24 special

இது நடந்தால் நிச்சயம் தென் மாவட்டத்தில் பாஜக வலுப்பெறும் என்ன செய்ய போகிறது அதிமுக !

Annamalai,  EPS,  OPS
Annamalai, EPS, OPS

அதிமுகவில் ஒற்றை தலைமை உருவானால் அது எடப்பாடி பழனிசாமியாக இருந்தால் நிச்சயம் தென் மாவட்டங்களில் அதிமுகவிற்கு இறங்கு முகமாக அமையும் என்று அரசியல் விமர்சகர் சுந்தர் ராஜ சோழன் குறிப்பிட்டுள்ளார் இது குறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு :-


திரு.ஜெயக்குமாரின் கருத்தால் அதிமுக ஒற்றைத் தலைமை நோக்கி நகருகிறது என்ற விவாதம் தீவிரமாகிவிட்டது.வருகிற அதிமுக பொதுக்குழுவில் திரு.எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக உருவெடுப்பார் என்ற கருதுகோள்கள் உருவாக்கப்படுகிறது.

அதிமுகவுக்கு ஒரு ஒற்றைத் தலைமை தேவையா என்றால்? நிச்சயம் அவசியமானது.காரணம்,யார் முதல்வரோ அவரேதான் கட்சிக்கு தலைமை என்று உருவகித்துக் கொள்ளும் தொண்டர்களை பெற்ற கட்சி அதிமுக.ஒரு தலைமையின் கண்டிப்பான உத்தரவுகளுக்கு கீழேயே  பல வருடங்கள் பயணம் செய்த கட்சி அது. 

ஆகவே,வேறுபட்ட கருத்துகளைக் கொண்ட இரட்டைத் தலைமைகளானது,ஒரு பொது முடிவுக்கு வரும் நிகழ்வுகளை கண்டு,அதிமுக தொண்டர்களுக்கு ஒரு குழப்பம் உள்ளது.அதே போல,கட்சி பொறுப்பாளர்களுக்கே யார் பக்கம் நிற்பது என்ற குழப்பம் எல்லா நேரத்திலும் வருகிறது.எனவே,ஒரே செயல்படு தலைமையின் கீழே வருவது,அந்த கட்சியின் இயங்கு முறைக்கு தேவையென்ற குரல் அங்கே   ஒலிப்பதில் நியாயம் உள்ளது.

அதே நேரத்தில்,அதிமுக இனி ஒரு தலைமையின் முற்றதிகாரத்துக்கு வரமுடியுமா என்று கேட்டால் முடியாது என்பதே எனது பதிலாக இருக்கும்.முதலில் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.எம்ஜிஆர் எந்த இடத்திலும் Backing community அரசியல் செய்தவரல்ல.

எம்ஜிஆருக்கு பிறகு அந்த கட்சிக்குள் ஜானகி Vs ஜெயலலிதா என்ற தலைமை மோதல்தான் வந்தது அதற்கு பின்னால் சமூக அணிவகுப்புகள் இல்லை அல்லது இவ்வளவு துல்லியமாக இல்லை.பின் அங்கே வந்த இணைவையும் தற்போது இபிஎஸ் - ஓபிஎஸ் இணைவையும் சமதட்டில் வைத்து பார்க்கக்கூடாது.

செல்வி.ஜெயலலிதா தெளிவாக Backing community அரசியல் செய்தார்.அவருக்கு பிறகு அந்த கட்சியில் வந்த அரசியல் சமநிலை என்பது அந்த சமூகங்களின் அதிகார பகிர்வில் நிகழ்ந்துள்ளது.இதில் நீயா? நானா? என்று வந்தால் அது கட்சியின் இருப்பையே கேள்விக்குறியாக்கும்.

அண்ணாவின் மறைவுக்கு பிறகு 1969ல் திமுகவின் சட்டவிதிகளை திருத்தி தலைவர் பதவியை கொண்டு வந்தனர்.பின் பொது செயலாளர் - பொருளாளர் என சேர்த்து மூன்றாக முறையே கருணாநிதி - நெடுஞ்செழியன் - எம்ஜிஆர் என பிரித்துக் கொண்டார்கள்.

கிட்டத்தட்ட இதே போலதான் அதிமுகவின் சட்ட விதிகளை மாற்றி ஒருங்கிணைப்பாளர் - துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை கொண்டு வந்தார்கள்.இந்த அதிகார பகிர்வை கீறல் விழாமல் நகர்த்தினால் மட்டுமே அதிமுகவால் களத்தில் இருக்க முடியும்.

திரு.ஓபிஎஸ் பின்னால் முக்குலத்தோர் திரளாமல் இருக்கலாம்.ஆனால் ஓபிஎஸ்ஸின் இடம் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இரண்டாவது நிலைக்கு சென்றால்,நிச்சயமாக தென்மாவட்டங்களில் அதிமுக மீதான கசப்புணர்வு உருவாகும்.

இதை அதிமுகவின் நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள் ஏற்கலாம்.நிச்சயமாக அதன் வாக்காளர்கள் ஏற்க மாட்டார்கள்.ஓபிஎஸ் திருமதி.சசிகலா என்கிற துருப்புச் சீட்டை எடுப்பதே சமுதாய ரீதியாக நிர்வாகிகள் என்னோடு நாளை திரளுவார்கள் என்று காட்டத்தான்.ஓபிஎஸ் தற்போது தர்மருக்கு ராஜ்யசபா சீட்டை பெற்றுக் கொடுத்ததிலேயே அவருடைய நிலைப்பாடு என்ன என்பது தெரிந்துவிட்டது.

ஒருவேளை நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் 90% ஆதரவு எனக்கே உள்ளது என்று திரு.எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமையாக ஆகுவார் என்றால்.தென்மாவட்டத்தில் பாஜகவிற்கான இடம் இன்னும் பெரிதாகும் என்பதே எதார்த்தம்..

ஆயினும்,மூன்றாவதாக தங்களுக்குள் யாரும் வந்துவிடக்கூடாது என ஓபிஎஸ் - இபிஎஸ் நுணுக்கமாக ஆடும் அரசியலாட்டமாகவே எனக்குப்படுகிறது.பொதுக்குழு இரட்டைத் தலைமையை அப்படியே கொண்டு போகும் தீர்மானத்தை வலியுறுத்தவே வாய்ப்பு அதிகம் என நினைக்கிறேன்.பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.