ஜூலை 28ஆம் தேதி அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணத்தை தொடங்க இருப்பது திமுகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ள நிலையில் யாத்திரை துவங்கப்படும் அடுத்த தினமான ஜூலை 29ஆம் தேதி அன்று திமுகவின் இளைஞர் அணிகளில் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. அதாவது திமுக கட்சியில் இருக்கும் இளைஞர் அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களில் அறிமுக கூட்டத்தை ஜூலை 29ஆம் தேதி காலை 9 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலையரங்கத்தில் நடத்த உள்ளதாக திமுகவின் இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் புதிய இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து நெருங்கி வரும் தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் களப்பணிகளை செய்யவும் பல திட்டங்களை வகுத்துக் கூறுவதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
திமுகவின் இளைஞர் அணி செயலாளர் என்ற முறையில் உதயநிதி வேறு புதிதாக இளைஞர்களை பதவியில் நியமித்துள்ளார், இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி எதற்கு என்று விசாரித்த பொழுது, வரும் 2024ம் ஆண்டு தேர்தலை திமுக இளைஞரணி குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் எடுத்து நடத்த உள்ளார் எனவும் திமுகவின் மூத்த தலைவர்கள் பலர் ரெய்டு மற்றும் சட்டப் பிரச்சினைகளில் சிக்கி வருவதால் அவர்களை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது, அதில் பல சிக்கல்கள் உள்ளது என்ற காரணத்தினால் இளைஞர் அணியை வைத்து உதயநிதி மூலம் பிரச்சாரத்தை மேற்கொள்ள திமுக தலைமை திட்டமிட்டிருப்பதாக அறிவாலய வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கின்றன.
இதனால் உதயநிதி தலைமையிலான இளைஞரணியை அழைத்து ஒருபுறம் அண்ணாமலையின் யாத்திரைக்கு அரசியல் ரீதியாக பதிலடி கொடுக்கவும் மறுபடியும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு, வாக்காளர் பட்டியல்கள் சரிபார்ப்பு போன்ற பல வேலைகளில் இறங்கி வேகமாக செயல்பட இளைஞர் அணிக்கு அறிவுறுத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது மட்டுமில்லாமல் அண்ணாமலை வசம் தங்கள் பகுதி இளைஞர்கள் செல்லாமல் இருக்க நிறைய கள அளவிலான அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று வேறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாகத்தான் முதல்வர் ஸ்டாலின் இளைஞரணி படையினை அழைத்துள்ளார் என தெரிகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ள இருக்கும் பாதயாத்திரையால் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் தமிழக மக்களின் வாழ்விற்கு ஒரு மறுமலர்ச்சி கொடுக்கும் பாஜகவின் வெற்றி வாய்ப்பிற்கு அது அடித்தளமாக அமையும் என்று அரசியல் வட்டாரங்களில் பாஜகவிற்கு சாதகமான கருத்துக்கள் நிலவி வருவதால், நாமும் அதற்க்கு ஏற்றபடி களத்தில் இளைஞரணி மூலமே பதிலடி கொடுத்து மக்களை நோக்கி வாக்கு கேட்க முடியும் என்று சிந்தித்து இப்படிப்பட்ட திட்டத்தை முதல்வர் செயல்படுத்த உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தகவல்களை கசியவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் திமுகவிற்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட் படி அண்ணாமலையின் நடைபயணத்திற்கு இளைஞர்கள் பெரும் ஆதரவு தெரிவிக்கின்றனர் என்ற செய்தியும் அறிவாலய தரப்பை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதற்காகவே அண்ணாமலை நடைபயணம் தொடங்கப்படும் என்ற அறிவித்த தினத்திற்கு அடுத்த நாளே திமுகவை இளைஞர் அணிகளில் உள்ள அனைவரையும் வர சொல்லி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னைக்கு அழைத்திருப்பதும் அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.