அதிமுக மற்ற கட்சிகளில் இருந்து பெரிய தொகையை கொடுத்து தான் ஆட்களை இழுக்கிறது என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சமயத்தில் இருந்து அதிமுக பாஜக இடையிலான விரிசல் அதிகமாகி உள்ளது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்த காரணம் பின்னணியில் பாஜக தான் என குற்றம் சுமத்தி வந்தது. இந்த நிலையில் பாஜக தரப்பில் நீங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அதிமுக தலைமையிடம் கூறினாலும், இல்லை இல்லை ஓபிஎஸ் தனியாக வேட்பாளர் அறிவித்ததற்கு பின்னணியில் பாஜக தான் உள்ளது என்கிற ரீதியில் குற்றம் சுமத்தி வந்தது இபிஎஸ் தரப்பு. இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகளில் அதிமுக வேட்பாளர் தோல்வியை தழுவினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்னும் ஒற்றுமையாக இருந்து வேலை செய்திருந்தால் கண்டிப்பாக வெற்றியை பெற்றிருக்கலாம் என கூறினார். இவ்வாறு இரு தரப்புக்கும் இடையில் மெல்ல உரசல் ஏற்பட்ட நிலையில் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிடிஆர்.நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். அதிமுகவில் அவர் சேர்ந்ததை தொடர்ந்து பாஜகவில் உள்ள மாநில நிர்வாகிகள் சிலரை அழைத்துக் கொண்டு அதிமுகவிற்கு சென்றார்.
சிடிஆர்.நிர்மல் குமார் சென்று இணைந்த பிறகு அதன் தொடர்ச்சியாக எப்படி கூட்டணி கட்சியில் இருந்து வரும் ஒருவரை நீங்கள் உங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என பாஜகவில் சிலர் குறை கூறி எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எதிர்த்தனர்.
அதற்கு பதிலாக அண்ணாமலையின் உருவ படத்தை அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் அதிமுகவினர் எரித்தனர். இப்படி இருதரப்பிற்கும் பனிப்போர் வெடித்துள்ள நிலையில் தற்போது அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. பாஜக ஆட்களை அதிக தொகை கொடுத்து தான் அதிமுக கட்சிக்கு எடுக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக சிடிஆர்.நிர்மல் குமார் 10 கோடிக்கு அதிமுகவிடம் விலை போனார் என பகீர் தகவல் கிடைத்துள்ளது.
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா சிவா தனியார் யூ ட்யூப் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளிக்கும் போது இந்த பரபர தகவலை கூறியுள்ளார். அவர் கூறியதாவது. 'அதிமுகவில் என்னையும் தான் வரச் சொல்லி கேட்டார்கள் ஆனால் நான் செல்லவில்லை. அதிமுகவில் அவர்களுக்கு குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் ஒரு பெரிய தலைவர் என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார், அதன் காரணமாக தற்போது மத்த கட்சியில் இருந்து ஆட்களை இழுத்து வந்து தனக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது என காட்டிக்கொள்ள பார்க்கிறார். சொந்த கட்சியில் அதிருப்தியாளர்கள் அதிகமாக இருக்கும் நிலையில் மற்ற கட்சியில் இருந்து குறிப்பாக பாஜகவில் இருந்து ஆட்களை எடுத்து வருவதன் மூலம் அண்ணாமலைக்கு மறைமுக செய்தியை சொல்ல பார்க்கிறார்.
பாஜக தேசிய கட்சி, பெரிய கட்சி அதிலிருந்து ஆட்களை இழுத்து வருவதன் மூலம் அவர் பாஜகவிற்கு அதிமுக என்றால் எடப்பாடி பழனிச்சாமி தான் என பதிவேற்ற நினைக்கிறார். இது மட்டும் இல்லாமல் அவர் திமுகவில் உள்ள ஸ்டாலினை எதிரியாக நினைப்பதை விட அவர் அதிகமாக எதிர்க்க நினைப்பது அமைச்சர் செந்தில் பாலாஜியை, கடந்த ஈரோடு இடைத்தேர்தல் என்பது செந்தில் பாலாஜி பெற்ற வெற்றிதானே தவிர அதை திமுக பெற்ற வெற்றி கிடையாது என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்.
ஏனெனில் அங்கு வேலை செய்தது, செலவழித்தது என அனைத்தையும் செய்தது அமைச்சர் செந்தில் பாலாஜி மட்டுமே ஆதனால் அந்த வெற்றியை செந்தில் பாலாஜியின் வெற்றியாகத்தான் பார்க்கிறாரோ தவிர அதை திமுக வெற்றியாக பார்க்கவில்லை. எனவே எடப்பாடி தனது இருப்பை கட்டிக்கொள்ள பாஜகவில் இருந்து ஆட்களை பணம் கொடுத்து இழுக்கிறார்' என திருச்சி சூர்யா சிவா கூறிய விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக தரப்பில் இருந்து மறுப்போ எந்த ஒரு பதிலோ வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.