24 special

போச்சு இருக்குற பிரச்சினை பத்தாதா...! இப்ப அவங்களே இறங்கிட்டாங்களே...!

Mk stalin,
Mk stalin,

அரசு பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பவும் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கிட்டத்தட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ இந்த வருட தொடக்கத்திலிருந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். அதோடு மார்ச் 5ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டத்தையும் மேற்கொண்டனர். 


போராட்டத்தின் போது திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது அதில் ஒரு சதவீதத்தை கூட இதுவரை நிறைவேற்றாமல் இருந்து வருகிறது எனவும், அனைவருக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும் அது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ச. மயில் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்திருந்தார். 

அதற்குப் பிறகும் தமிழக அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளது என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் குமுறினர். அதனால் மூன்று கட்ட போராட்டங்கள் நடத்த இருப்பதாக ஜாக்டோ ஜியோ மாநில கூட்ட அமைப்பு சார்பில் அறிவிப்பு வெளியானது. அதோடு ஏப்ரல் 11ம் தேதி சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது. முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்த பிறகு ஏப்ரல் ஏழாம் தேதியிலேயே மூன்று அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வா வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடைத்தினர். அப்பேச்சுவார்த்தையில் ஜாக்டோ ஜியோ தரப்பில் தங்கள் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் இறுதியில் ஜாக்டோ ஜியோ முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல அமைச்சர்கள்  உறுதி அளித்ததால் ஏப்ரல் 11 ஆம் தேதி நடக்க இருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும் எங்களது கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தி சென்றால் மறுபடியும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் ஜாக்டோ ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் அதிருப்தி கடிதம் ஒன்றை நேற்று முன்தினம் தமிழக நிதி அமைச்சருக்கு அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில் கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுடன் அமைச்சர் வேலு அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வாக்குறுதி கொடுத்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது ஆனாலும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூறிய எந்த ஒரு கோரிக்கையும் இதுவரையில் நிறைவேற்றுவதற்கான ஒரு நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை இதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். 

எனவே விரைவில் அரசிற்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்றால் உடனடியாக முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பண்டிகை காலங்கள் தமிழகத்தில் நெருங்குவதால் அரசு ஊழியர்கள் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தால் அரசு இயந்திரத்தை பாதிக்கும் எனவும், இது மட்டுமல்லாமல் இன்னும் பத்து மாத காலத்தில் தேர்தல் வர உள்ள நிலையில் அரசு ஊழியர் அரசுக்கு எதிராக போராடுவது நல்லதல்ல என அறிவாலய மூத்த தலைவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ ஊழியர்களின் விவகாரம் திமுக அரசுக்கு அடுத்த தலைவலி என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.