Tamilnadu

ரொட்டி கேட்டால் கல்லு கொடுக்கிறார்கள் வீரமணி ஆவேசம்.. நினைப்பு எல்லாம் சோற்றில் தான்..!

Veeramani
Veeramani

திராவிட கழக தலைவர் வீரமணி மத்திய பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்துள்ளார் ஆனால் அவர் தலைப்பில் ரொட்டி - கல் என குறிப்பிட்டு இருப்பது நெட்டிசன்கள் விரித்த வலையில் அவரே சிக்குவது போன்று அமைந்துவிட்டது.


இது குறித்து பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர் வீரமணி குறிப்பிட்ட கருத்து பின்வருமாறு :-கேட்டது ரொட்டி - கிடைத்தது கல்!

ஒன்றிய அரசின் 2022-2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நேற்று (1.2.2022) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

வாணவேடிக்கை - மத்தாப்புக் கொளுத்திடும் வெளிச்சம் போட்ட பட்ஜெட் இந்தப் ‘பட்ஜெட்' - ஏழை, எளியவர்கள், நடுத்தர வகுப்பு மக்கள்,  விவசாயிகள், இளைஞர்கள் இவர்களுக்கு - தற்போது ஏற்பட்டுள்ள வறுமை, வேலை கிட்டாத வேதனை, விலைவாசி ஏற்றத்தைத் தடுத்தல் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஏதுமில்லாதது - இது வெறும் வாணவேடிக்கை - மத்தாப்புக் கொளுத்திடும் வெளிச்சம் போட்ட பட்ஜெட் என்ற பெருத்த ஏமாற்றுதலை அளித்துள்ளது.

எதிர்பார்ப்பு, நம்பிக்கையோடு இருந்த நடுத்தர மக்கள் - வருமான வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினருக்குக்கூட எதுவும் கிடைக்கவில்லை.

வருமான வரி - வரிவிலக்கு அளவு உயர்த்தப்பட்டு, நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்களுடைய எண்ணங்கள் அறவே ஈடேறாத கனவாகவே - கானல் நீர் வேட்டையாகவே முடிந்துள்ளன.

வேலையில்லாத் திண்டாட்டத்தின் - வேதனையின் உச்சத்தில் இருக்கும் இளைஞர் பட்டாளத்தின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது.

விலைவாசி ஏற்றமோ விண்ணை முட்டும் நிலை!விலைவாசி ஏற்றமோ விண்ணை முட்டும் நிலை நாளுக்கு நாள் வளர்ந்து, பண வீக்கம் கட்டுப்படுத்தப்படாத நிலைக்குப் பரிகாரம்  ஏதும் தென்படவே இல்லை.

பிரதமர் மோடி பதவியேற்று 8 ஆண்டுகளாகியும் பெருத்த வளர்ச்சி ஏதும் இல்லை என்பதோடு, கிராமப்புற ஏழைகளுக்கு மகாத்மா காந்தி வேலை வாய்ப்புக்கான திட்டத்தில் நிதி ஒதுக்கீடும் இவ்வாண்டு குறைக்கப்பட்டே உள்ளது! (25 சதவிகிதம் குறைக்கப்பட்டு, ரூ.73000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது- ஏற்கெனவே ரூ.98,000 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது).

அதுமட்டுமல்ல, நாட்டில் கரோனா கொடுந்தொற்று பல ரூபங்களில் நாளும் அச்சுறுத்தும் நிலையில், ஒன்றிய அரசின் பட்ஜெட்டில், சுகாதாரத்திற்கென ஒதுக்கப்பட்ட தொகையை மேலும் பெருக்கி, மருத்துவ அடிக்கட்டுமானத்தை பன்மடங்கு இப்போது இருப்பதைவிட வலுவாக்கி, மாநிலங்கள்தான் மக்களிடம் நேரடித் தொடர்புள்ள அரசுகள் என்பதால், அவற்றின் சுகாதார அடிக்கட்டுமானத்தையும் மேலும் பெருக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு அமைவதற்குப் பதிலாக, சென்ற ஆண்டைவிட நிதி ஒதுக்கீடு  சிறிதளவே கூட்டியிருப்பதும் பொருத்தமானதாகத் தெரியவில்லை.

பிரதமர் மோடி தனது பட்ஜெட்டை தானே பாராட்டிக் கொள்வதோடு, இது மிகுந்த நம்பிக்கையளிப்பதாக உள்ளது என்றும் கூறுகிறார்!பெருமுதலாளிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்துள்ள பட்ஜெட்

ஆம், உண்மைதான், ‘‘நம்பிக்கை அளிப்பதாக உள்ளது'' - யாருக்கு என்பதுதான் நம் கேள்வி. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இது பெருத்த நம்பிக்கையை ஊட்டிப் பெருமுதலாளிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்துள்ள பட்ஜெட்.

இல்லையென்றால், வருமான வரியில்கூட நடுத்தர வகுப்பினருக்கு வருமான வரிச் சலுகை காட்டாது, கடந்த 8 ஆண்டுகளாகவே அதே நிலையில் - எதிர்பார்ப்புகளை ஏமாற்றம் அடையச் செய்த நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சென்ற முறை விதிக்கப்பட்டிருந்த 12 சதவிகித  ‘சர் சார்ஜ்' கட்டணத்தை 7 சதவிகிதமாகக் குறைத்து, ‘‘கஷ்டப்படும்'' கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் ‘‘கருணை'' காட்டியுள்ளார்  - 'Empathy' பற்றி எடுத்த எடுப்பில் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ள நிதியமைச்சர்!

அதைவிட, ஆர்.எஸ்.எஸ். கொள்கையான மாநிலங்களே இல்லாமல், கூட்டாட்சித் தத்துவத்திற்குக் குழிதோண்டிப் புதைக்கும் தொடர் பணியை இந்த பட்ஜெட்டிலும் மேலும் மேலும் மாநில  உரிமைப் பறிப்புகள்மூலம் திட்டமிட்டே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நிறைவேற்றி வருகின்றது - மோடி தலைமையிலான ஒன்றிய அரசு.

கூட்டாட்சித் தத்துவத்தை வெட்டிக் கூறுபோடுகிறது‘ஒரே நாடு, ஒரே பத்திரப் பதிவு' என்று கூறி, மாநில அதிகாரத்தை - பத்திரப் பதிவுத் துறையில் பறித்துள்ளதானது - கூட்டாட்சித் தத்துவத்தை வெட்டிக் கூறுபோடுவதல்லாமல், வேறு என்ன?

நம் நாட்டின் பன்முக கலாச்சாரம், பண்பு என்பதை சிதைத்து, தன்முகம் காட்டும் ஹிந்துராஷ்ட்டிர ஒற்றை அரசாகக் காட்சி அளிக்கும் வண்ணம், பட்ஜெட் அக்கொள்கைக்கான கொடு வாளாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது!

தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்து தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதனைப் பளிச்சென்று சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாட்டு வளர்ச்சித் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பட்ஜெட், பணக்காரர்களுக்கான, கார்ப்பரேட் கனவான்களுக்குப் பன்னீர் தெளிக்கும் பட்ஜெட்டே!

நாளும் வறுமையிலும், பேதத்திலும், விலைவாசி உயர்வு, வேலை கிட்டாத கொடுமை இவற்றில் துன்புறுவோருக்குத் துயரத்தையும், சிறு குறு தொழில் முனைவோருக்குப் பெருத்த ஏமாற்றத்தையும், அவதியையும் தருவதோடு, வளர்ச்சி எங்கே - ‘‘சப்கா சாத் சப்கா விகாஸ்'' என்று முழங்கினீர்களே, வளர்ச்சி  எங்கே? எல்லாம் தேய் பிறையாகத்தானே உள்ளது'' என்று ஏழைகள் குமுறுகின்ற நிலை!

வேதனைத் தேள் - எளிய மக்களைக் கொட்டுவதாக உள்ளது! 25 ஆண்டுகளுக்குப் பிறகு ‘‘எப்படி இந்தியா ஜொலிக்கப் போகிறது தெரியுமா!'' என்று வித்தை காட்டும் விபரீதம் மிஞ்சியிருப்பது வேதனைத் தேள் - எளிய மக்களைக் கொட்டுவதாக உள்ளது!

பிரெஞ்சுப் புரட்சியின்போது மேரி அண்டாயினெட் என்ற இராணி, ‘ரொட்டி கிடைக்கவில்லையே' என்று அழுது புலம்பி ஓலமிட்ட தன் குடிமக்களைப் பார்த்து, ‘ரொட்டி கிடைக்கவில்லையா? அப்படியானால், கேக் சாப்பிடுங்கள்' என்று சொன்ன கதைதான் - இந்தப் பட்ஜெட் புஸ்வாணத்தைப் பார்த்தும், படித்தபோதும் நமக்கு நினைவுக்கு வருகிறது!

கேட்டது ரொட்டி; கிடைத்தது கல்! ஏழைக் குடிசைகள் வளர்ந்துள்ள பகுதியில், ஒரு அரண்மனை அமைப்பதுடன், பல உறுதியும், திட்டங்களும் அறிவிக்கப்பட்டு, 25 ஆண்டுகளுக்குப் பின் அவை பலன் தரும் என்று கூறியுள்ளது! கேட்டது ரொட்டி; கிடைத்தது கல் இதுதான் இந்த பட்ஜெட் என குறிப்பிட்டுள்ளார்.

வீரமணி அவர்களை ஓசி சோறு என சிலர் கிண்டல் அடித்து வருகிறார்கள் தற்போது அவரே ரொட்டிகள் என பேசி இருப்பது அவர்களின் விமர்சனத்தை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்திருக்கிறது என அவரது பதிவிற்கு கீழேயே நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.