Tamilnadu

முதல்வருக்கு சென்ற ரிப்போர்ட் பரபரப்பில் அறிவாலயம் என்ன நடந்தது ?

mk stalin . kathir anand and devaraj
mk stalin . kathir anand and devaraj

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. பல இடங்களில் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையை ஆளும் கட்சியான திமுகவின் தேர்தல் நேர செயல்பாடுகள் உறுதி செய்தன. இந்த சூழலில் இந்த தேர்தல் வெற்றியில் பஞ்சாயத்துக்களுக்கும் குறைவில்லை.


அப்படி ஒரு சம்பவம் தான் ஆலங்காயம் ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்றுவதில் அரங்கேறியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்றுவதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மற்றும் மாவட்ட செயலாளர் தேவராஜ் ஆகிய இருவருக்கும் தங்கள் ஆதரவாளர்களை ஒன்றிய தலைவராக தேர்ந்து எடுக்க போட்டா போட்டி போட்டதாகவும், இறுதியில் தேவராஜ் தரப்பு சாலையில் அமர்ந்து கதிர் ஆனந்த்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் இது குறித்த வீடியோ காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகி கட்சியினரிடையே சலசலப்பை உண்டாக்கியது. நடைப்பெற்ற உட்கட்சி சம்பவம் குறித்து திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் கவனத்திற்கு சென்ற நிலையில், என்னதான் நடந்தது என TNNEWS24 தரப்பில் ஆலங்காயம் திமுக நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தோம். அவர்கள் தெரிவித்த தகவல்கள் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கின.

என்னதான் நடந்தது ? ஆலங்காயம் ஒன்றிய தலைவர் தேர்தலில் கழகம் பெரும்பாலான கவுன்சிலர் இடங்களை கைப்பற்றியது. மொத்தம் 18 வார்டு கவுன்சிலர்களுக்கான பதவியில் திமுக வேட்பாளர்கள் 11 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும், பாமக இரண்டு இடங்களிலும், ஒரு இடத்தில் சுயேட்சையும் வெற்றி பெற்றனர். எனவே ஒன்றிய தலைவர் பொறுப்பில் திமுக வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்து காத்திருந்த சூழலில்தான் மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் மூலம் பிரச்சனை கிளம்பியது . தேவராஜ் தனது இரண்டாவது மகன் பிரபாகரனின் மனைவி காயத்திரியை ஒன்றிய தலைவராக கொண்டுவர முயற்சி செய்தார். ஆனால் அவரது மருமகள் ஒன்றிய தலைவர் பதவிக்கு வருவதை எங்கள் கவுன்சிலர்களே விரும்பவில்லை. அதற்கு தேவராஜின் அணுகுமுறைதான் காரணம்" என்றனர் 

தேவராஜ் குடும்பத்தில் அனைவருக்குமே திமுகவில் பொறுப்பு !  மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் குடும்பத்தில் அனைவருமே பொறுப்பில் உள்ளனர். தேவராஜிக்கு இரண்டு மகன்கள். ஒருவர் டாக்டர் செந்தில், அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார்.திமுக மருத்துவர் அணியில் இருக்கிறார். அரசியல்வாதி வீட்டு வாரிசு என்பதால் மற்ற மருத்துவர்களுடன் கூட அடிக்கடி பஞ்சாயத்து தானாம்.

அடுத்ததாக பிரபாகரன். இவர் திமுக பொறியாளர் அணியில் இருக்கிறார். தற்போது பிரபாகர் அவருடைய மனைவியான காயத்ரியை  தான் ஆலங்காயம் ஒன்றிய தலைவர் பதவிக்கு கொண்டுவர தேவராஜ் முயன்றார். ஆனால் கட்சியினர் இடையே ஆதரவு இல்லாத நிலையில், ஒரு பிரிவு காயத்ரிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம்.. தேர்தலின் போது தனது மருமகள் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் மட்டுமே இருந்தவர், தேர்தலில் நின்ற தன் சொந்தக்கட்சி வேட்பாளர்களை டீலில் விட்டுவிட்டார். அதனால் கடுப்பான மற்ற கவுன்சிலர்கள், மக்கள் செல்வாக்கு வைத்துள்ள சங்கீதா பாரி என்பவரை ஒன்றிய தலைவராக்க கொண்டுவர முடிவு செய்தனர் .

மோதல் உண்டாக காரணம் ! தன் மருமகளை எதிர்த்து சாதாரண கழக தொண்டர் ஒருவர் வெற்றிப்பெற்றால், அது தனது கவுரவித்திற்கு இழுக்காக அமையும் என்ற காரணத்தால் எதிர்க்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களை வளைக்க திட்டமிட்டார். ஆனால் வெற்றி பெற்றவர்கள், தேவராஜ் மருமகளுக்கு ஆதரவாக வாக்கு அளித்தால் தங்களுக்கு வாக்கு அளித்த பொது மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால் யாரும் பேரத்திற்கு படியவில்லை. இதையடுத்தே, சங்கீதா பாரி என்பவரை தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்க கழக பொதுச்செயலாளர் துரைமுருகன், அவர்களின் மகன் கதிர் ஆனந்த் முயலுவதாகவும் சாதி ரீதியாக கட்சியை பிரிக்க பார்ப்பதாகவும் தேவராஜ் தரப்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர் .

வாழ்க்கை கொடுத்த துரைமுருகன்  ? தேவராஜை பொறுத்தவரையில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட காரணத்தால் கலைஞர் முதல்வராக இருந்தபோதே, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தேவராஜை நீக்கினார். பின்னர் பல ஆண்டுகள் கழித்து துரைமுருகன் தயவால் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார் தேவராஜ். அதன் பிறகு 2016 ம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் கே.சி.வீரமணிக்கு எதிராக திமுக தரப்பில் நின்ற கவிதா தண்டபாணிக்கு முழுமையான ஆதரவு தெரிவிக்காமல் கே.சி.வீரமணியோடு கைகோர்த்து கவிதாவை தோற்கடித்தவர் தான் தேவராஜ். இந்த தகவல் தலைமைக்கு செல்ல அப்போதே தேவராஜ் மீது நடவடிக்கை எடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்தது. சில காரணங்களால் தப்பித்து கொண்டார் தேவராஜ் .

கதிர் ஆனந்திற்கே செல்வாக்கு! கட்சியிலும் சரி.. தொகுதியிலும் சரி.. நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்திற்கு தான் செல்வாக்கு. கடந்த  2019 மக்களவை தேர்தலில் கதிர் ஆனந்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்த பெரும்பாலான ஆம்பூர்,வாணியம்பாடி பகுதி மக்கள், சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்து உள்ளனர். மாநிலம் முழுவதும் கழகம் வெற்றியை பெற்ற போதிலும் இசுலாமிய மக்கள் அதிகம் நிரம்பிய தொகுதியாக இருந்த வாணியம்பாடியில் அதிமுக வென்றது, திமுகவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு காரணம் தேவராஜ் நடத்தையே என்கின்றனர் ஊர் மக்கள். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில், தன் சொந்த தொகுதியை விட்டுவிட்டு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தயவால் ஜோலார்பேட்டையில்

எம்எல்ஏ சீட் பெற்று சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் தேவராஜ். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் இஸ்லாம் மக்கள் மனதில் அசைக்க முடியாத செல்வாக்கு பெற்று உள்ளார் கதிர்  ஆனந்த். இந்த செல்வாக்கை உடைத்து, தனது மாவட்ட பொறுப்பை எப்படியும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் திட்டம் போட்டு இப்படி ஒரு வேளையில் இறங்கி உள்ளாராம் தேவராஜ். 

ஏற்றிவிட்ட ஏணியை கீழே தள்ள முயன்ற தேவராஜ்  இப்படி பல்வேறு உதவிகளை செய்த பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் மீது உண்மைக்கு புறம்பாக செய்திகளை பரப்பியுள்ளார் தேவராஜ். அவ்வளவு ஏன்... உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது, "ஒன்றிய தலைவராகப்போகும் காயத்ரி" என்றே பிரச்சாரம் செய்துள்ளார் கதிர். ஆனால் சொந்த பகுதி மக்களிடம் செல்வாக்கு இல்லாததால், தனது மருமகள் காயத்ரி ஒரு எளிமையான கழக வேட்பாளரிடம் தோல்வி அடைந்ததை பொறுத்துக்கொள்ளமுடியாததால், சங்கீதா வெற்றிக்கு கதிர் ஆனந்த்தான் காரணம் என கூறியது மட்டுமல்லாமல், சாதி ரீதியாக செயல்படுவதாக உண்மைக்கு புறம்பான தகவலை சிலர் மூலம் பரப்பியுள்ளார். இதுதான் நடந்தது என வேதனையை தெரிவிக்கிறார் ஆலங்காயம் உடன்பிறப்பு. மேலும், போட்டி என வரும்போது ஆரோக்கியமாக கருதாமல் பொறாமை வருவதால், சாதி சாயத்தை பூசுவது அழகல்ல. அதுவும் கட்சிக்குள்ளே இப்படியா என தேவராஜ் விஷயத்தில் தலைமையே சற்று அப்செட் ஆகி உள்ளது என தெரிவிக்கின்றனர் 

முதல்வர் நடவடிக்கை என்ன ? அறிவாலயம் தரப்பில் முதல்வர் என்ன மன நிலையில் இருக்கிறார் என்று அறிய முடிந்த நிலையில், அங்கும் ஆச்சர்யம் காத்து இருந்தது. ஊடகங்களில் ஆலங்காயம் தேர்தலில் பதவியை கைப்பற்றுவதில் நடந்த  மோதல் குறித்து பரவிய தகவலை பற்றி, முதற்கட்டமாக மாவட்ட பொறுப்பாளர் என்ற முறையில் கட்சி நிர்வாகி ஒருவர் மூலம் விளக்கம் கேட்டு இருக்கிறார். அப்போது தேவராஜ் தனது மருமகள் தோல்விக்கு ஒன்றிய கழகச் செயலாளர்கள் முனிவேல் மற்றும் ஞானவேல் ஆகியோர், அதிமுக மற்றும் பாமக கட்சியினர் உடன் சேர்ந்து செயல்பட்டதாக தெரிவிக்க, மாவட்ட பொறுப்பாளர் என்ற முறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இருவரையும் நீக்கி உள்ளார்  பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் 

சந்தேக வளையத்தில் தேவராஜ் குடும்பம் ! தேவராஜ் செயல்பாடு மீது சந்தேகம் அடைந்த முதல்வர் ஸ்டாலின் உளவு துறையினர் மூலம் அறிக்கை ஒன்றை கேட்டு இருந்தார். அதில் பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முதலில் தேவராஜிற்கு செல்வாக்கு இல்லாத காரணத்தால் அவரது மருமகளை சொந்த கட்சியின் கவுன்சிலர்களே ஆதரிக்கவில்லை என்ற நிலையில் தான்,  துரைமுருகன் மற்றும் அவரது மகன் மீது பொய் தகவலை பரப்பியது தெரியவந்துள்ளது. அத்துடன் தேவராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முனிவேல் பொறுப்பில் தனது மகன் பிரபகரனை அமர்த்த தேவராஜ் குறிவைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

குடும்ப அரசியல் - முதல்வர் கடும் அதிருப்தி :  10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்த முதல்வர் ஸ்டாலின் முதலில் திமுக மீது குடும்ப அரசியல் என்ற பிம்பம் விழக்கூடாது என்ற காரணத்தால்தான் தனது மகன் உதயநிதிக்கு கூட அமைச்சர் பதவி வழங்கவில்லை. அப்படி இருக்கையில், தேவராஜ் கட்சியில் தனது குடும்பத்தினருக்கு வளைத்து வளைத்து பொறுப்புகளை பெற்று உள்ளதும், சாதாரண தொண்டர் ஒருவரின் வெற்றியை பொறுத்து கொள்ளாமல், தனது மருமகள் தோல்விக்கு காரணம் கதிர் ஆனந்த் தான் என திட்டமிட்டு பொய் செய்தியை பரப்பியுள்ளதும்  உளவுத்துறை ரகசிய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டவர்களை விரைவில் மீண்டும் கட்சியில் இணைத்து பொறுப்புகள் வழங்கப்படலாம் எனவும், உண்மையான பிரச்சனைக்கு காரணமானவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது. அதில் தேவராஜ் பெயர் இடம்பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.