24 special

என்னா பேச்சு பேசின… இப்ப வா உன்ன… குற்றவாளிகளை மடக்கி மடக்கி லாடம் கட்டிய போலீஸ் ஹீரோக்கள் !

tiruvanamalai
tiruvanamalai

தமிழகத்தில் மிக பெரிய நடவடிக்கைகளுக்கு தமிழக காவல்துறை தயாராகி இருப்பது அதன் இரண்டு நாள் செயல்பாடுகள் மூலம் தெரியவந்து இருக்கிறது குறிப்பாக அஜித் பட சினிமா பாணியில் சுமார் 7 தனிப்படை 200 காவலர்கள் அதிரடி படையும் இணைந்து நடத்திய வேட்டை தான் ஒட்டுமொத்த தமிழக காவல்துறையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காவல் நிலையம் எதிரில் ஜனவரி 27 ஆம் தேதி விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் காவல் துறையினருக்கு எதிராக கோஷமிட்டனர்.“காவல் நாயே காவல் நாயே வெளியே வாடா தைரியம் இருந்தால் வெளியே வாடா, அன்றைக்குக் குதித்தாயே, இன்றைக்கு எங்கே ஆளைக் காணோம் காவல் துறையே, மாமூல் வாங்கி குடும்பம் நடத்தும் காவல் துறையே என காவல் துறையினருக்கு எதிராக ஒருமையிலும் தரக்குறைவாகவும் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.

காவல்துறையினரையே  இவ்வாறு இழிவாக பேசிய விவகாரம் மேலிடத்துக்குத் தெரியவர, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவும் திருவண்ணாமலை போலீசுக்கு வந்தது அவ்வளவுதான் கைகள் அவிழ்த்து விடப்பட்டதை அறிந்த காவல்துறை திரைப்பட பாணியில் உடனடியாக செயல்பட்டது வடக்கு மண்டல ஐஜி கண்ணன், திருவண்ணாமலை எஸ்.பி கார்த்திகேயன் மற்றும் வேலூர் டிஐஜிக்கு, காவல்துறையினரை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியவர்களை எப்படி கையாளவுது என ஆலோசனை வழங்க 

மறுபக்கம் ஒரு காவல் ஆய்வாளர், இரண்டு எஸ்ஐ மற்றும் போலீசார் அடங்கிய 7 குழு அமைக்கப்பட்டு களத்திற்கு தயாராக இருந்தது, அதே போல் அண்டை மாவட்டமான திருப்பத்தூர் மாவட்டத்தலிருந்து இரு குழுக்கள், உள்ளூர் போலீசார் 25 பேர், பட்டாலியன் போலீசார் 50 பேர், ஆயுதப்படை போலீசார் 45 என மொத்தம் 200 போலீசார் கடந்த ஜனவரி 28ஆம் தேதி தேடுதல் வேட்டையில் இறங்கினர்....

ஒவ்வொரு குழுவுக்கும் எஸ்.பி கார்த்திகேயன் அடுத்தடுத்து உத்தரவுகளை வழங்கி வந்து இருக்கிறார் அதன்படி போலீசாருக்கு எதிராக கோஷமிட்ட வீடியோவில் உள்ளவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள் என கண்டுபிடித்து அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி போலீசார் பறந்தனர்.

ஜனவரி 29 அதிகாலை வரை 12 விசிக நிர்வாகிகளை பிடித்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்துவிட்டு வாக்குமூலம் பெற்றனர், அதில் ஒரு வாலிபர், “சார் நான் தனியார் நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் வாங்குகிறேன், அன்றைக்கு மதிகெட்டு வந்துவிட்டேன் தேவையில்லாமல் இந்த செயலை செய்து விட்டேன் என்னை விட்டு விடுங்கள் எனக்கு கட்சியே தேவையியில்லை வேலை தான் முக்கியம் வேலை போனது என்றால் வீட்டில் அனைவரும் பட்டினி தான் என கதறி இருக்கிறார்.

மேலும் அனைத்துக்கும் வந்தவாசியை சேர்ந்த  அருண் மற்றும் பனையூரை சேர்ந்த கன்னியப்பன் ஆகிய இருவர்தான் காரணம்” என கைதானவர்கள் கூற கைது செய்யப்பட்டவர்களை நஅன்று இரவே போளூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி, போலீசார் சிறையில் அடைத்தனர்.

அடுத்தக்கட்டமாக தலைமறைவாக இருப்பவர்களை கைது செய்வது அவருக்கு உதவும் நபர்களை விரட்டி பிடிப்பது என்ற ஆலோசனையில் போலீசார் இறங்க தலைமறைவான பலர் தாங்களாக முன்வந்து காவல் நிலையத்தில் சரண் அடைந்து இருக்கின்றனர்.இது ஒருபுறம் என்றால் இத்தனை பிரச்சனைக்கும் காரணம் என்ன என்பது தெரியவந்து இருக்கிறது, அதற்கு முழுக்க முழுக்க காவல் நிலையத்தில் நடைபெற்ற சம்பவத்தை கெத்து காட்டுவதாக எண்ணி விசிகவினர் பகிர்ந்த விடியோவே காரணமாம்.

“ஆரணி டவுன் காவல் நிலையத்தில் சிவில் பிரச்சினை சம்பந்தமாக புகார் வந்துள்ளது. அந்த புகாரை எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி சிஎஸ்ஆர் போட்டு விசாரித்து வந்தார். அப்போது விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்று, எஸ் ஐ கிருஷ்ணமூர்த்தியிடம் வாக்கு வாதம் செய்தார்.எஸ் ஐ கிருஷ்ணமூர்த்தியை பார்த்து, “ஒரே சாதி… நீ சாதிக்காரனுக்கு எதிராக செயல்படுற. நான் பார்த்துக்கிறேன், என்னை யார் என்று காட்றேன்” என்று மிரட்டலாக பேசியதை விசிகவினரே வீடியோ எடுத்து முகநூல் பக்கத்தில் பதிவு செய்துவிட்டனர்.

இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிந்து காவல்நிலையத்திற்குள்ளே வந்து மிரட்டுகிறான், அவனை உடனே கைது செய்யுங்கள் என்று உத்தரவிட்டனர்.அதன்படி எஸ்பி கார்த்திகேயன் பலத்த போலீஸ் படையுடன் வந்து பல எதிர்ப்புகள் போராட்டங்களை மீறி ஜனவரி 7ஆம் தேதி விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கரனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

சிறையிலிருந்து 20 நாட்களுக்குப் பிறகு பாஸ்கரன் பிணையில் வந்தபோதுதான் தனது பலத்தைக் காட்டும் வகையில் காவல் துறையினருக்கு எதிராகவும் அச்சுறுத்தும் வகையிலும் கோஷம் எழுப்பினர்.இதையடுத்துதான் நேற்று முன் தினம் இரவு தொடங்கி விடிய விடியத் தேடுதல் வேட்டை நடத்தி விசிகவினரை கைது செய்தோம்” என்கின்றனர் திருவண்ணாமலை போலீசார் வட்டாரங்கள்.

ஆரணி மக்கள் இந்த சம்பவங்களை நேரில் பார்ப்பது சினிமாவை பார்ப்பது போல இருக்கிறது விசிகவினர் மட்டுமின்றி எந்த கட்சியினர் இது போல் அத்துமீறி செயல்பட்டாலும் அவர்களை இதே போல் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்பாக உள்ளது.