Tamilnadu

செப்டம்பர் 17 பிரதமர் மோடியின் பிறந்தநாள்- சமூகநீதி நாளாக வேண்டும்! புயலை கிளப்பிய திராவிட மாயை சுப்பு!

Dravidian maaya suppu
Dravidian maaya suppu

மூத்த பத்திரிகையாளரும், 50 ஆண்டுகளாக தொடர்ந்து இந்து இயக்கங்களுக்காகவும்,இந்துக்களுக்காகவும்  தொடர்ந்து தன்னலமற்று போராடி வருபவர் தான் திராவிட மாயை சுப்பு. அது என்ன "திராவிட மாயை" சுப்பு  என நினைப்பீர்கள். தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்து வருவது திராவிட கட்சிகள் தான். அந்த  திராவிடம் என்ற ஒரு வாரத்தை மற்றும் திராவிடம் என்றால் என்ன? யார் திராவிடர்கள்.. எப்படி அந்த திராவிட மாயை உருவானது என்பது குறித்த புத்தகத்தை எழுதியவர் தான் சுப்பு. இவர் எழுதிய புத்தகங்கள் மிகவும்  பிரபலமானது. அதன் வெளிப்பாட்டின் காரணமாகவே இந்து இயக்கங்களுக்கும் இந்து ஆதரவாளர்களுக்கும்  பொது மக்களுக்கும் ஒரு தெளிவான புரிதல் ஏற்பட்டது. இன்றும் ஏற்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு  வாய்ந்த புத்தகத்தை எழுதியதால் திராவிட மாயை சுப்பு என்றே அனைவரலாம் அழைக்கப்பட்டு வருகிறார்.


தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், அதுவும் பாஜக தனித்து போட்டியிட உள்ள இந்த ஒரு  தருணத்தில், ஓர் கடிதம் ஒன்றை எழுதி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில்...நண்பர்களுக்கு  வணக்கம் ...இது சிறிய கடிதம்தான். ஆனால் பலமாத  உழைப்பு.

தமிழக அரசியல் தளத்தில் உள்ள சிக்கல் என்ன? இங்கு பெரும்பாலான எண்ணிக்கையில் இந்துக்கள் இருக்கிறார்கள். கலாச்சார ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, சடங்கு ரீதியாக மக்கள் இந்து சமயத்தில் ஈடுபாட்டோடு இருக்கிறார்கள். ஆனால் தேர்தல் வெற்றி திராவிட எதிர்ப்பாளர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. பூஜை இங்கே ஆனால் பொங்கல் மட்டும் வேறிடத்தில் என்பதுதான் தமிழக இந்துக்களின் நிலைப்பாடு. இந்த முரணை எப்படித் தீர்ப்பது?

சொல்கிறேன்,  ஒப்புதல் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். ஐயப்பாடு இருந்தால் பரிசோதனையாகச் செய்து பாருங்கள். உத்திரபிரதேசத்தைவிட பீகாரைவிட மேற்கு வங்காளத்தைவிட தமிழ்நாட்டில் இந்துக்களே பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆனால் இங்கே  இந்து இயக்கப் பிரமுகர்கள், நடைமுறைகள், நிறுவனங்கள் தாக்கப்படுகின்றன.


ஈவெராவுடைய பிறந்தநாளைத் தொடர்ந்து வாய்ப்பாடு வாசகத்தைப் போல பெரியாரிஸ்டுகள் கருத்தைச் சொல்கிறார்கள். “பெரியார் பல கால கட்டங்களில் பல விஷயங்களைப் பல கருத்துக்களைப் பேசியிருக்கலாம். கடவுள் எதிர்ப்பு, காதல் எதிர்ப்பு, கன்னித் தமிழ் எதிர்ப்பு என்று பலவகையாகப் பேசினாலும் அவருடைய மையக் கருத்து சமூகநீதி மட்டும்தான் என்ற புதிய வேடத்தை இப்போது அரங்கேற்றுகிறார்கள். போதாக் குறைக்கு அவர் நாகரிகமானவர் என்று நற்சான்றிதழ் கொடுக்கிறார்கள். ஆனால், அவர் பேச்சில் எந்த வகையிலும் தட்டாமல் இருக்கும் ஒரு விஷயம், தப்பான வார்த்தை. இந்தக் தப்பான வார்த்தைப் பிரயோகம் சமூகத்தோடு நிற்காமல் சமயத்தின் மீதும் பாயும் என்பதை ஈவெரா சொற்பொழிவு புத்தகத்தைப் புரட்டிப்பார்த்தாலே புரியும்.

இதுதான் சிக்கல். ஈவெராவுக்கு ஆதரவு, திமுகவுக்கு ஆதரவு, திராவிடர் கழகத்துக்கு ஆதரவு தருவது இந்துக்கள்தான். மைனாரிட்டிகள்தான் திராவிட வலிமைக்குப் பொறுப்பு என்று சொல்லி நாம் தப்பிக்கக்கூடாது. சபரிமலைக்கு மாலை போட்ட திமுக தொண்டன் அந்த நாட்களில் அறிவாலயம் பக்கம் போவதைத் தவிர்த்துவிடுகிறான். காலையில் காவேரிக்கரையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கிறான், அதற்காக நல்ல ஐயரைத் தேடுகிறான், மாலையில் கலைஞருக்குப் போஸ்டர் ஒட்டுகிறான். வட மொழியை வரவிடமாட்டேன் என்று கோஷம் போட்டுவிட்டு தன்வீட்டுப் குழந்தைகளுக்கு ரூபஶ்ரீ, கோபஶ்ரீ, தாபஶ்ரீ என்று பெயர் சூட்டுகிறான்.

இதற்கு ஒரே தீர்வு; ஈவெராவை வழிபடுகிறவர்கள் வழிபடாதவர்கள் என்று தமிழக அரசியல் களத்தை இரண்டு பிளவாகப் பிளக்க வேண்டும். திராவிடம் என்ற மாய பிம்பத்தை கருத்தியல் ரீதியாக உடைக்க வேண்டும். கொஞ்சம் சிரமமான வேலைதான் ஆனால் வேறு வழியில்லை. ஆற்றைக் கடந்தால்தான் அக்கரை.

பாஜககாரர்களும்,  பெரியார் என்று திராவிடர்களைப் போல, முழங்கினாலும் பெரியாரிஸ்ட் வாக்கை நாம் வாங்க முடியாது. அது அவர்களுக்குத்தான் போய்ச் சேரும். நடைமுறையில் ஈவெராவைப் புறக்கணிக்கும் அதிமுகவை அடையாள அளவிலும் அதைச் செய்யும்படியான சூழலை நாம் உருவாக்க வேண்டும்.

கடந்த இருபது வருடத் தேர்தல்களை ஆராய்ந்தால் ஒரு உண்மை வெளிப்படும். திமுகவும் வேண்டாம், அஇஅதிமுகவும் வேண்டாம் என்று நினைக்கிற வாக்காளர்கள், இளைஞர்கள் அதிக பட்சம் பத்து விழுக்காடு அளவில் இருக்கிறார்கள். இந்தப் பிரிவை முதலில் கைப்பற்றியவர் வைகோ, அடுத்தது விஜயகாந்த், இன்று சீமான். மற்றபடி ஈழப்பிரச்சனை, இனப்படுகொலை என்பதெல்லாம் தமிழக மக்களிடம் விலைபோகாத சரக்கு. ஈழப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில்தான் பேர் தெரியாத காங்கிரஸ் வேட்பாளரிடம் (மாணிக் தாகூர்) வைகோ விருதுநகரில் தோற்றுப்போனார். ஈழப் பிரச்சனைக்காக தீக்குளித்த இளைஞர் முத்துக்குமார் வீடு இருக்கிற பகுதியில் அதை அடுத்துவந்த தேர்தலில் திமுக அதிக வாக்குகளைப் பெற்றது.

திராவிடத்தைக் கனவால் உருவான கற்கோட்டை அல்லது மல்லாந்து படுத்திருக்கும் மலைப்பாம்பு என்று சொல்லலாம். அதைத் தாங்கியிருப்பது மூன்று கால்கள். ஒன்று ஆட்சி, இன்னொன்று ஊடகம், இன்னொன்று கல்வி நிலையங்கள். முதலாவதைப் பிடித்துவிட்டால் மற்ற இரண்டும் வாலைச் சுருட்டிக்கொண்டு நம்மோடு வந்துவிடும். நம்முடைய ஆட்சி, நம்முடைய லட்சியம் தமிழகமெங்கும் நம்முடைய கொடி என்பதை வைத்துக்கொண்டு இடையில் தேர்தல்களில் சில சமரசங்களைச் செய்வதில் தப்பில்லை. முக்கியமான இரண்டு விஷயங்கள். 

1. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் பதினேழாம் நாளை - பிரதமர் மோடியின் பிறந்தநாள் - சமூகநீதி நாளாகக் கொண்டாட வேண்டும்.

2. நாம் எவ்வளவு நாகரிகமாகப் பேசுகிறோம் என்பதைவிட எவ்வளவு பேரிடம் பேசுகிறோம் என்பது முக்கியம்.It is not the nicety but the numbers that count in politics. அன்புடன் திராவிட  மாயை  சுப்பு இவ்வாறு பதிவிட்டு உள்ளார். இந்த பதிவு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

More Watch videos