கர்நாடகா : இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தல் அடுத்தமாதம் நடைபெறவுள்ளநிலையில் ஆளும் தரப்பில் திரௌபதி முர்மு வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பெங்களூருவில் யஷ்வந்த் சின்ஹா கூறிய கருத்துக்கு பிஜேபி பதிலடி கொடுத்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா பெங்களூர் வந்திருந்தார். அங்கு நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட சின்ஹா " பிஜேபி தலைமையிலான அரசு அமலாக்கத்துறை புலனாய்வுத்துறை வருமானவரித்துறை போன்ற அமைப்புகளை அதிகார துஷ்பிரயோகத்தால் தவறாக வழிநடத்திவருகிறது.
தனது அரசியல் எதிரிகளை பழிவாங்குகிறது. ஜனதிபதியை ராஷ்டிரபதி ரப்பர்ஸ்டாம்ப்பாக மட்டுமே பயன்படுத்திவருகிறது" என அந்த கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் பேசியதாக தெரிகிறது. அதை தொடர்ந்து நேற்று பிஜேபி தேசிய பொது செயலாளர் சிடி ரவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் யஷ்வந்த் சின்ஹா கூறிய கருத்துக்களை கிண்டலடித்தார்.
" நேர்மையாக இருப்பவர்களை அமலாக்கத்துறையோ அல்லது வருமானவரித்துறையோ எதுவும் செய்ய முடியாது. ஆனால் ஊழல் செய்பவர்கள் நிதிமோசடியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாது. நேர்மையானவர்கள் கவலைப்பட தேவையில்லை. ஆனால் ஊழல் செய்தவர்கள் நிச்சயமாக கவலைப்படவேண்டும்.
"ஆதிவாசி சமூகத்திலிருந்து வந்த திரௌபதி முர்மு எனும் பெண் ஜார்கண்ட் ஆளுநராக அமைச்சராக ஒடிசாவில் சட்டமன்ற உறுப்பினராக ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் விரிவுரையாளராக தனது திறமையை நிரூபித்துள்ளார். திரௌபதி குறித்து பேசிய அவரின் கருத்து அவரது மோசமான மனநிலைமையையே வெளிக்காட்டுகிறது.
ஆதிவாசிப்பெண் அந்த பதவிக்கு தகுதியற்றவர் என்ற எண்ணம் ஒருவரது மோசமான மனநிலையை சித்தரிக்கிறது. நிச்சயமாக நம் நாட்டிற்கு ரப்பர்ஸ்டம்ப் ராஷ்டிரபதி தேவையில்லை. அதேபோல தனது திறமையை நிரூபித்துள்ள ஆதிவாசிப்பெண்ணுக்கு எதிரான பொய்பிரச்சாரத்தில் ஈடுபடும் மனநிலை நமது நாட்டிற்கு ஆபத்தானது .
திரௌபதி அவர்கள் ஜூலை 10 கர்நாடகாவில் வாக்கு சேகரிக்க உள்ளார். தற்போதைய எண்ணிக்கையின் அடிப்படையில் ஜூலை 18 அன்று நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெறுவது உறுதி" என பிஜேபி தலைவர் சிடி.ரவி தெரிவித்துள்ளார்.