24 special

சமாதான கொடி காட்டிய அமைச்சர்..! சுற்றி வளைத்த பாமக

Anbumani ramadoss,masthaan
Anbumani ramadoss,masthaan

கடந்த வாரம் விழுப்புரம், மரக்காணம் பகுதியில் நடந்தேறிய கள்ளச்சாராய மரணங்கள் விவகாரம் தமிழகத்தை உலுக்கியது. மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கிராமத்தில் கடந்த 13ம் தேதி விஷச் சாராயம் அருந்தியதில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இவர்களில் 14 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 13ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் 416 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 107 பெண்கள் உட்பட 416 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச் சாராய வியாபாரி மரூர் ராஜா தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையிலடைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மரூர் ராஜா அமைச்சர் மஸ்தானுக்கு நெருக்கமானவர், திமுகவின் தொண்டராகவும் உள்ளார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார், மேலும் அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் மரூர் ராஜா இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார். இதன் பின்னர் கள்ளச்சாராய மரணத்திற்கு காரணமான மரூர் ராஜா உங்களுக்கு நெருக்கமா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மஸ்தான், ''இல்லை இல்லைங்க அவர் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தார். அண்ணா திமுகவில் இருந்தார்.

அவர் டாக்டர் ராமதாஸ், சிவி சண்முகத்திற்கும் உறவினர்தான். அவர் எல்லாம் கட்சி மாறுவதோ, புகைப்படம் எடுத்துக்கொள்வதை வைத்து நாம் சொல்லக்கூடாது. அவரின் மனைவி கவுன்சிலராக இருப்பது உண்மைதான். அவர் மனைவி வேறு ஊரைச் சேர்ந்தவர். அவர் வாய்ப்பு கேட்கும்போது, அங்குள்ள நிர்வாகிகள் சிபாரிசு செய்யும்போது வாய்ப்பு அளிக்கப்பட்டது. மரூர் ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரின் தவறை நாம் ஆதரிக்கவில்லை'' என்று கூறினார்.

இவ்வாறு செஞ்சி மஸ்தான் கூறியது பாமகவினரை கடும் கோபத்தில் ஆழ்த்தியது, உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயரை மறைக்க எங்களை இழுத்து பேசுவதாக என பாமகவினர் கொதித்தனர். இதன் காரணமாக பாமகவினர் செஞ்சி மஸ்தானை ரவுண்டு கட்ட ஆரம்பித்தனர். கள்ளச் சாராய வியாபாரி மரூர்ராஜா பாமகவைச் சேர்ந்தவர், ராமதாஸுக்கு உறவினர் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதை  கண்டித்து நேற்று மாலை திண்டிவனம் தீர்த்தகுளம் அருகே நடைபெற இருந்த விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வருகை தர இருந்த அமைச்சர் மஸ்தானுக்கு கருப்பு கொடி காட்ட பாமக மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாமகவினர் கூடி இருந்ததை அறிந்த திண்டிவனம் போலீஸார் அவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.

இப்படி முதல்வர் ஊருக்கு கிளம்பும் நேரத்தில் பாமகவினரிடம் வம்பு வளர்ப்பது சரியில்லை என அமைச்சர் தரப்பு முடிவெடுத்த காரணத்தினால் பாமகவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட அமைச்சர் செஞ்சி மஸ்தான் தரப்பு காவல்துறையை வைத்து சுமூகமாக பேசி முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஏற்கனவே கள்ளச்சாராய விவகாரம் ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடியை தந்துள்ள நிலையில் இப்படி பிற கட்சியை அதில் இணைத்து பேசி அமைச்சர் வம்பை வாங்கியது முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு சென்றால் பாமகவுடன் கூட்டணி கணக்கு போடும் திமுக தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தும் என்பதால் அமைச்சர் இந்த சமாதான முடிவுக்கு வந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.