Tamilnadu

வசமாக சிக்கிய ஷாநவாஸ்.. பதிலடி கொடுத்த பாமகவினர் !

aloor shanavas on viswaroopam issue
aloor shanavas on viswaroopam issue

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடிகர் சூர்யாவின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் குறித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஷாநவாஸ் அவரது சமூக வலைத்தளம் பக்கத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார்.


மேலும் ஜெய்பீம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து கருத்து படைப்பு சுதந்திரம் காக்க வேண்டும் என தெரிவித்தார், இந்த சூழலில் உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா என்ன தக்காளி சட்னியா என பாமகவினர் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆளூர் ஷாநவாஸ் விஸ்வரூபம் திரைப்படம் வெளியானால் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக எண்ணுவார்கள் என 11 பக்கம் கட்டுரை எழுதியதை சுட்டி காட்டி இதற்கு என்ன பதில் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஷா நவாஸ் 11 பக்க கட்டுரையில் மணிரத்னம் தொடங்கி விஜயின் துப்பாக்கி முதல் விஸ்வரூபம் வரை விமர்சனம் செய்துள்ளார் அதில் கமல் ஹாசன் விஸ்வரூபம் திரைப்படம் வெளியாக கூடாது என ஷாநவாஸ் குறிப்பிட்ட கருத்துக்கள் பின்வருமாறு :-

கமலின் படைப்புச் சுதந்திரம் பற்றி இங்கே பலரும் கவலைப்படுகிறார்கள். ஏற்கனவே அவர் ஹேராம் எடுத்தபோது அதில் காந்தியைப் பற்றி தவறான காட்சிகள் இருப்பதாகக் கருதி காங்கிரஸ்காரர்கள் எதிர்த்தார்கள் என்றும், அன்பே சிவம் படத்தை இந்துத்துவ சக்திகள் எதிர்த்தார்கள் என்றும், இப்போது விஸ்வரூபத்தை முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என்றும் ஒப்பீடு செய்யப்படுகிறது. முஸ்லிம்களுக்கு படத்தை போட்டுக்காட்டியது தவறான முன்னுதாரணம் என்றும், இனி ஒவ்வொரு சாதி, மத அமைப்புகளும் இதைப்போல படைகட்டி கிளம்புவார்கள் என்றும் கருத்து சொல்லப்படுகிறது.

 காங்கிரஸ்காரர்களுடனும், இந்துத்துவ சக்திகளுடனும், ஏனைய சாதி, மத அமைப்புகளுடனும் முஸ்லிம்களை ஒப்பிடுவதே அடிப்படையில் தவறாகும். காங்கிரஸ்காரர்களுக்கும், இந்துத்துவ சக்திகளுக்கும், ஏனைய சாதி மத அமைப்புகளுக்கும் மிகப்பெரும் ஊடக வலிமை உள்ளது; அதிகாரப் பின்னணி உள்ளது; தாம் நினைப்பதை நினைக்கும் இடத்திலிருந்தே நிறைவேற்றிக் கொள்ளும் அரசியல் ’லாபி’ உள்ளது. ஆனால், இவற்றில் முஸ்லிம்களிடம் என்ன உள்ளது?

 ஆதிக்க சக்திகள் தமக்கு எதிரான கருத்துக்களை அதே வடிவத்தில் எதிர்கொண்டு விடுவார்கள். தம் தரப்புக் கருத்துக்களை வலுவாக பதிவு செய்தும் விடுவார்கள். அவதூறோ, இழிவோ எதையும் எளிதில் துடைத்தெறியும் வல்லமை அவர்களிடம் உள்ளது. ஆனால், முஸ்லிம்கள் தமக்கு எதிரான கருத்துக்களை எதிர்கொள்ள என்ன செய்வார்கள்? எங்கே போய் நிற்பார்கள்? தம் தரப்பு நியாயத்தை எதில் சொல்வார்கள்? நாளிதலோ, வானொலியோ, தொலைக்காட்சியோ, சினிமாவோ எதுவுமே அவர்களின் கைகளில் இல்லை.

 கமல்ஹாசன் உன்னைப்போல் ஒருவன் எடுத்தபோது அதை எந்த முஸ்லிமும் போராடித் தடுக்கவில்லை. படம் வந்தது; முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்ற கருத்தை விதைத்தது; குற்றச்செயல்களில் ஈடுபடும் முஸ்லிம்களுக்கு விசாரணைகள் அற்ற தண்டனைகள் வழங்க வேண்டும் என வாதிட்டது; என்கவுண்டரில் சுட்டுத்தள்ளி அதை செய்தும் காட்டியது. அப்படத்தின் வழியே முஸ்லிம்களுக்கு எதிராக கமல் செய்த கருத்துருவாக்கம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவியது. 2009 இல் வெளியான அப்படம் அன்றோடு சென்றுவிடவில்லை. இன்றைக்கும் விடுமுறை நாட்களில் சிறப்புத் திரைப்படமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகிறது. கட்டற்ற அந்தக் கருத்துருவாக்கத்தை முஸ்லிம்களால் தடுக்கவும் முடியவில்லை; தகர்க்கவும் முடியவில்லை.

 உன்னைப்போல் ஒருவன் ஏற்படுத்திய சமூக விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது? கமல் கல்லாக்கட்டியதோடு கடமை முடிந்தது என்று அடுத்தடுத்த படங்களை எடுக்கச் சென்றுவிட்டார். அவருக்காக குரலெழுப்பும் கலைத்துறையினரும், கருத்துரிமைக் காவலர்களும் அடுத்த வேலைக்குச் சென்று விட்டனர். ஆனால், முஸ்லிம்களால் மட்டுமே அடுத்த வேலையைப் பார்க்க முடியவில்லை. மாநகரங்களில் குடியிருக்க வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவர்கள் திண்டாட வேண்டியதாயிற்று. தகுதி இருந்தும், திறமை இருந்தும் முஸ்லிம் இளைஞர்கள் பெருநிறுவனங்களில் வேலை கிடைக்காமல் திணற வேண்டியதாயிற்று.

ஒரு ரயில் பயணத்தைக் கூட நிம்மதியாக நிகழ்த்த முடியாமல் தவிக்க வேண்டியதாயிற்று. பாஸ்போர்ட் ஆபீஸ், போலீஸ் ஸ்டேசன், வில்லேஜ் ஆபீஸ் என எல்லா அரசு அலுவலகங்களிலும் சந்தேகப் பார்வைகளையும், சில பிரத்யேக கேள்விகளையும் சந்திக்க வேண்டியதாயிற்று.

 சென்சார் போர்டு பற்றி இங்கே ஏராளமான குரல்கள் ஒலிக்கின்றன. சென்சார் செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட ஒரு படத்தை அநியாயமாக இந்த முஸ்லிம்கள் தடுத்து விட்டார்களே என்று பலரும் அங்கலாய்க்கின்றனர். அரசு, நீதிமன்றம், காவல்துறை, ராணுவம், ஊடகம் போன்ற ஜனநாயகத் தூண்களில் நடக்கும் திரைமறைவு அரசியலையும், அவற்றின் பின்னணியில் இருக்கும் சாதியவாத, மதவாத முகங்களையும் பற்றி அறிந்திருந்தால் இந்தக் கேள்விகள் எழ வாய்ப்பில்லை.

 பாபர் மஸ்ஜித் இடிப்பையும், மும்பை கலவர பயங்கரங்களையும், குஜராத்தில் மோடி முன்னின்று நிகழ்த்திய இன அழிப்பையும், ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் நாடு முழுவதும் நடத்திய குண்டு வெடிப்புகளையும் அம்பலப்படுத்தி திரைப்படங்கள் எடுக்கப்பட்டால் அவற்றை இந்த சென்ஸார் போர்டு என்ன செய்யும் என்பதே நமது கேள்வி? இந்துத்துவ பயங்கரவாதத்தை தோலுரிக்கும் நேரடியான காட்சியமைப்புகள் இல்லாமல், போகிற போக்கில் ஏதேனும் வசனமோ, பாடலோ இருந்தால்கூட சென்ஸார் போர்டு அதை அனுமதிக்காது என்பதே நிதர்சனமான உண்மை.

சென்ஸார் போர்டு போன்ற உயரதிகாரத் தளங்களில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகள், தமக்கு எதிரான சித்தரிப்புகளை வேர் மட்டத்திலேயே தடுத்து விடுகின்றனர். அதேநேரம் முஸ்லிம்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு எதிரான சித்திரங்களை தாராளமாக அனுமதிக்கின்றனர். இதன் அடிப்படையிலேயே துப்பாக்கிக்கும், விஸ்வரூபம் எனும் முஸ்லிம் விரோத பீரங்கிங்கும் நற்சான்றிதள் கிடைக்கிறது.

 சென்ஸார் போர்டு உறுப்பினர்களாய் இருப்பவர்கள் சமூக ஆர்வலர்களாகவும், எளிய மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் படைப்பாளிகளாகவும், அடக்குமுறைகளையும், அநீதிகளையும் கண்டு கொந்தளிக்கும் மனிதஉரிமை செயற்பாட்டாளர்களாகவும் இருப்பார்களேயானால், அவர்களின் தணிக்கையையும், அவர்கள் அளிக்கும் சான்றிதளையும் ஏற்றுக்கொள்வதில் நமக்கு மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. ஆனால், கறைபடிந்த கரங்களுடையோரும், பாரபட்ச போக்குகளை கடைப்பிடிப்போரும், இந்துத்துவ சிந்தனையுடையோரும் நிறைந்திருக்கின்ற ஒரு அவையின் மதிப்பீடை எப்படி அப்படியே ஏற்றுக்கொள்வது? எனவே, சென்ஸார் போர்டை ஒரு அளவுகோலாகக் கொண்டு, முஸ்லிம்களின் பிரச்சனைகளை அணுக முடியாது.

 ‘படம் வந்தபிறகு அதில் நமக்குள்ள மாற்றுக்கருத்துக்களை எடுத்துக்கூறி, இழிவான சித்தரிப்புகளை நீக்கச் சொல்லலாமே?’ என்பதும் பலரின் வாதம். சினிமா குறித்த அடிப்படை புரிதலின்மையால் வரும் வாதம் இது. சினிமா என்பது ஒரு கட்டற்ற ஊடகம். சமூகத்தில் பல்வேறு பரிமாணங்களை ஒரே நேரத்தில் நிகழ்த்தும் ஆற்றல் சினிமாவுக்கு உண்டு. திரையரங்குகளோடு முடிந்து விடுகிற, முடங்கி விடுகிற மீடியம் அல்ல சினிமா. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், இணையதளம் என அனைத்து ஊடகங்களிலும் சினிமாவின் கரங்கள் நீள்கின்றன. சினிமா இல்லாமல் இவற்றில் எதுவுமே இயங்குவதில்லை. எனவே, ஒரே ஒருநாள் திரையில் ஒருபடம் ஓடினால்கூட, அது மற்ற ஊடகங்கள் அனைத்துக்கும் மறுநொடியே வந்து சேர்ந்து விடுகிறது. அப்படம் முன்வைக்கும் கருத்துகள் முழுவீச்சுடன் மக்களை சென்றடைகின்றன. திரையரங்கிற்கு சென்று பார்க்க முடியாதவர்களுக்கு, வீட்டு வரவேற்பறையிலேயே தொலைக்காட்சி அதை கொண்டுவந்து கொடுக்கிறது.

படம் வரும்போது பிறக்காதவர்கள்கூட பின்னாளில் ஏதோ ஒரு விடுமுறை நாளில் சிறப்புத் திரைப்படமாக தொலைக்காட்சியில் அதைக் காண வாய்ப்பிருக்கிறது. உலகத்தின் எந்த மூலையில் இருந்து கொண்டும் இணையத்தின் வழியாக அப்படத்தைப் பார்க்கவும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அதைப் பகிரவும் தொழில்நுட்பம் வழிவகுக்கிறது. எனவே, மிகமோசமான சித்தரிப்புகளுடன் உருவாகும் படங்களை கருவிலேயே அழிப்பதைத் தவிர, விளிம்புநிலை மக்களுக்கு வேறு வழி இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

விஸ்வரூபம் படத்தை கருவிலேயே அழிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கிய ஷா நவாஸ் இப்போது வாய் கிழிய கிழிய படைப்பு சுதந்திரம் பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும் எனவும் பாமகவினர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.தனக்கு வரும் போது ஒரு மாதிரியும் அதுவே வேறு ஒருவருக்கு நடைபெறும் போது வேறு விதமாகவும் கருத்து சொன்ன ஷாநவாஷின் உண்மை முகம் வெளிவந்துவிட்டது.