24 special

பாஜகவில் இருந்து விடைப்பெற்றார் திருச்சி சூர்யா...!போகும் முன்பு அண்ணாமலைக்கு அலர்ட் மெசேஜ்..!

Suriya annamalai
Suriya annamalai

சமீபத்தில் பாஜக பெண் நிர்வாகியை தரக்குறைவாக பேசிய ஆடியோ வெளியானதை அடுத்து கட்சியில் இருந்து 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருச்சி சூர்யா, இன்று கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளது பாஜகவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 


திமுக எம்.பியான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா கடந்த மே மாதம் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதி அன்று, பாஜகவின் சிறுபான்மையினர் அணித் தலைவரான டெய்சி சரணை திருச்சி சூர்யா ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. 

இந்த ஆடியோ பாஜக மீது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து கட்சி தலைமை இந்த ஆடியோ தொடர்புடைய சூர்யா, டெய்சி ஆகிய இருவருரிடமும் விசாரணை மேற்கொண்டது. தொடர்ந்து, சூர்யா, டெய்சி இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பிரச்சனையை சுமூகமாக முடித்துக்கொள்வதாகவும், இதற்கு முன்பு அக்கா - தம்பி போல் இருந்ததாகவும் பேசி சமாதானம் செய்து கொண்டனர். இருப்பினும் திருச்சி சூர்யாவிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அவரை 6 மாதத்திற்கு கட்சியில் இருந்து விலக்கி வைப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். 

அந்த அறிக்கையில், பெண்களை இழிவுபடுத்துவதை பாஜக ஒருபோதும் ஏற்காது என்றும், சுமூக செல்வதாக சொன்னாலும் அதை மாநில தலைவராக தான் ஏற்க மறுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதேசமயம் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும், தொண்டனாக தொடர்ந்து செயல்பட திருச்சி சூர்யாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார். 

இதற்கும் சூர்யா, தன்மீது தலைவர் அண்ணாமலை எடுத்த நடவடிக்கையை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் மீண்டும் அவர் நம்பிக்கையை பெற்று மீட்டு வருவேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் இப்போது கட்சியை விட்டு விலகுவதாக திருச்சி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திருச்சி சூர்யா, “அண்ணன் அண்ணாமலைக்கு நன்றி, இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும்.

அதை அடைய வேண்டும் என்றால் கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.