Tamilnadu

10 நாள்தான் அவகாசம் அண்ணாமலை எச்சரிக்கை என்ன செய்ய போகிறார் ஸ்டாலின் !

Annamalai and MK Stalin
Annamalai and MK Stalin

தமிழகத்தில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி பாஜக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோயில்,தேவாலயம், மசூதி போன்றவற்றில் மக்கள் வழிபாடு செய்ய தடையை திமுக அரசு விதித்துள்ளது 


பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், டாஸ்மாக், பார் என அனைத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோவில்களை திறக்க மட்டும் ஏன் அனுமதி அளிக்கவில்லை என்றும், வாரத்தின் அனைத்து நாட்களும் கோயில்களை திறக்க வேண்டும் என்றும் பாஜக தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது.ஆனால், வார இறுதி நாட்களில் கோயில்களை திறப்பதற்கான தடை நீக்கப்படவில்லை.

இந்நிலையில், அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்கக் கோரி இன்று(அக்டோபர் 7) தமிழகம் முழுவதும்12 திருக்கோயில்களின் முன்பாக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சென்னை காளிகாம்பாள் கோயில் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜகவின் இளைஞரணித் தலைவர் வினோஜ் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாகர்கோவில் நாகராஜா கோயிலில் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையிலும், திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமையிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையிலும், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கனகராஜ் தலைமையிலும், ஸ்ரீரங்கம் கோயிலில் நகர் மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

தஞ்சை பெரிய கோயிலில் மாவட்ட தலைவர் இளங்கோ தலைமையிலும், கோவை கோனியம்மன் கோயில் நகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையிலும், திருவண்ணாமலையில் மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையிலும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையிலும், சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயிலில் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் இளஞ்செழியன் தலைமையிலும், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. பாஜக மகளிர் அணி சார்பில் தீச்சட்டி ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னையில் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “நல்ல விஷயங்களுக்கு பாஜக எப்போதும் ஒத்துழைப்பு கொடுக்கும். அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்கக் கோரி தமிழகத்தில் 12 இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இல்லாத கொரோனாவை காரணம் காட்டி தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாஜக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

அரசு, பள்ளிகளை திறக்க முடிவு செய்தபோது, நாங்கள் ஒத்துழைப்பு அளித்தோம். அதே தியேட்டர்களை திறக்க அனுமதி கொடுத்தபோது பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்ப்பை மீறி திறக்கப்பட்டது. எதிர்கட்சியாக இருந்தபோது,கொரோனா காலத்தில் டாஸ்மாக் எதற்கு என்று கேள்வி கேட்டுவிட்டு, ஆளுங்கட்சியாக வந்தபோது புயல் வேகத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.இதிலிருந்து என்ன தெரிகிறது கோயிலை பூட்டுவதற்கு கொரோனா ஒரு காரணம் கிடையாது.

கொரோனா சம்பந்தமாக மத்திய அரசு சொல்கிற எந்தவொரு முடிவுகளையும் நாங்கள் ஏற்கமாட்டோம் என திமுக கூறியது. திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகம் தன்னிச்சையாக செயல்படும் என்று கூறினார்கள். தற்போது மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கோயில்கள் மூடப்பட்டதாக கூறுகிறார்கள். இது உண்மை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

அவர்களுடைய சிந்தாந்தம் என்ன..கோயில் இல்லை, கடவுள் இல்லை. கடவுளை நம்புகிறவர்கள் காட்டுமிரண்டி, முட்டாள் என்பதுதான் அவர்கள் சிந்தாந்தம். அதை புகுத்தத்தான் இப்படியொரு தடையை போடுகிறார்கள். இந்த போராட்டத்தில் முஸ்லீம், கிறிஸ்தவ நண்பர்களும் கலந்து கொண்டுள்ளனர். தமிழக அரசுக்கு 10 நாட்கள் அவகாசம் தருகிறோம். அதற்குள் கோயில்களை திறப்பது குறித்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்” இல்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டும் என அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து கோவில்களை தமிழக அரசு வழிபட கட்டுப்பாடுகள் விதித்து இருப்பது பொது மக்கள் மத்தியிலும் எரிச்சலை உண்டாக்கியுள்ளது. இதே நிலை நீடித்தால் உண்மையில் இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது உறுதி என்பதே தற்போதைய சூழலாக உள்ளது. பொதுமக்களும் கோவில்கள் மூட பட்டு இருப்பதை நினைத்து அதிருப்தியில் உள்ள நிலையில் பாஜகவும் தொடர் போராட்டங்கள் நடத்தும் சூழல் இருப்பதால் என்ன செய்ய போகிறார் ஸ்டாலின் என்ற கேள்வி எழுந்துள்ளது.