நேற்றைய தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டமும் கோவை மாவட்டம் மேட்டப்பாளையத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா தலைமையில் நடைபெற்ற பொது கூட்டமும் தெளிவாக இரண்டு செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்த்து இருக்கின்றன.
எடப்பாடி அணியினர் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய மூத்த தலைவர்கள் தேவையில்லாமல் யாரும் கூட்டணி குறித்து விமர்சனம் செய்ய வேண்டாம் என நேரடியாக தெரிவித்தனர், எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த சிவி சண்முகம், ஜெயக்குமார், முன்னாள் எம்.பி ஹரி என பலரும் பாஜக கூட்டணி குறித்து மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர்.
இது புயலை கிளப்ப பாஜகவினரும் நேரடியாக விமர்சனம் செய்ய தொடங்கினர், இந்த சூழலில் பாஜக குறித்து யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் எனவும் கூட்டணி குறித்து தலைவர்கள் முடிவு செய்வோம் என மாவட்ட செயலாளர்களுக்கு கூறவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த கூட்டத்தில் இறுதியாக பேசிய எடப்பாடி பழனிசாமி கட்சி பணிகளை செய்யுங்கள், பூத் கமிட்டியை பல படுத்துங்கள் யாரும் கூட்டணி குறித்து பேசவேண்டாம், அதனை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என கூறியவர், OPS குறித்த விமர்சனத்தையும் தவிர்க்க கூறியதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இது ஒருபுறம் என்றால் அதே நாளில் குறிப்பாக பாஜக தேசிய தலைவர் நட்டா மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருவரும் தெரிவித்த கருத்துக்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பை சற்று அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
கூட்டத்தில் பேசிய நட்டா தமிழக நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்லாமல் சட்டமன்ற தேர்தலிலும் மாற்றம் வரும் என தெரிவித்து இருக்கிறார் இதன் மூலம் சட்டமன்ற தேர்தலில் பாஜக முழு கவனம் செலுத்துவது என்பது ஒரு சிக்னல் என்றால் யாரையும் எதிர்பார்க்காமல் பாஜக தனித்து களம் இறங்கவும் தயார் என்ற சூழலை உண்டாக்கி இருக்கிறது.
அதை உறுதி படுத்துவது போல் அண்ணாமலை 2024 தேர்தலில் பாஜக சார்பில் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்கு செல்வார்கள் என தெரிவித்து இருப்பது பாஜக அதிக இடங்களில் போட்டியிடும் என்ற நேரடியான கருத்தை வலுப்படுத்துவதாக இருக்கிறது அதிமுக இரண்டு அணிகளும் ஒன்று இணையாத பட்சத்தில் பாஜக தனித்து கூட்டணி களத்தை அமைத்து தனியாக அதன் தலைமையில் 24 சிறிய கட்சிகளை இணைத்து தாமரை சின்னத்தில் அனைவரையும் போட்டியிட வைக்க முடிவு எடுத்து இருக்கிறதாம்.
முன்பு எல்லாம் கூட்டணி கணக்கை வைத்து பாஜகவிடம் அதிமுக கண் கட்டி வித்தை காட்டிவந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலிலும் அது போல் நிகழ கூடாது என முன் கூட்டியே முந்தி கொண்டு தேர்தல் வியூகத்தை வகுத்து இருக்கிறது பாஜக என்பது அக்கட்சியின் நேற்றை பொது கூட்டம் மூலம் முடிவாகி இருக்கிறது.
கோவை நீலகிரி தொகுதியில் கூட்டணியோ தனித்தோ எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என நேரடியாக பாஜக களம் இறங்கி இருப்பது கோவை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் மூலம் முக்கிய திருப்பமாக சொல்லாமல் சொல்லியுள்ளது பாஜக என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.