24 special

தமிழ் மகன் உசேன் -அவசரமாக டெல்லிக்கு செல்லும் பரபரப்பு பின்னணி!

Tamilmagan hussian
Tamilmagan hussian

கட்சியில் ஏற்பட்ட பிளவை மறைக்க பாஜக, முற்போக்கு கூட்டணி என இதுவரை போக்கு காட்டிய அதிமுக தரப்பு இனி வேறு வழியில்லை கட்சியில் உள்ள பிரச்சினையை பார்க்க வேண்டும் என்ற நிலைக்கு வந்ததால் இரட்டை இலை சின்னத்தை காப்பாற்றிக்கொள்ள தமிழ் மகன் உசேன் இன்று டெல்லி ஓடுகிறார்


காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனான ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில் உடனே ஈரோடு கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்த தேர்தல் ஆணையம் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்தது. 

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு திருமகன் ஈவேராவின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை அக்கட்சி வேட்பாளராக நிறுத்தியது. ஆனால் இன்று மக்கள் இருக்கும் மன நிலையில் ஈரோடு தொகுதியில் திமுக கூட்டணி வெல்வது சிரமமே, காரணம் திமுக கூட்டணி மீது மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய அதிருப்தி.

இது ஒருபுறம் இருக்கையில் மறுபுறம் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் என இரு அணிகளாக பிரிந்து சின்னம் யாருக்கு என்ற போட்டி நிலையில் இருக்கின்றது.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்து இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற மிகப்பெரிய கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கு காரணம் கூட்டணியில் இருக்கும் பாஜக என வெளியில் தகவல்களை அதிமுக தரப்பு பரப்பினாலும் கட்சிக்குள் ஒற்றுமை இல்லாத நிலையே இதற்க்கு காரணம், இதனை வெளியில் கூறினால் அதிமுக என்ற பிம்பத்திற்கு மக்கள் மத்தியில் பின்னடைவு ஏற்படும் என தெரிந்த அதிமுக தரப்பு பாஜக காரணம், கூட்டணி காரணம், டெல்லி லாபி காரணம் என கதைகளை கட்டி வருகிறது.

ஓ.பன்னீர்செல்வம் முதலில் தனது தரப்பு வேட்பாளரை நிறுத்தப்போவதாக அறிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி சேலம் மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கே.எஸ்.தென்னரசுவை ஈரோடு கிழக்கு வேட்பாளராக அறிவித்து உள்ளார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு வழக்கில் , ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பி அதன் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் ஆணையத்தில் இது தொடர்பான ஆவணங்களை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுவை அதிமுக வேட்பாளராக முன்மொழிந்துள்ளதாகவும், அதற்கு ஒப்புதல் அளிக்கும்படியும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதில் இன்று 7 மணிக்குள் வேட்பாளர் தென்னரசுவை ஏற்கிறேன் அல்லது மறுக்கிறேன் என்ற விபரத்தை தெரிவிக்கவேண்டும் என தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதம் அதிமுகவின் மற்றொரு அணியான  ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், இதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்த வேட்பாளர் செந்தில் முருகன் பெயர் இல்லாததற்கு அவரது அணியினர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். இதனை எதிர்த்து அவர்கள் ஓ.பி.எஸ் தரப்பு  உச்சநீதிமன்றத்தை நாட உள்ளார்கள். 

இந்த நிலையில் பொதுக்குழு உறுப்பினர்களின் கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க தமிழ் மகன் உசேன் இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. என்னதான் அதிமுக உட்கட்சி பிரச்சினையை பாஜக, முற்போக்கு கூட்டணி என மடை மாற்ற நினைத்தாலும் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டு மக்கள் மன்றத்தில் உண்மை வெளிவந்துதானே தீரும்!