Tamilnadu

ஸ்டாலினை தொடர்ந்து தமிழக பாஜகவினருக்கு அண்ணாமலை அதிரடி கடிதம் தீயாக பரவும் ரிப்போர்ட்

Annamalai Letter
Annamalai Letter

தமிழக பாஜக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில் தான் அரசியலுக்கு வந்த நோக்கம், தனது இலக்கு என்ன, ஏன் சிலருக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை என்ற பல காரணங்களை சுட்டிக்காட்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அது பின்வருமாறு  : -


பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக்  குடும்பத்தின் சொந்தங்களே அனைவருக்கும்  வணக்கம்.இனி முடிந்தவரை, தினமும் உங்களிடம் பேசுகிறேன். தினம் ஒரு கடிதம். தினம் ஒரு தகவல். எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். ஆனா நாம பேசுறோம்."நான்" என்ற தனிச்சொல் அகந்தையின் வெளிப்பாடு...ஆனா என் உளப்பாடுகளை சொல்லத்தான் இதை இங்கே 'நான்' பயன்படுத்துகிறேன்.

என்னைப் பற்றி அறியாதவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது,  நான் இந்தக் கட்சியின் மாநில தலைவர் என்ற மமதைக்குரிய எண்ணம் எனக்குத் தோன்றாது. என்னிலும் வயது அனுபவம் ஆகியவற்றில் மூத்த பல தலைவர்கள் இங்கு இருக்கும் போது இந்தப் பணி எனக்கு கூடுதல் பொறுப்புணர்வைத் தருகிறதே தவிர ஆணவத்தை ஒருபோதும் தராது.

காரணம் என் நோக்கம் இதுவல்ல. பெரிதினும் பெரிது கேள் என்று ஔவை மூதாட்டி சொன்னபடி நான் நினைப்பது மொத்த இந்தியாவிலும் தாமரைக் காட்சி பாஜக ஆட்சி.  ஆக என்னைப் பெரிதாக எண்ணி தன்னையே வியந்து கொள்பவன் உங்க அண்ணாமலை இல்லை.நான் பல மாற்றங்களைத் தாண்டி இங்கே பயணித்துக் கொண்டிருக்கிறேன். கர்நாடக மாநிலத்தில் கடமை உணர்வுமிக்க கண்டிப்பான காவல் அதிகாரியாக வாழ்வைத் தொடங்கிய அண்ணாமலை ஆகிய நான், நம் திருவள்ளுவர் சொல்லித் தந்த கனிவான அணுகுமுறையை, அதாவது ”கடிதோச்சி மெல்ல எரியும்” அன்பான கண்ணியமும் பேணுகிறேன்.குடும்பம், வணிகம், தொழில் இதையெல்லாம் விட்டுவிட்டு தொண்டு செய்ய முன்வந்திருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் நான் மதிக்கிறேன்.

நாம எல்லாரும் ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும்  நம்ம கட்சியின் சின்னம் தாமரை, தாமரை என்பது பல அழகிய இதழ்களின் கூட்டணி. அதிலே நானும் ஓரிடத்தில். அதிலே ஒரு இதழ் மட்டும்,  நான் தான் அழகு என்று எண்ணி வியந்து தனியே வந்தால் அந்த இதழ் ஒருபோதும் தாமரையாகாது, கீழே விழுந்த குப்பை ஆகிவிடும். நாம எல்லோரும் ஒரே குழுவாக அடுக்காக, தாமரைபோல, ஒன்றாக கூடி இருப்பது தான் சிறப்பு. இதிலே பெரியது, சிறியது என்ற பேதம் இல்லை.

அந்தத் தாமரையை தாங்கும் தண்டாக நம் கட்சியும் அதன் மூத்த தலைவர்களும் இருக்கிறார்கள். நம்ம கட்சியை மிகக் கடினமான பாதைகளை கடந்து வந்து இருக்கு  எந்தவித அதிகாரமும் பின்புலமும் இல்லாமல், மக்களையும் நம் சித்தாந்தங்களையும் மட்டும் நம்பி, பல மூத்த தலைவர்களின் தாக்கத்தால், தியாகத்தால், இத்தனை நாள் நம்ம கட்சி வெற்றிகரமாக வளர்ந்து வந்து இருக்கு. இப்ப நமக்கு 4 எம்எல்ஏக்கள் வந்திருக்காங்க இனி அது நாற்பது ஆகலாம்  100 ஆகலாம் 150 ஆகலாம்.

ரொம்ப இல்லைங்க எனக்கு சின்ன பேராசை ஜஸ்ட் ஒரு நூத்தம்பது சீட்டை பாரதிய ஜனதா கட்சி ஜெயிக்கணும்.! நாம ஒரு நூத்தம்பது பாஜக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் உட்காரணும்-ங்க இதை நான் செய்ய முடியுமான்னு எனக்கு தெரியாதுங்க ... ஆனா நாம கண்டிப்பா செய்ய முடியும். ஆமாங்க வள்ளுவரே சொல்லிட்டார் முடியும்னு ”ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்”. அதாவது, மனம் தளராதும் தாமதிக்காதும் விடாமுயற்சி செய்பவர், தமக்குத் தடையாக இருக்கும் விதியையும் தோல்வியுறச் செய்வர்.

என்னைத் தாமரை படையின் தலைமை சிப்பாயாகத்தான் நினைக்கிறேன். தனி ஒருவனாக நான் போர் செய்ய முடியாது. போர் வியூகங்களுக்கு தேவையான நபர்களை நான் என்னுடன் இணைத்து கொண்டு போரைத் தொடங்கி இருக்கிறேன். என்னால தேர்வு செய்யப்படுபவர்கள் மட்டும்தான் திறமைசாலிகளா? அப்ப மத்தவங்க எல்லாம் திறமைசாலி இல்லையா? அப்படின்னு ஒரு கேள்வி வரும். அது நல்ல கேள்வி. என் பதில் அனைவரும் திறமைசாலிகளே. சில திறமைசாலிகள், வாய்ப்பு இல்லாமல் விடப்பட்டு இருக்கலாம்.

எல்லாத்துக்குமே  வாய்ப்புத் தர முடியாது.ஒரு கிரிக்கெட் டீமில் எடுத்துக்கங்க. அன்றைய விளையாட்டுக்கு தகுந்த மாதிரி பதினோரு பேருக்கு தான் வாய்ப்பு தர முடியும். அதுபோல கட்சியிலும் துணைத் தலைவர்கள் பொதுச் செயலாளர்கள் மாநில செயலாளர் என்று ஒரு மரபு உண்டு அந்த எண்ணிக்கைக்கு மேலாக கூடுதலா பொறுப்புகள் போட முடியாது.

ஆனால்  நம் பாஜக என்றுமே கைவிட்டதில்லை, உங்களுடைய பணிகளுக்கும் தொண்டுகளுக்கும், ஏற்ற தகுதியான பதவிகள் அனைவருக்கும் கிடைக்கும்.ஐயோ இவர நாம பொறுப்புக் குழுவினரில் சேர்க்காம விட்டுட்டோமேன்னு கட்சியை  நினைக்க வைக்கலாம். எங்கள் பகுதியைச் சேர்ந்து நபருக்கு ஏன் பொறுப்பு தரலைன்னு? உங்க பகுதி மக்கள் கேட்கணும் அப்படி நீங்கள் வேலை  செய்யுங்க.

மற்றபடி ஒரு சாமானியனான, என்ன நம்பி மாநிலத்திற்கு சேவை செய்யக் கூடிய வாய்ப்பை மத்திய தலைமை வழங்கியிருக்கிறது. மகிழ்ச்சியுடன், நன்றியுடன் நான் ஏற்றுக்கொண்டேன். அதை உங்களுடைய ஆதரவு ஒத்துழைப்பு இல்லாமல் என்னால செய்ய முடியாது.

நீங்க யாரும் கட்சி பணிகளுக்காக என்னை எங்க வேணா கூப்பிடலாம் கையோடு கை கோர்த்து தோளோடு தோள் நின்று கட்சி வளர்ச்சிக்காக மக்கள் சேவைக்காக செயல்பட எப்போவுமே நான் தயாராக இருக்கிறேன்.தலைவரே, இமயமே, சிங்கமே, ஆட்டுக்குட்டியே என்றெல்லாம் அழைக்கும் புகழ மொழிகள் பேசும் புரட்டும் சொல்லாட்சி சோழர்களாக இல்லாமல் நம்ம சொல்-ஆட்சி புரிய வைக்கும் தோழர்களாக மாறுங்கள்... நான் சிங்கமும் இல்ல  ஆட்டுக்குட்டியும் இல்ல  நான் அண்ணாமலை என்னை நீங்க பெயர் சொல்லி அண்ணா போலாமா? ன்னு  கேட்டா,உங்க கூட சேர்ந்து கட்சிப் பணி செய்ய  நான் ரெடி நீங்க ரெடியா...? என கூறி தனது கடிதத்தை முடிவு செய்துள்ளார்.