24 special

எதையாவது பேசி எங்களை இழுத்துவிட்றாதம்மா ...! மேயர் பிரியாவிற்கு பறந்த உத்தரவு...!

Mayar priya, mkstalin
Mayar priya, mkstalin

சென்னையில் இளம்பெண் மேயராக பிரியா பதவி ஏற்றதில் இருந்து தற்போது வரிசையாக நடைபெறும் அனைத்து பொதுக் கூட்டங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பேசுவதும் கருத்துக்கள் கூறுவதும் இணையதளத்தில் ட்ரோல் மெட்டீரியலாக உலா வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் சில செய்தியாளர்கள் சந்திப்பில் கூட என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் சில கருத்துக்களை வெளிப்படையாக கூறி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். கடந்த வாரத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மேயர் பிரியா மாமன்னன் படம் குறித்து செய்தியாளர்கள் மத்தியில் எழுப்பிய கேள்விக்கு மாமன்னன் படம் மிகவும் நன்றாக உள்ளது என்றும் தயாரிப்பாளர் நன்றாக படத்தை எடுத்திருக்கிறார் மேலும் திராவிட மாடல் ஆட்சியின் சமூக நீதிகொள்கைகளை படத்தில் உதயநிதி மூலம் நன்றாக எடுத்திருப்பதாகவும் , தற்போது தமிழகத்தில் அதிகமான பெண்கள் ஆளுமையில் இருப்பது சமூகநீதி காரணமாகத்தான் என திமுகவினரை புகழ்ந்து தள்ளினார்.

அடுத்தபடியாக தக்காளி விலை தமிழகத்தில் தற்போது உயர்ந்துள்ள நிலையில் மாநகராட்சி சார்பாக விலையை குறைப்பதற்கு ஏதாவது முயற்சி செய்யலாமே என்ற செய்தியாளரின் கேள்விக்கு ஒரே பதிலாக தக்காளி என் டிபார்ட்மெண்ட்டே இல்லை என்ற மழுப்பலான பதிலை சொல்லி தப்பித்தார். மாமன்னன் படத்தைப் பற்றி கேட்டதற்கு புகழ்ந்து பேசிவிட்டு தமிழகத்தில் தக்காளி விலை உயர்வை பற்றி கேள்வி கேட்டதும் மழுப்பி பதிலளித்தது சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. 

மேலும் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, பார்க் போன்றவற்றிலிருந்து கேள்வி கேளுங்கள் தக்காளி விலை பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என்று மேயர் பிரியா கூறியவுடன் மாமன்னன் படத்தை பற்றி மட்டும் கருத்து சொல்றீங்க தக்காளி விலை பற்றி பேசுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என செய்தியாளர்கள் தரப்பில் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

மேயர் பிரியாவின் தக்காளி விலை பற்றிய பொறுப்பற்ற பதிலால் எதிர்க்கட்சிகள் அனைவரும் கண்டனம் தெரிவித்த நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மக்களின் குறைகளை களைவதற்கு மக்களை தேடி மேயர் என்னும் திட்டம் கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது நடந்து வருகிறது. 

இந்நிலையில் ஜூலை 22ஆம் தேதி தண்டையார் பேட்டையில் நடைபெற இருந்த “மக்களை தேடி மேயர் “சிறப்பு முகாம் சில நிர்வாக காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் மக்களைத் தேடி மேயர் சிறப்பு முகாம் நடைபெறுவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தியில்  இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேயர் பிரியாவின் சில சர்ச்சையை ஏற்படுத்தும் விவகாரங்களால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்படுத்திய நிலையில் அறிவாலய வட்டாரங்கள் மேயர் பிரியா மீது கடுப்பில் இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே திமுகவின் முக்கிய மற்றும் மூத்த அமைச்சர்களான அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமைச்சர் பொன்முடி அமலாக்கத் துறையினரின் ரெய்டில் சிக்கி இருப்பது திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் தற்போது மேயர் பிரியா செய்தியாளர் சந்திப்பில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி திமுகவை விமர்சனத்துக்குள்ளாக்கி வருகிறார். இதனால்தான் மக்களை தேடி மேயர் என்ற சிறப்பு முகாம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காரணமே இல்லாமல் மக்களைத் தேடி மேயர் சிறப்பு முகாம் ஏன் ஒத்திவைக்கப்படுகிறது என்று பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி மேயர் பிரியா திமுகவிற்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியது தான் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்..