
தமிழக இந்து சமய ஆணையருக்கு பாஜக முன்னாள் தேசிய குழு உறுப்பினர் H ராஜா மூன்று பக்கம் விளக்கமாக கேட்டு கடிதம் எழுதி இருப்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களும் ஆளும் தரப்பிற்கு சிக்கலை உண்டாக்கியுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒட்டன்சத்திரம், விளாத்திக்குளம், திருச்செங்கோட்டில் புதிய கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின்போது, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, சென்னை கொளத்தூர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஆகிய நான்கு இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பிகாம், பிபிஏ, பிசிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய நான்கு பாட பிரிவுகளுடன் கல்லூரி தொடங்க உயர் கல்வித்துறை அனுமதி அளித்து கடந்த அக்டோபர் 6ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக, சென்னை கொளத்தூரில் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கடந்த மாதம் 2ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய மூன்று புதிய கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
இந்த சூழலில் கோவில் நிதியை கோவில் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சட்டம் இருக்கையில் அதனை பல்வேறு வழிகளில் விரயம் செய்ய தமிழக அரசு முயற்சி செய்வதாக குற்றசாட்டு கூறப்படும் நிலையில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான H ராஜா கடிதம் ஒன்றை இந்து சமய ஆணையருக்கு எழுதியுள்ளார் அதில்.,
கோவில் நிதியை சட்ட விரோதமாகவும், தேவையற்றும் விரயம் செய்வது கண்டனத்துக்குரியதும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டதுமாகும். இந்து அறநிலைய சட்டம் தெளிவாகக் கூறுகிறது அறங்காவலர் குழு அனுமதியின்றி ஆணையருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்று. அதனால்தான் தங்கம் உருக்குதல், கல்லூரி துவங்குதல் ஆகிய திட்டங்கள் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் வாட்ஸ்அப் மூலம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு 46 பிரிவு கோவில்கள் எற்கனவே கோவில்கள் வசமுள்ள தகவல்களை கணினி மயமாக்க பல கோடிகள் நிதி மாற்றம் செய்வது நியாயமானதல்ல என குறிப்பிட்டு இருக்கும் அவர் பல்வேறு சட்ட பிரிவுகள் நீதிமன்ற தீர்ப்புகள் முதலானவற்றை சுட்டிக்காட்டி கடிதம் எழுதி இருக்கிறார்.
இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை ஆளும் அரசாங்கத்தின் இந்து சமய துறையில் பணியாற்றும் ஆட்சியாளர்களுக்கு கடும் பின்விளைவை உண்டாக்கலாம் என்று கூறப்படுகிறது, நீதிமன்றம் உத்தரவுகளை முறையாக பின்பற்றாமல் இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாக கூறப்படும் நிலையில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயலாம் என்றும் கூறப்படுகிறது.