24 special

அழகிரியை அலறவிட்ட சீனியர்கள்; காங்கிரஸ் கட்சிக்குள் உச்சகட்ட உள்குத்து!

Alagiri
Alagiri

அரசியலில் இதெல்லாம் சாதாரணப்பா’ என்பது போல் காங்கிரஸ் என்றாலே கோஷ்டி பூசல், உள்கட்சி மோதல் போன்றவை சர்வ சாதாரணமானது. இருப்பினும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் அடித்துக்கொள்வது, மூத்த நிர்வாகிகள் முன்பே சட்டையைக் கிழித்துக்கொண்டு சண்டை போடுவது போன்ற விஷயங்கள் அவ்வப்போது அரங்கேறுவது உண்டு. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் இடையே வெடிக்கும் கோஷ்டிபூசல்களுக்கு பஞ்சாயத்து செய்வதே தலைமையின் முக்கிய வேலையாக இருந்து வருகிறது.  அதேபோல் பதவிக்காக காங்கிரஸ் கட்சியில் நடக்கும் உள்குத்துக்களை சொல்லி மாளாது. இப்போது அப்படிப்பட்ட சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி. 


கடந்த 2019ம் ஆண்டு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி பொறுப்பேற்றார்.  இவர் பதவியேற்ற மூன்றரை ஆண்டுகளில் பெரிய அளவிலான கோஷ்டி பூசல்கள் இல்லாமல் தமிழக காங்கிரஸ் அமைதியாக நடந்து கொண்டிருந்த நிலையில், தற்போது அழகிரி தலைக்கே ஆபத்து வந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மூன்றை ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் கூட தொகுதி பங்கீடு முதல் சீட் ஒதுக்கீடு வரை எந்தவிதமான பிரச்சனைகளும் இன்றி கே.எஸ். அழகிரி ஸ்மூத்தாக முடித்து வைத்தார். ஆனால் “திமுக சொல்வதற்கு எல்லாம் அப்படியே தலையாட்டி பொம்மை போல் ஒப்புக்கொள்கிறார்... நாம் தேசிய கட்சி என்பதை மறந்துவிட்டாரா?” என காங்கிரஸ் தொண்டர்கள் கதறிக்கொண்டிருந்தனர். 

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், கே.எஸ். அழகிரியை பதவியை விட்டு தூக்கியே ஆக வேண்டும் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளது உச்சகட்ட உட்கட்சி பூசலை உருவாக்கியுள்ளது. கடந்த 15ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் தான் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை மாற்ற வேண்டும் என நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்டுள்ளனர். இதனையடுத்து தடியடி, மண்டை உடைப்பு, போலீஸ் குவிப்பு என சத்தியமூர்த்தி பவனே போர்க்களமாக மாறியது. 

இந்த பிரச்சனைக்கு காரணமான ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி மாநில பொறுப்பாளர் குண்டுராவிடம் முறையிட்டுள்ளார். இதனிடையே தான் “யார் சொல்வதையும் கேட்காமல் கே.எஸ்.அழகிரி தன்னிச்சையாக செயல்படுகிறார்” என அக்கட்சியின் மூத்த தலைவர்களான செல்வ பெருந்தகை, ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வி.தங்கபாலு ஆகியோர் ஆதங்கத்தில் இருந்துள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக தான் செல்வ பெருந்தகை, ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வி.தங்கபாலு ஆகியோர் டெல்லியில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் சந்தித்துள்ளனர். அப்போது கட்சிக்குள் நிகழ்ந்து வரும் கோஷ்டி பூசல் குறித்தும், கே.எஸ். அழகிரியை தலைமை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதனை பொறுமையாக கேட்டுக்கொண்ட கார்கே என்ன மாதிரியாக ரியாக்ட் செய்யப்போகிறார்கள் என்பது தெரியாத நிலையில், விரைவில் கே.எஸ். அழகிரியும் அவரைச் சந்திக்க டெல்லி பறக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் அமைதி பூங்காவாக  இருந்த சத்தியமூர்த்தி பவன் மீண்டும் சண்டைக்கான களமாக மாறிவருவது தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Annakizhi