சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய வழக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மேலும் அமலாக்கத் துறையினரின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் மூன்றாவது நீதிபதியான சி.வி . கார்த்திகேயன் செந்தில் பாலாஜியின் மருத்துவமனை காலத்தை நீதிமன்ற காவலாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மேலும் செந்தில் பாலாஜி குணமடைந்த உடன் அமலாக்கத் துறை விசாரணை நடத்தும் என்றும் அதிரடியான தீர்ப்பை வெளியிட்டார்.
மூன்றாம் நீதிபதியின் இந்த தீர்ப்பு செந்தில் பாலாஜி தரப்பில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.மேலும் கடந்த சில நாட்களாக வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத் துறையினரின் பிடியில் சிக்கியிருந்த செந்தில் பாலாஜி தற்போது ஒரு வழியாக புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை செந்தில் பாலாஜியின் வழக்கில் போராடி ஒரு வழியாக செந்தில் பாலாஜியை புழல் சிறைக்கு அனுப்பியது செந்தில் பாலாஜி தரப்பினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புழல் சிறையில் அவரை பரிசோதித்த மருத்துவர் செந்தில்பாலாஜி புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் கண்காணிக்கப்படுவார் என்றும் முழுமையாக குணமடைந்தவுடன் அவருக்கு ஒதுக்கப்பட்ட தனி அறைக்கு மாற்றப்படுவார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அடுத்தபடியாக மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக முத்துசாமி பொறுப்பேற்றவுடன் டாஸ்மாக் விவகாரங்களை சற்று கூடுதலாகவே கவனித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பாக காலையில் மது அருந்தும் மது பிரியர்களுக்கு காலை 7 மணி முதல் கடை திறக்கப்படும் என்றும் 90மிலி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு பல விமர்சனங்களை கிளப்ப , நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி, வழக்கம் போல் கடை 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று மறு அறிவிப்பு வெளியிட்டார்.
இதன் பின்னணியை விசாரித்து பார்த்தால் ஏற்கனவே டாஸ்மாக் விவகாரத்தில் முறைகேடு செய்த காரணத்தினால் தான் ஒருவர் காவேரி மருத்துவமனையில் இருந்து மாற்றப்பட்டு புழல் சிறையில் உள்ளார்.தற்போது தானும் இதில் சிக்கினால் பிரச்சனை என்று தெரிந்து டாஸ்மாக் விவகாரத்தில் சற்று கூடுதல் கவனத்துடன் உள்ளார்..மேலும் சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் முத்துசாமி காலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று கூறக்கூடாது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது அறிவாலய தலைமையை கோபத்தில் ஆழ்த்தியது. மேலும் இது போன்ற சர்ச்சைக்குரிய விவகாரத்தில் பேட்டி அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவாலய தலைமை கடிந்து கொண்டதன் காரணமாக நல்ல பெயர் எடுக்கும் விதத்தில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 அல்லது அதிக விலைக்கு விற்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதன் பின்னணியில் டாஸ்மாக் விவகாரத்தில் இனி எந்த சர்ச்சையும் ஏற்பட்டுவிடக்கூடாது என அமைச்சர் முத்துசாமி தரப்பு கூடுதல் கவனத்துடன் இருந்த வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருக்கிற பதவியும் போய்விடுமோ என்ற பயத்தில் போதும்டா சாமி என்று பதறி அறிக்கை வேறு வெளியிட்டுள்ளார் அமைச்சர் முத்துசாமி.