Tamilnadu

புகைப்படம் குறித்த "சர்ச்சை" விளக்கம் அளித்த வானதி ஸ்ரீனிவாசன்!

vanathi srinivasan
vanathi srinivasan

டெல்லி செல்லாமல் வானதி ஸ்ரீனிவாசன் புகைப்படத்தை பகிர்ந்ததாக சிலர் கிண்டல் செய்துவந்த நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் விளக்கம் கொடுத்துள்ளார்.


இதுகுறித்து வானதி தெரிவித்ததாவது :- தனது பதிவு ஃபோட்டோஷாப் என கிண்டல் செய்யப்படுவது குறித்து வானதி சீனிவாசன், ” நான் டெல்லி சென்றது உண்மைதான். ஆனால், குழு புகைப்படம் எடுக்கும் போது சற்று தாமதமாக சென்றதால் பலரும் பஸ்ஸில் ஏறிவிட்டனர். இதனால் ஒரு நினைவுக்காக, தன்னை போட்டோகிராபர் தனியாக புகைப்படம் எடுத்து குழு புகைப்படத்துடன் இணைத்துக் கொடுத்ததாக ” பதில் அளித்து இருக்கிறார்.

டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்றுவந்தது குறித்து வானதி தெரிவித்த முழு விளக்கம் பின்வருமாறு :- 

நவம்பர் 4-ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகையை எனது கோவை தெற்கு தொகுதி மக்களோடு கொண்டாடினேன். கோவையிலிருந்து நவம்பர் 5-ம் தேதி இரவு சென்னை வந்து, 6-ம் தேதி காலையில் விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தேன். 

 நவம்பர் 7-ம் தேதி பாஜக தேசிய செயற்குழு கூட்டம் என்பதால் கட்சியின் தேசிய தலைமை அலுவலகத்தில் சில ஆலோசனைக் கூட்டங்கள் இருந்தன. தேசிய மகளிரணி சார்பில் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுத்தல், புதிய நிர்வாகிகளை அறிவித்தல் போன்ற பணிகள்  இருந்தன. இது தொடர்பாக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் திரு. பி.எல்.சந்தோஷ் அவர்களுடன் ஆலோசனை நடத்தினோம்.

பாஜக தேசிய நிர்வாகிகள் அனைவரும் நவம்பர் 6-ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு கட்சியின் தேசிய தலைமை அலுவலகத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று காலையில் தகவல் வந்தது. என்னவென்று கேட்டபோது, தீபாவளி பண்டிகையையொட்டி தேசிய நிர்வாகிகள் 42 பேருக்கும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து ஏற்பாடாகியுள்ளதாக தெரிவித்தனர். 

டெல்லி தீன்தயாள் மார்க் பகுதியில் உள்ள பாஜக தேசியத் தலைமை அலுவலகத்தில் இருந்து அனைவரும் ஒரே பேருந்தில் 20 நிமிட பயணத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையை வந்தடைந்தோம். முன்னாள் முதல்வர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் திரு. பி.எல்.சந்தோஷ் என்று அனைவரும் கலகலப்பாக உரையாடியவாறு பேருந்தில் பயணித்து குடியரசுத் தலைவர் மாளிகையை வந்தடைந்தோம். 

தேசிய நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் அவர்களிடம், பாஜக தேசியத் தலைவர் திரு. ஜெ.பி.நட்டா அவர்கள் அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு நிர்வாகிக்கும் தனித்தனி மேஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மால்டா மாம்பழச் சாறு (Fresh Mango Juice In Malda), டார்ஜிலிங் தேநீர் (Darjeeling Tea), காஷ்மீர் குங்குமப்பூ கொண்டு தயாரிக்கப்பட்ட குலோப்ஜாமூன் (Gulab Jamun), டோக்லா (Dhokla), சமோசா (Samosa) என்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரபலமான உணவு வகைகளை பரிமாறப்பட்டன.

பின்னர், எங்கள் அனைவரையும் நான்கு குழுக்களாகப் பிரித்து குடியரசுத் தலைவர் மாளிகையை சுற்றிக் காட்ட அழைத்துச் சென்றனர். ஒவ்வொரு குழுவிலும் 10 பேர் இருந்தோம். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு வழிகாட்டி. முதலில் அசோகா அரங்கத்திற்குச் சென்றோம். குடியரசுத் தலைவர் மாளிகையிலேயே மிக அழகான அரங்கம். ஆரம்ப காலத்தில் இந்த இடம் நடன அரங்கமாக இருந்திருக்கிறது. அதனால், நடனமாடுவதற்கு வசதியாக இந்த அரங்கின் தரைப் பகுதி மரப்பலகைகளால் அமைக்கப்பட்டு அதற்கு கீழே ஸ்பிரிங் கொடுக்கப்பட்டுள்ளது. மரப்பலகை மேலே நுண்ணிய வேலைப்பாடுகளுடன், கலைநயமிக்க காஷ்மீரி தரைவிரிப்பு விரிக்கப்பட்டுள்ளது. இந்த தரை விரிப்பு, 500 காஷ்மீரி கலைஞர்களால் 2 ஆண்டுகள் உழைப்பில் தயாரிக்கப்பட்டதாக வழிகாட்டி எங்களிடம் கூறினார். இந்த அரங்கில் மேற்பகுதியில் வரையப்பட்ட ஓவியங்களில் பாரசீக மன்னர்களின் வேட்டை காட்சிகள், எழுத்துக்கள் நம்மை ஈர்க்கின்றன.

300-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பில் எட்வின் லுட்யென்ஸ் என்ற கட்டிட வடிவமைப்பாளரால் இந்த மாளிகை வடிவமைக்கப்பட்டது. ஆங்கிலேய கவர்னர் ஜெனரலுக்காக கட்டப்பட்ட இந்த மாளிகை, நாட்டின் விடுதலைக்குப் பிறகு குடியரசுத் தலைவர் இல்லமாக மாறியது. கட்டிடம், தூண்கள் என்று அனைத்தும் வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது இந்த மாளிகையின் சிறப்பம்சம் என்ற எங்களின் வழிகாட்டி தெரிவித்தார்.

இந்து, புத்த, சமண மதக் கோயில்களின் வடிவங்களையும், ராஜஸ்தான் அரண்மனைகளின் கட்டிடப் பாணியையும் மாதிரியாகக் கொண்ட இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளது. அசோகா அரங்கத்தில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.  கலைநயம் மிக்க நுண்ணிய வேலைப்பாடுகள் மிக்க நாற்காலிகள், மேஜைகளை பார்த்து வியந்தோம். குடியரசுத் தலைவர் மாளிகையில் காணப்படும் ஓவியங்கள் குறிப்பாக ஒவ்வொரு அறையிலும், அரங்கிலும் மேற்பகுதியில் தீட்டப்பட்டுள்ள எங்களை மிகவும் ஈர்த்தது.

இதுதவிர நர்மதை, காவிரி, கோதாவரி என்று பெயர் சூட்டப்பட்ட சிறுசிறு அரங்குகள் நிறைய உள்ளன. வெளிநாட்டுத் தலைவர்கள் சந்திப்பு,  நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு இந்த அரங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. மஞ்சள் நிற வண்ணம் பூசப்பட்டு, ஜெய்சால்மர் மார்பிள் கற்கள் பதிக்கப்பட்ட அரங்கத்தையும் சுற்றிப் பார்த்தோம். அஞ்சல் தலை வெளியீடு போன்ற நிகழ்வுகள் இங்கு நடைபெறுகின்றன. 

பத்ம விருதுகள் வழங்கும் விழா, பிரதமர் பதவியேற்பு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் தர்பார் அரங்கையும் பார்த்தோம்.  இந்த அரங்கில் ஏராளமான சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்துள்ளன. பிறகு  அந்தச் சிலைகள் அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்ட போது நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் விருப்பப்படி புத்தர் சிலை மட்டும் இந்த அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தர் சிலையின் பாதமும், இந்தியா கேட்டின் மேற்கூரையும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கின்றன. இந்தியா கேட்டின் உயரத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையின் தர்பார் அரங்கம் இருப்பதை இதன் மூலம் நாம் கற்பனை செய்து பார்க்கலாம். 

தர்பார் அரங்கில் உள்ள ஒரு நேர்கோடு குடியரசுத் தலைவர் மாளிகையை, வடக்கு -  தெற்காக பிரிக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டுதான் வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி என்று டெல்லி மாநகரைப் பார்த்திருக்கிறார்கள். குடியரசுத்தலைவர் மாளிகையின் பின்னால் இருக்கும் இந்த தகவல்கள் சுவாரசியமாக இருக்கின்றன.

குடியரசுத் தலைவர் மாளிகையில் அனைத்து இடங்களிலும் கலைநயம் மிக்க சிலைகள், ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் பார்த்து விட்டு புகழ்பெற்ற மொகல் பூங்காவையும் பார்த்து ரசித்தோம். இந்த பூங்கா ஆண்டில் சில மாதங்கள் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகின்றன.

இறுதியாக குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். நமது சட்ட மசோதாக்கள் இங்குதான் கையெழுத்தாகின்றன என்றபோது பெருமிதமாக இருந்தது. அங்கிருக்கும் சிலைகள், முப்படைகளின் சின்னங்களை வியப்புடன், பெருமிதத்துடன் பார்த்தோம். அன்னப் பறவையுடன் கூடிய வெள்ளியால் செய்யப்பட்ட சரஸ்வதி சிலை என்னை மிகவும் கவர்ந்தது. அதற்கு அருகில் சிறு கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டிருந்த அயோத்தி ராமர் சிலையும் கண்ணைக் கவர்ந்தது. 

சிலைகள், ஓவியங்கள், மரப் பொருள்கள், தரை விரிப்புகள் என்று குடியரசுத் தலைவர் மாளிகையின் பிரம்மாண்டம், கலைநயம், அழகை வழிகாட்டி விவரிக்க விவரிக்க பார்த்து ரசிக்க கிடைத்த எதிர்பாராத வாய்ப்பு வாழ்வில் மறக்க முடியாத பேரனுபவம்.என குறிப்பிட்டுள்ளார் வானதி .