24 special

பெரும் சிரமத்திற்கு ஆளான தமிழ்நாடு மக்கள்..!காரணம் இது தான்

Mk stalin
Mk stalin

ஏற்கனவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டு அதனால் மக்கள் கொதிப்படைந்து திமுக ஆட்சி மீது கோபமாக இருக்கும் நிலையில் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட ஓராண்டிற்குள் மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்ற தகவல் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது, இந்த இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகள் மற்றும் மக்களுக்கு செய்த நன்மைகளை விட திமுக அரசுக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்ட அவப்பெயர் தான் அதிகம் என பலதரப்பட்ட அரசியல் விமர்சிகர்களும், எதிர்க்கட்சிகளும் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.


காரணம் திமுக அரசு ஆட்சிக்கு வரும்பொழுது 505 வாக்குறுதிகளை கொடுத்தது ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை, குறிப்பாக கூற வேண்டும் என்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை, அதேபோல் முக்கிய வாக்குறுதியான கல்வி கடன் ரத்து, நகை கடன் ரத்து போன்ற வாக்குறுதிகளும் அப்படியே இருக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தாக நீட் தேர்வை ரத்து செய்வோம் எனவும் மதுவிலக்கு கொண்டு வருவோம் என கூறிய இரண்டுமே அப்படியே கிடப்பில் கிடப்பில் போடப்பட்டது. 

இப்படி திமுகவின் முக்கிய வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டதால் மக்கள் கொந்தளிப்பில் இருக்கும் சமயம் மக்கள் வாக்குறுதி எங்கே என கேட்கும் அதே தருணத்தில் இந்தப்பக்கம் சொத்து வரி, மின் கட்டண உயர்வு என அரசு அறிவிப்புகள் மக்களை வாட்டி வதைக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவும் ஒரு அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளிலேயே இரு முறை மின்கட்டணம் உயர்த்தப்படுவது இதுதான் முதல் முறை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழக மின் வாரியம் மின் பயன்பாடு மற்றும் புதிய இணைப்பு கட்டணத்தை உயர்த்த விரும்பியது. அதற்காக, 2022 ஜூலை 18ல், ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பித்தது. இது தொடர்பாக, மக்களிடம் கருத்து கேட்ட பின், 2022 செப்டம்பர் 10 முதல், 35 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி, ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி, வீடுகளுக்கு 400 யூனிட் வரை, 1 யூனிட்டிற்கு, 4.50 ரூபாய்; 401 - 500 வரை யூனிட்டிற்கு 6 ரூபாய்; 501 - 600 வரை யூனிட்டிற்கு 8 ரூபாய்; 601 - 800 வரை யூனிட்டிற்கு 9 ரூபாய்; 801 - 1,000 வரை யூனிட்டிற்கு 10 ரூபாய்; 1,001 மேல் யூனிட்டிற்கு, 11 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டது.

அதற்கு முந்தைய பழைய கட்டணத்தில், வீடுகளுக்கு 1 யூனிட்டுக்கு, 2.50 ரூபாய் முதல் 6.60 ரூபாய் வரை கட்டணம் இருந்தது. உயரழுத்த பிரிவில் பெரிய தொழிற்சாலைகளுக்கான கட்டணம் யூனிட், 6.35 ரூபாயில் இருந்து, 6.75 ரூபாயாகவும்; கிலோ வாட்டிற்கு மாதம், 350 ரூபாயாக இருந்த தேவை கட்டணம், 550 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டது.

இதேபோல், அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இந்நிலையில், கடந்த ஆண்டில் ஆணையம் பிறப்பித்த மின் கட்டண உயர்வு ஆணையில், 2026 - 27 வரை ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, 2023ம் ஆண்டு ஏப்ரல் நிலவரப்படி உள்ள பணவீக்க விகித அளவு அல்லது 6 சதவீதம், இரண்டில் எது குறைவோ, அந்த அளவு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பணவீக்க விகிதம், 4.70 சதவீதமாக உள்ளது. இது, 6 சதவீத அளவுடன் ஒப்பிடும்போது குறைவு. எனவே, அடுத்த மாதம் முதல், அனைத்து பிரிவு கட்டணமும் 4.70 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. அதாவது, தற்போதுள்ள யூனிட் கட்டணம் எவ்வளவோ, அதில் 4.70 சதவீதம் உயரும்.

ஏற்கனவே உயர்த்திய மின் கட்டணத்தை செலுத்த முடியாமல், பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த சூழலில், மீண்டும் மின் கட்டணம் உயர்த்த இருப்பது, மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இன்னும் ஓராண்டு காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இப்படி தொடர்ச்சியாக மக்களின் அதிருப்தியை சம்பாதிப்பது அரசுக்கு நல்லதல்ல என திமுகவின் மூத்த தலைவர்கள் அரசுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். மக்கள் மத்தியில் இது போன்ற அரசின் நடவடிக்கைகள் வரும் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.