எட்டாவது நாளாக தொடரும் ரெய்டு முடிவடைந்தது மீண்டும் ஒரு சிக்கலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்படுத்தியுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் நடைபெறாத மிக நீண்ட ரெய்டுகளில் ஒன்றாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வருமானவரித்துறை மேற்கொள்ளும் ரெய்டு கூறப்படுகிறது.
அதாவது தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி வகித்த இரண்டு ஆட்சி துறைகளிலும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், வருமானவரித்துறையினர் கடந்த வாரம் செந்தில் பாலாஜிக்கு சம்பந்தப்பட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மே 26ம் தேதி தனது ரெய்டை தொடங்கினர், பிறகு அன்றைய தினமே 200க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் தங்களை சோதனைகளை அதிகப்படுத்தினர். அதோடு தமிழ்நாடு தவிர மற்ற பிற மாநிலங்களிலும் சோதனைகளை மேற்கொண்டிருந்தனர். ஏற்கனவே திமுகவின் சொத்து பட்டியல் மற்றும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரங்களால் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ள நிலையில் திமுகவின் முக்கிய புள்ளியாக வலம் வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வருமானவரித்துறை என சோதனை என்பது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
வெளியில் தங்களது கோபத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் சோதனைகளை மேற்கொள்ள வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக ஆதரவாளர்கள் தாக்கியது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியதோடு அது திமுகவினருக்கே ஆபத்தாக தற்போது அமைந்துள்ளது. தனது பணியை செய்ய வந்த பெண் அதிகாரி ஒருவரின் கையை உடைத்தது அவரை காயப்படுத்தியதன் காரணமாக வருமானவரித் துறை அதிகாரிகள் கடும் கோபமடைந்து திமுக ஆதரவாளர்கள் மீது காவல்துறையிடம் புகார் அளித்து, தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர். வருமானவரித்துறையினர் அளித்த புகாரால் மத்திய அரசின் பாதுகாப்பு படை பிரிவு அதிகாரிகள் வருமானவரித் துறையினரின் பாதுகாப்பிற்கு வந்தனர். இந்த நிலையில் வருமானவரித் துறையினரின் ரெய்டு எட்டாவது நாளில் முடிவடைந்துள்ளது.
அதனோடு பக்கத்து மாநிலத்திலிருந்து கூட வருமானவரித்துறை அதிகாரிகள் வந்து செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட ரெய்டில் கலந்து கொண்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. கரூரில் அரசு ஒப்பந்ததாரராக உள்ள சங்கர் ஆனந்த் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர் மேலும் சங்கர் ஆனந்தின் அலுவலக ஊழியராக இருந்த சோபனா வீட்டிலும் ரெய்டு மேற்கொண்ட வருமானவரித்துறையினர் விசாரணைக்காக சங்கர் ஆனந்த் மற்றும் சோபனாவையும் அழைத்துச் சென்றனர். அதாவது அரசு ஒப்பந்ததாரராக உள்ள சங்கர் ஆனந்திற்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்கிற்கும் நெருக்கமான உறவு இருப்பதாகவும் அதனாலேயே அவரிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
மேலும் இந்த ரெய்டில் பலதரப்பட்ட ஆவணங்கள், டைரிகள் சிக்கியதாகவும், அவை அனைத்தையும் வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்து உடனுக்குடன் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வருமான வரித்துறையினர் கொண்டு வருவதால், செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் பெருமளவில் சிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஏற்கனவே அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் அடிபட்டு வருவதும், வருமானவரித்துறை சோதனைகளும் 8 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று பல ஆவணங்களை கைப்பற்றியதும் செந்தில் பாலாஜிக்கு தூக்கம் இல்லாத இரவுகளை கொடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
8வது நாளில் முடிவுபெற்ற ரெய்டில் பல ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் அந்த ஆவணங்களின் அடிப்படையில் கிடைத்த தகவல்களை வைத்து செந்தில்பாலாஜிக்கு விரைவில் வருமானவரித்துறை சம்மன் அனுப்ப திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.