ஜோசியம் கடவுள் நம்பிக்கை போன்றவற்றை தினம் தோறும் கிண்டல் செய்யும் விதமாக பேசி வரும் கொள்கையை கொண்ட சுப.வீரபாண்டியன் பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என ஜோசியம் தெரிவித்து இருப்பது தற்போது இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்ரமணியம் மற்றும் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரப்பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய சுப.வீரப்பாண்டியன் இந்தியா முன்னேற வேண்டும் என்றால் எதிர்கட்சிகள் அனைவரும் ஒரே அணியில் இருக்க வேண்டும் எனவும் ஆரம்பத்தில் காங்கிரஸை எதிர்த்து தான் அரசியல் செய்து வந்தோம் ஆனால் தற்போது மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்த்து போட்டியிட கூடிய சக்தி காங்கிரஸ் கட்சியிடம் தான் உள்ளது என தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் எந்த மாநிலமும் இருக்காது அனைத்தையும் பிரித்து விடுவார்கள் என எச்சரித்தார்.
2024-ல் நடக்க கூடிய தேர்தல் யார் பிரதமராக வரவேண்டும் என்பதற்காக அல்ல யார் வர கூடாது என்பதற்கான தேர்தல் என்று கூறிய சுபவீ ஒரு கட்டத்தில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று விட்டால் இனி தேர்தலே இருக்காது எனவும் ஒரே போடாக ஜோசியம் கூறியுள்ளார் சுபவீ.
மேலும் வழக்கம் போல் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் சிறுபான்மை மக்களின் நிலை என்ன என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார் சுபவீ. வழக்கமாக ஜோசியர்களை கேலி செய்யும் விதமாக பேசும் சுபவீ, தற்போது தானே ஜோசியராக மாறி கருத்து தெரிவித்து இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.