தரமற்ற கல்வி, ஒழுக்கமின்மை, கட்டுப்பாடில்லாத நடைமுறை ஆகியவை தான் பெற்றோர்களை அரசுப்பள்ளிகளை தவிர்த்து தனியார் பள்ளிகளுக்கு படையெடுக்க வைத்தது என்பதை அனைவரும் அறிவர். கடந்த 30 வருடங்களில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததோடு, அரசு பள்ளிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. அரசு பள்ளிகளின் தரத்தை குறைத்து தரமான கல்வி உரிமையை மக்களிடம் இருந்து பறித்து தனியாருக்கு தாரை வார்த்து, கல்வியை வியாபராமாக்கி மக்களிடம் கொள்ளையடிக்கும் கூடாரங்களாக தனியார் கல்வி நிறுவனங்களை உருவாக்கியது தான் 'திராவிட மாடல்'.
1980களில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கை இன்று பல்லாயிரக்கணக்கில் உயர்ந்துள்ளதற்கு காரணம் தமிழக அரசியல்வாதிகளே. அனுமதி அளிப்பதில் துவங்கி, அன்றாட செயல்பாடுகள் அனைத்திலும் ஊழல்,லஞ்சம் தலைவிரித்தாடும் கல்வி துறை அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் ஒரு அட்சய பாத்திரம்.
தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் பல லட்சக்கணக்காண கோடிகளை அள்ளிக்குவிக்கும் தொழிற்சாலைகளே. மருத்துவ படிப்பு, பொறியியல் படிப்பு உட்பட அனைத்து படிப்புக்கும் அதிக செலவு. தங்கள் குழந்தைகளின் படிப்பிற்காக பணம் சேமிக்கவே ஓடாக தேய்ந்து தங்கள் வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கும் பெற்றோர்கள் லட்சக்கணக்கானோர். சமூக நீதியை நிலைநாட்டியதாக மார்தட்டிக்கொண்டு, அடித்தட்டு மக்களுக்கான அடிப்படை கல்வியை பெறுவதற்கு கூட பணம் பிடுங்கும் சமூக அநீதியே திராவிட மாடல்.
ஒழுக்கக்கேடு மாணவர்களிடத்தில் இல்லை. ஒழுக்கத்தை முறைப்படுத்தாத ஆசிரியர்களிடத்தில் தான், ஆசிரியர்களை முறைப்படுத்த முடியாத நிர்வாகத்தில் தான் என்பதே கசப்பான உண்மை. அந்த நிர்வாகம் மாநில அரசுகள் தான் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அரசுகளின் நிலைக்கு காரணம் ஊழல் தான் என்பது வெளிப்படையான உண்மை. தனியார் பள்ளிகளோ, கல்லூரிகளோ வேண்டாம் என்று கூறவில்லை.
ஆனால், தரமான, தகுதியான, முறையான கல்வியை அரசு பள்ளிகள் கொடுக்க மறுத்துவிட்டன என்பதே நம் ஆதங்கம். மாணவர்களின் சீர்கேட்டிற்கு காரணம் 'நமக்கு நாமே' என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இது தான் திராவிட மாடல் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
மீண்டும் சொல்கிறேன். 'தேசிய கல்வி கொள்கை' எதை சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. எப்படி சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றே சொல்கிறது. அதனால் தான் அதை எதிர்க்கிறது திராவிட மாடல். திருந்த வேண்டியது மாணவர்கள் அல்ல. திருத்தப்பட வேண்டியது நம் ஊழல் அமைப்பும், அரசியல்வாதிகளும் தான்என குறிப்பிட்டுள்ளார் நாராயணன் திருப்பதி.