24 special

பாஜக முழு மூச்சில் களம் இறங்க உள்ளது! பிரதமர் மோடி இராமநாதபுரம் வருகிறார்..!

pmmodi
pmmodi

பிரதமர் மோடி மார்ச் மாதம் 23-ம் தேதி இராமநாதபுரம் வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன, இராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய பிரதமர் முடிவு எடுத்து இருப்பதாகவும், மேலும் முடிவுற்ற சாலை மற்றும் மேம்பாலங்களை பிரதமர் திறந்து வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


ஏற்கனவே பிரதமர் மோடி இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட இருப்பதாக செய்திகள் பரவிய நிலையில் பிரதமர் மோடி இராமநாதபுரம் வருகை தரும் நிகழ்வு மிகுந்த முக்கியத்துவம் உடையாதாக பார்க்க படுகிறது.2024-தேர்தலை மையமாக கொண்டு பாஜக இப்போதே பல பணிகளை தொடங்கி இருக்கிறது, அடுத்தாண்டு நடக்கவுள்ள மக்களவை தேர்தலுக்கு பா.ஜ.க தலைமை முழு வீச்சில் தயாராகி வருகிறது.

பல்வேறு தேர்தல் வியூகங்களுடன் முக்கிய நிர்வாகிகள் களமிறங்கவுள்ளனர். முதலில் 160 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கு வகுக்கப்பட்டுள்ள தேர்தல் வியூகங்களை நேரடியாக கண்காணிக்க பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முடிவு செய்துள்ளனர்.பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில், இதற்கென பல்வேறு கட்ட ஆலோசனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 160 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவை கையில் எடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்த தொகுதிகள் அனைத்துமே, 2019 தேர்தலில் பா.ஜ.க சிறிய வாக்கு வித்தியாசத்தில் கை நழுவிய தொகுதிகள்.

இந்த தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படவுள்ளது. 2024 தேர்தலில் எப்படியும், இந்த தொகுதிகளில் கடும் உழைப்பை செலவிட்டு வெற்றியை ஈட்டியாக வேண்டுமென்பதே பாஜகவின் திட்டமாம்.அதற்கான பல்வேறு யுக்திகளை ஆய்வு செய்து, பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவிடம் ஒரு குழு சமீபத்தில் அறிக்கை அளித்திருந்தது. இந்நிலையில்தான், இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையில், தலைவர்கள் இறக்கிவிடப் பட்டுள்ளனர்.

பா.ஜ.க தேசிய பொதுச்செயலர்கள் சுனில் பன்சல், வினோத் தாவ்தே, தருண் சுக் ஆகிய மூவரிடம் இந்த 160 தொகுதி களுக்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளன.இந்த 160 தொகுதிகளும் முதற்கட்டமாக வெவ்வேறு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுப்பிலும் 4 அல்லது 5 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.இந்த தொகுப்புகள் ஒவ்வொன்றிலும், பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து வந்து பேரணி பொதுக்கூட்டம் நடத்தப்படும். அதன்படி, 45 - 55 பேரணிகள், பொதுக்கூட்டங்கள் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தொகுதிகளுக்கான பிரதமரின் பயணம் மத்திய - மாநில அரசுகளின் நலத்திட்டங்களின், துவக்க விழாக்களாக இருக்கலாம் அல்லது முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.அதில் கலாசார முக்கியத்துவம் கொண்ட இராமநாதபுரம் தொகுதியை எப்படியும் இந்த முறை கைப்பற்றி விட வேண்டும் என பாஜக முழு மூச்சில் களம் இறங்க இருப்பதாகவும் அதன் ஒரு பகுதியாகதான் பிரதமர் மோடியே நேரடியாக இராமநாதபுரம் வருகை தர இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமரின் பயணம் வருகின்ற 23-ம் தேதி இருக்குமா? அல்லது மாற்றம் இருக்குமா என்பது ஓரிரு நாட்களில் முடிவாகும் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் இராமநாதபுரம் வருகை தர இருக்கிறார் என்ற செய்தி பாஜகவினரை உற்சாகம் அடைய செய்துள்ளது.