24 special

ஒன்றல்ல இரண்டல்ல.... இத்தனை அதிசயங்களோடு ரத்தினங்கள் நிறைந்த சிவன் கோவில்...!!

God
God

சிவன் வீற்றிருக்கும் மலை என்றாலே எக்கச்சக்க அதிசயங்களும் மர்மங்களும் நிறைந்ததாக காணப்படும். அவற்றைத் தாண்டி சிவபெருமானை காண வேண்டும் என்றால் அது சிவன் நினைத்தால் மட்டுமே முடியும் என்பது சிவ பக்தர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று! அப்படிப்பட்ட சில அல்ல பல மர்மங்கள் நிறைந்த கோவில்தான் ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில். இந்த கோவில் கரூர் மாவட்டம் அய்யர்மலை என்னும் ஊரில் அமைந்துள்ளது. திருநாவுக்கரசர் மற்றும் அருணகிரிநாதர் ஆகிய இருவரால் தேவாரம் பாடப் பெற்ற திருக்கோவிலும் இதுவே! கிட்டத்தட்ட 1178 அடி உயரத்தையும் 1117 படிக்கட்டுகள் கொண்ட மலையின் உச்சியில் சுயம்பு மூர்த்தியாக சிவன் அருள் பாலிக்கிறார். இந்த கோவிலின் சுவாமி சன்னதிக்கு நேரே உள்ள நவ துவாரங்கள் வழியே சித்திரை மாதத்தில் சூரிய கிரகணங்களின் பொழுது சூரிய ஒளியானது சுயம்பு மூர்த்தியின்  மீது விழுகிறது.


இதை காண்பதற்கு இரு கண்கள் போதாது என்று இச்சிறப்பினை அறிந்த சிவ பக்தர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி எந்த சிவன் கோவிலிலும் இதுவரை இது போன்ற ஒரு அதிசயத்தை யாரும் அறிந்திருக்க முடியாத, கண்டிருக்க முடியாத அப்படிப்பட்ட ஒரு அதிசயம் இந்த கோவிலில் நிகழ்ந்து வருகிறது. அதாவது, சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்ற பச்சை பால் மாலை வரையிலும் கெட்டுப் போவதே இல்லை என்றும், பூஜையின் பொழுது பத்தி, கற்பூரம் மற்றும் விபூதி போன்றவை பாலில் விழுந்தாலும் பால் கெட்டுப் போவதே இல்லை என்றும், அபிஷேகம் செய்கின்ற பால் சிறிது நேரத்தில் சுவை மிகுந்த கெட்டி தயிராக மாறிவிடுமாம்!! இப்படிப்பட்ட அதிசயம் இன்றளவும் அந்த கோவிலில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் மலையின் உச்சியில் வீற்றிருக்கும் சுவாமிக்கு தினந்தோறும் கால்நடையாகவே எட்டு கிலோமீட்டர் வரை நடந்து காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த மரபு இன்றளவும் அந்த கோவிலில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, ஆயர் ஒருவர் அபிஷேகத்திற்காக கொண்டு வந்திருந்த பாலை காகம் தட்டி கவிழ்த்தியதால் அந்த காகம் எரிந்து போனது, இதனால் இந்த மலையின் மீது ஒரு காகம் கூட பறப்பது இல்லை என்பதும் ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலின் மற்றுமொரு சிறப்பான அதிசயம். இத்தனை அதிசயங்களை நிறைந்த இந்த திருக்கோவிலுக்கு புகழ் பெற்ற தல வரலாறு ஒன்றும் கூறப்படுகிறது. அதில் தனது மணி முடி இழந்த ஆரிய மன்னன் ஒருவன் இந்த தளத்தில் இருந்த இறைவனுக்கு அபிஷேக ஆராதனை செய்யும் பொழுது அங்கிருந்த கொப்பரையில் காவிரி தீர்த்தம் ஊற்றப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு ஊற்றியும் அந்த காவிரி நீர் நிரம்பாமலே இருந்துள்ளது. ஊர் மக்கள் அனைவரும் உற்றியும் அந்த கொப்பரை நிரம்பாததால் கோபம் அடைந்த மன்னன் தன் வாளினை சுவாமி மீது வீசி உள்ளான். அப்போது சுயம்புவாக காட்சியளித்துக் கொண்டிருந்த சிவபெருமானிடம் இருந்து இரத்தம் வந்துள்ளது. 

இதனால் அதிர்ந்த மன்னன் தான் செய்த தவறினை உணர்ந்து இறைவனை வணங்கினான் அப்பொழுது இறைவன் அந்த மன்னன் முன் தோன்றி அருளாசி வழங்கியதோடு ரத்தினங்களையும் வழங்கி உள்ளார். இப்படி மன்னன் சிவபெருமானை தாக்கிய பொழுது ஏற்பட்ட தழும்பு சுவாமியின் முடியில் காணப்படுகிறது என்று கூறப்படுகிறது. மேலும் தங்கள் குலதெய்வங்கள் தெரியாதவர்களும் இங்கு வீற்றிருக்கும் ரத்தினகிரீஸ்வரர் குலதெய்வமாக வழிபடலாம் எனவும் கல்யாண வரம், தொழில் விருத்தி, புத்திர பாக்கியம் என தன் வாழ் சிறக்க எது கேட்டாலும் சுயம்பு மூர்த்தி கொடுக்கும் கருணை உள்ளவராகவும், மன அமைதி வேண்டுபவர்களும் இக்கோவிலுக்கு சென்று மன அமைதியை பெறலாம் எனவும் கூறப்படுகிறது. 

அதுமட்டுமின்றி இந்த மலை முற்றிலும் மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் நிறைந்து காணப்படுவதால் அங்கு வீசும் காற்றே ஒரு மூலிகை காற்றாகும் அதனால் உடலில் ஆஸ்துமா, ரத்த கொதிப்பு, நெஞ்சு வலி, கை கால் மூட்டு வலி, இரத்த அழுத்தம் போன்ற உடல் ரீதியான பாதிப்புகள் இருந்தவர்களும் இந்த கோவிலுக்கு சென்று வந்தால் நிச்சயம் அவர்கள் தங்கள் உடலில் அதிசயமான மாற்றத்தை காணலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படி அவர்கள் செல்லும் பொழுது காலையில் காவிரி கரையில் உள்ள கடம்பர் கோவிலில் வழிபாடு செய்து விட்டு, நண்பகலில் ரத்தனகிரீஸ்வரரை வணங்கி மாலையில் திருஈங்கோய் மலை நாதரை வழிபட்டால் நல்ல புண்ணியம் கிடைக்கும் என்பது ஒரு ஐதீகமாகும்! இந்த கோவிலில் பச்சை மற்றும் சிவப்பு ரத்தின கற்கள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.