கோவில் நகைகளை அறங்காவலர்கள் இல்லாமல் உருக்க கூடாது எனவும், அறங் காவலர்களை முதலில் நியமியுங்கள் பின்பு கோவில் நகையில் கைவைக்கலாம் என உயர் நீதிமன்றம் தமிழக அரசிற்கு உத்தரவிட்ட நிலையில் பாஜக தலைவர் H ராஜா சேகர் பாபுவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கோவில் நகைகள் உருக்குதல் தொடர்பான தமிழக அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிகளின்படி கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில் தங்க நகைகளை உருக்க அனுமதிக்கக் கூடாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கோயில் நகைகளை உருக்கவில்லை என்றும், காணிக்கையாக வந்த நகைகள் தான் உருக்கப்படுவதாகவும், அதை மேற்பார்வையிட உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி இருவரும் அடங்கிய குழு அமைத்து, நகைகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், ஏற்கெனவே நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்ததன் மூலம் 11.5 கோடி ரூபாய் வட்டி வருவாயாக கிடைத்துள்ளதாகவும், அது கோயில் நலனுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், கோயில்கள் சீரமைப்புக்கு நிதி தேவைப்படுவதாகவும், கடந்த 11 ஆண்டுகளாக தங்க நகைகள் மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அறங்காவலர்கள் இல்லாமல் நகைகளை உருக்க முடியாது எனக் கூறினர். இதையடுத்து, நகைகளை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் எனக் குறிப்பிட்ட தலைமை வழக்கறிஞர், அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட பிறகே நகைகள் உருக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார்.இதைப் பதிவு செய்த நீதிபதிகள், கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்கலாம் எனவும், அறங்காவலர்கள் நியமிக்கும் வரை நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
மேலும், மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மற்ற வழக்குகளுடன் சேர்த்து டிசம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்த சூழலில் உயர்நிதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய பாஜக மூத்த தலைவர் H ராஜா சேகர்பாபுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் அதில், இந்து கோவில்களின் நகைகளை உருக்க உத்தரவிடும் அதிகாரம் ஆணையருக்கோ, அமைச்சருக்கோ, அல்லது முதல்வருக்கோ கிடையாது. அவ்வாறு உத்தரவிட்டது
அரசின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட செயல் என்று நான் கூறியதற்கு அமைச்சர் எதையோ பார்த்து எதுவோ குரைப்பதாக என்னை இழிவுபடுத்தி பேசினார். ஆனால் நகைகளை உருக்க உத்தரவிட அறங்காவளர் குழுவிற்கு மட்டுமே உண்டு என்கிற நம் சட்டப் புரிதலை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.இது வழக்கு தொடர்ந்த இந்து உணர்வாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் தீர்ப்பு. கடந்த ஐந்து மாதங்களாக இந்து கோவில்கள் தொடர்பாக தொடர்ந்து சட்ட விரோதமாகவும் கோவில்களை சிதைக்கும் நோக்குடனும் செயல்படும் போக்கை திமுக அரசு நிறுத்திக் கொள்ளும் என எதிர் பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.