24 special

முதல்வர் ஸ்டாலின் மற்றும் தனது அண்ணன் மு.க.அழகிரி இடையே மீண்டும் விஸ்வரூபம் !

stalin , alagiri
stalin , alagiri

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு துணையாக திமுக கட்சியை அவரது இரண்டு மகன்களும் கவனித்து வந்தனர், ஒருவர் மூத்தவர் மு.க.அழகிரி, மற்றொருவர் மு.க.ஸ்டாலின். 2006ம் ஆண்டு முதல் 2011 வரை திமுக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் பதவியும், மு.க.அழகிரி தென் மண்டல அமைப்புச் செயலாளார் பதவியும் வகித்து வந்தனர்.


அதனை தொடர்ந்து மு.க.அழகிரி தனியாக அரசியல் செய்கிறார், மு.க.ஸ்டாலின் திமுகவில் கோலோச்சி வருவதை தடுக்கிறார் என்ற நோக்கத்துடன் அவரை தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது திமுக தலைமை. இதன் பின்னணியில் அரசியல் ரீதியான காரணங்கள் கூறப்பட்டாலும் முற்றிலும் குடும்ப விவகாரமே இதன் பின்னணியில் இருந்தது. 

அதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.கருணாநிதி மறைந்த பிறகு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது, அப்பொழுது நடந்த சில அரசியல் காரணங்களால் மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் பதவியை கைப்பற்றினார்! மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் தனியாக அரசியல் செய்தார், ஒரு கட்டத்தில் மு.க.அழகிரி தீவிர அரசியலில் இருந்தும் ஒதுங்கினார், மு.க.ஸ்டாலின் கை ஓங்கியது. திமுக தலைவர் பதவி மு.க.ஸ்டாலின் கைக்கு வந்த காரணத்தினால் 2021 திமுக தரப்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின்.

பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரானார். அதன்பின்னர் அழகிரி சுத்தமாக அரசியல் இருந்து ஒதுங்கினார் அதன் பின்னர் அரசியல் ரீதியாக கருத்துக்களை கூட கூறுவதை மு.க.அழகிரி தவிர்த்துக்கொண்டார். அதன் பிறகு மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி சந்திப்பு நடைபெறவே இல்லை, இந்த நிலையில் சமீபத்தில் அமைச்சரான பின் உதயநிதி மதுரைக்கு முதன் முறையாக அரசு காரியமாக பயணம் செய்தார். அந்த பயணத்தின் பொழுது தனது பெரியப்பா மு.க.அழகிரியை நேரில் சந்தித்து விட்டு வந்தார். அதனை தொடர்ந்து கள ஆய்வுக்காக முதல்வர் ஸ்டாலின் மதுரை செல்லும் பொழுது மு.க.அழகிரியை சந்திப்பார் என அழகிரி தரப்பில் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. 

முதல்வர் ஸ்டாலின் மண்டல ஆய்வுக் கூட்டம் மற்றும் அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக மதுரைக்கு கடந்த 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்றார். அவர் தொடர்ந்து 2 நாட்கள் மதுரையில் இருந்தார். முதல்வர் ஸ்டாலின் வருகைக்கான ஏற்பாடுகளில் மாவட்ட அதிகாரிகள் முதல் மாநகராட்சி அதிகாரிகள் வரை விறுவிறுவென வேலை பார்த்தனர். 

மதுரைக்கு வரும் முதல்வர் தனது அண்ணன் மு.க.அழகிரி வீட்டுக்கும் செல்லக்கூடும் என்ற தகவலால், அழகிரி குடியிருக்கும் சத்யசாய் நகரைச் சுத்தமாக துடைத்து எடுத்திருந்தது மாநகராட்சி நிர்வாகம். மாநகராட்சியின் வேகத்தைப் பார்த்து மு.க.அழகிரி தரப்பு முதல்வரை வரவேற்க ஆவலாகக் காத்திருந்தனர். இரண்டு நாள் பயணத்தில் ஒரு மணி நேரமாவது தனது அண்ணனை பார்க்க நேரம் ஒதுக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

திட்டப்படி காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு சென்றார் முதல்வர் ஸ்டாலின். மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அடுத்தபடியாக தம்பி தன்னை வந்து பார்ப்பார் என மு.க.அழகிரி எதிர்பார்த்த சமயம் அவரை பார்க்காமல் முதல்வரின் கார் நேராக கன்னியாகுமரியை நோக்கிப் பறந்துவிட்டது. 

இதில் அழகிரியின் ஆதரவாளர்கள் கடும் அப்செட். குறிப்பாக மு.க.அழகிரியின் குடும்பம் ரொம்பவே அப்செட், இப்படி தனது தம்பி முதல்வர் ஸ்டாலின் வருவார் என அழகிரி குடும்பம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது முதல்வர் ஸ்டாலின் அலட்சியமாக அவரை பார்க்காமலேயே மதுரையில் இருந்து பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். இதனால் அழகிரி தரப்பு பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளது.

இவ்வளவு தூரம் மதுரை வந்து விட்டு முதல்வர் தன்னை பார்க்காமல் சென்றது அழகிரியை அதிகமாக கோபப்படுத்தியுள்ளது என தகவல் தெரிவிக்கின்றன. இதனால் மீண்டும் திமுக தலைமை குடும்பத்தில் விரிசல்கள் அதிகமாக உள்ளதால் வரும் காலங்களில் இது அரசியலில் எதிரொளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.