Tamilnadu

ஜெயலலிதா நினைவு நாளில் முக்கிய நிகழ்வை சுட்டி காட்டி "ஸ்பெஷல்"பதிவு போட்ட எழுத்தாளர் !

jayalalitha Memorial Day
jayalalitha Memorial Day

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அவரது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களால் விமர்சையாக அனுசரிக்கப்படும் நிலையில் முக்கிய தகவல்களை குறிப்பிட்டு சில தகவல்களை பகிர்ந்துள்ளார் எழுத்தாளர் சுந்தரராஜ சோழன், இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-


பிரிவினைவாதம்,பிராமண வெறுப்பு,ஹிந்து வெறுப்பு இவை விருட்சமாக வளர்க்கப்பட்டது தமிழக அரசியல் களத்தில்.பழுத்த தேசியவாதிகளின் வழி வந்தவர்கள் எல்லாம் அந்த சுழலில் சிக்கி காணாமல் போனார்கள்.. ஜனநாயகப்படுத்தப்பட்டு,தங்களது பிரிவினை ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும் சக்திகளுக்கும்,தீவிர பிரிவினைவாத சக்திகளுக்கும் இடையேயான யுத்த பூமியாக தமிழகம் மாறியிருக்க எல்லா வாய்ப்பும் இருந்தது.ஆனால்,அதை தேக்கி நிறுத்தியது எம்ஜிஆர் - ஜெயலலிதா என்ற தேசியவாத மாநில சக்திகள்தான்.அதனால்தான் பிரதமர் மோடி இலங்கை சென்று மலையகத் தமிழர்களிடம் பேசும் போது,எம்ஜிஆர் என்ற தேசியத் தலைவரை பாரதத்துக்கு நீங்கள்தான் கொடுத்தீர்கள் என்று பேசினார்.

அதிமுகவுக்கும் திமுகவுக்கும் அமைப்பில்,நடைமுறை அரசியலில் பெரிய வேறுபாடு இல்லை.ஆனால் அவர்களுடைய தேசிய பார்வையிலும்,வாக்காளர்களின் மனநிலையிலும் பெருத்த வேறுபாடு உண்டு.திமுகவின் மூல வாக்குகள் தீவிரமான திராவிட கொள்கைகளின் மீது கட்டியெழுப்பப்பட்டது,அதற்குள் சாதிய அணி சேர்ப்புகளும், வெறுப்பரசியல் வாக்குகளும் உண்டு.

அதிமுகவின் வாக்குகள் ஹிந்து வெறுப்பு,பிராமண வெறுப்பு,பிரிவினை போன்றவற்றை அடிப்படையிலேயே மறுக்கிற அல்லது அதைப்பற்றிய அறிதலே இல்லாதவர்களால் உருவானது.திராவிட சிந்தனை கொண்டவர்கள் அதிமுகவிலும் இருந்தார்கள்,இருக்கிறார்கள் ஆயினும் அந்த சிந்தனை கொண்ட வாக்காளர்கள் அதிமுகவுக்கு கிடையாது.

இன்றும் 'பாரதப் பிரதமர்' என்று ஓபிஎஸ் - இபிஎஸ் சொல்வது ஒரு தற்செயல் நிகழ்வல்ல.அதுதான் அந்த கட்சியின் மனநிலை,இது ஒற்றை பாரதம் என்பதில் அங்கே யாருக்கும் குழப்பமில்லை.கிட்டத்தட்ட 40% தேசியவாத வாக்குகள் தமிழகத்தில் உள்ளது என்பதையே அதிமுகதான் மீண்டும் மீண்டும் உறுதி செய்கிறது. எப்போதும் திமுக எதிர்ப்பு,2009 க்கு மேல் தீவிர காங்கிரஸ் எதிர்ப்பு என்றுதான் தனது வாக்காளர்களை தயார்படுத்தியுள்ளார் செல்வி.ஜெயலலிதா.காங்கிரஸ் - திமுகவை வீழ்த்துவது இன்னொரு சுதந்திரப் போர் என வர்ணித்தார்.பாஜக ஆதரவு தரப்புகளையும், பாஜகவையும்தான் தனக்கு இணக்க சக்திகளாக கருதினார்.

திராவிட கட்சிகளில் பெரியாருக்கு இருந்த முக்கியத்துவத்தை தள்ளி வைத்து,அந்த இடத்திற்கு முத்துராமலிங்கத்தேவரின் அடையாள அரசியலை கொண்டு வந்தார் செல்வி.ஜெயலலிதா. நேரிடையாகவே குருபூஜையில் கலந்து கொண்டார்.இதை வெறுமனே Backing community அரசியல் என்று சுருக்க முடியவில்லை. 'தேசியமும் - தெய்வீகமும்' எனது இரு கண்கள் என்று சொல்லக்கூடிய தத்துவத் தலைமை ஒன்று செல்வி.ஜெவிற்கு தேவைப்பட்டுள்ளது. அந்த இடத்தை முத்துராமலிங்கதேவரை வைத்து நிரப்புவது தனது அரசியலுக்கு எல்லா வகையிலும் லாபமென்றே கருதியிருக்கிறார்.ஒருவேளை அம்மையார் மட்டும் பிராமணரல்லாத சமூகமாக இருந்திருந்தால்,வருடா வருடம் பெரியார் படத்துக்கு 'பூ' போடுவதைக் கூட நிறுத்தியிருக்கவே வாய்ப்பதிகம்.நிற்க.

அதிமுக என்கிற கட்சியின் அமைப்பு மற்றும் பொறுப்பாளர்களை விட அந்த கட்சியின் வாக்காளர்கள் அதீத திமுக எதிர்ப்பாளர்கள். அதே போல தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மோடி வெறுப்பில்லை என்பதே உண்மை.இன்னும் சொல்லப் போனால் திமுகவை மோடி எதிர்ப்பதே இல்லை என்கிற கோவம் மட்டும்தான் உள்ளது. அதை இப்போதுதான் திரு.அண்ணாமலை போக்கி வருகிறார். வருங்காலத்தில் திமுக - காங்கிரஸ் எதிர்ப்பில் அதிமுக வாக்காளர்கள்தான் மிக முக்கியமான அரசியல் மாற்றத்தை தமிழகத்தில் உண்டு செய்வார்கள். தேசியத்தை நோக்கி அவர்களை நகர விடாமல் தடுக்கும் சக்திகளை உடைத்தெறிந்து அவர்கள் அதை செய்து முடிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார் சுந்தரராஜ சோழன்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.