பஞ்சாப் : தேர்தல் நேரத்தில் மக்களுக்கு வாக்குறுதிகளை மட்டும் வாரிவழங்குவதில் வள்ளலாக திகழ்பவர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். இவரது வாக்குறுதிகள் இலவசமின்சாரம் வீட்டில் ஒருவருக்கு அரசுவேலை விவசாயிகளுக்கு மின்சலுகை உட்பட பல அவரது ஒவ்வொரு மாநில தேர்தல் அறிக்கையிலும் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.
இந்நிலையில் பஞ்சாப்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியால் தற்போது வசமாய் சிக்கியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். கடந்த வருடம் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் டெல்லி செங்கோட்டை பகுதியில் போராட்டக்காரர்களுக்கு அனுமதி கொடுத்ததுடன் டெண்ட் போட்டு தங்கிய போராட்டக்காரர்களுக்கு மின்சார வசதி உட்பட பல சலுகைகளை வழங்கினார் கெஜ்ரிவால். இது தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.
நேற்று விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் ஜகஜித் சிங் தலேவால் விவசாயிகளை சண்டிகார் மொஹாலி பகுதியில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பெட்சீட், தலையணை, டெண்ட், மின்விசிறி, மசாஜ் மெஷின், தண்ணீர் வண்டி , கேஸ் சிலிண்டர் உட்பட பல உபகரணங்களுடன் போராட்டத்தில் குதித்தனர். அவர்களை தடுக்க கண்ணீர்ப்புகை குண்டு வண்டி, பீரங்கி தடுப்புவேலி சகிதம் போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஜகஜித் சிங் தலேவால் " கோதுமைக்கான போனஸ் உடனடியாக வழங்கப்படவேண்டும். இந்த வெயிலில் விளைச்சல் பாதிக்கபட்டுள்ளது. ஒவ்வொரு குவிண்டால் கோதுமைக்கும் 500 ரூபாய் போனஸ் வழங்க வேண்டும். பாசுமதி ரக அரிசிக்கு குறைந்தபட்ச நிர்ணயவிலை 4500 நிர்ணயிக்க வேண்டும்.
கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து கடன்பெற்ற விவசாயிகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரண்ட்டை உடனடியாக ரத்துசெய்யவேண்டும். ரூபாய் இரண்டுலட்சம் வரையிலான கடனை தள்ளுபடி செய்யவேண்டும். பஞ்சாப் முதல்வர் மான் எங்களை சந்தித்து உறுதியளிக்கவேண்டும். இல்லையெனில் செய் அல்லது செத்துமடி என்ற கொலைகளின் அடிப்படையில் எங்கள் போராட்டம் இருக்கும்.
இதுவரை போராட்டக்களத்திற்கு 25 சதவிகித விவசாயிகளே வந்துள்ளார்கள்.வியாழன் வெள்ளிக்கிழமைகளில் இன்னும் அதிகம் பேர் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள். தலைநகர் சண்டிகரில் எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் நடைபெறும்" என தெரிவித்துள்ளார். இந்நிலையில் சண்டிகார் எல்லையில் போலீசார் ஆயிரக்கணக்கில் தடுப்பு சாதனங்களுடன் தயார் நிலையில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை பஞ்சாப் முதல்வர் போராட்டக்காரர்களை சந்தித்தார். அவர்களது கோரிக்கைகளை அரசாங்கம் விரைவில் நிறைவேற்றும் என உறுதியளித்தார். அதையடுத்து போராட்டம் கைவிடப்படுவதாக ஜகஜித் சிங் அறிவித்துள்ளார்.