தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது, தமிழகத்தை கடந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன, தமிழக பாஜக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த சூழலில் தற்போது தேசிய குழந்தைகள் ஆணையம் தற்போது தமிழக டிஜிபி க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
'மத மாற்றம் தொடர்பாக, பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில், ஏழு நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபுவுக்கு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் தலைவர் பிரங்க் கனுாங்கோ கடிதம் எழுதி உள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே, மைக்கேல் பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ - மாணவியரை சட்டவிரோதமாக மத மாற்றத்தில் ஈடுபட வற்புறுத்துகின்றனர். மத மாற்றத்தை ஏற்க மறுக்கும் மாணவ - மாணவியரை, பள்ளி நிர்வாகம், உளவியல் ரீதியாக சித்ரவதைக்கு உள்ளாக்கி, அவர்களை தற்கொலைக்கு துாண்டுவதாக, எங்களுக்கு புகார் வந்துள்ளது.
மேலும், அப்பள்ளியில் பயின்ற அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர், மதம் மாற மறுப்பு தெரிவித்ததால், அவரை வீட்டுக்கு அனுப்பாமல், பள்ளி நிர்வாகம் இருந்து உள்ளது. அவரை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து, பாத்திரங்களை கழுவச் சொல்லி தண்டனை வழங்கியுள்ளது.மன உளைச்சலில் இருந்த மாணவி, பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அப்பள்ளி நிர்வாகம், குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அந்த புகாரில் கூறப்பட்டு உள்ளது.சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது, உரிய விசாரணை நடத்த வேண்டும். அப்பள்ளி மாணவ - மாணவியரிடம் புகார் பெற்று, அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.மேலும் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, ஏழு நாட்களுக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இனியும் மாணவி தற்கொலை விவகாரத்தில் தமிழக அரசோ தமிழக காவல்துறையோ சம்பந்தபட்ட பள்ளி நிர்வாகத்தை கைது செய்யவில்லை என்றால், தமிழக அரசிற்கு எதிராக பொதுமக்கள் மனநிலை மாறலாம் என்று கூறப்படுகிறது, மேலும் தேசிய குழந்தைகள் ஆணையம் விளக்கம் கேட்டு தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் இனியும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முடியாத சூழல் உண்டாகியுள்ளது.