புதுதில்லி : இந்தவருடம் நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தல்களில் நான்கு மாநிலங்களையும் பிஜேபி கைப்பற்றினாலும் இந்த வருட இறுதியில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தேவையான பெரும்பான்மையை விட குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. உத்தரகாண்ட் மற்றும் உத்திரபிரதேச சட்டமன்றங்களில் பிஜேபியின் பலம் குறைவாகியுள்ளது என தெரிகிறது.
மேற்குவங்கம், மஹாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்வியை சந்தித்திருந்தது. அது பெரும் பின்னடைவாக கருதப்பட்ட நிலையில் இந்த வருடம் நடந்த சட்டமன்ற தேர்தல்கள் பிஜேபிக்கு மிக முக்கியம்வாய்ந்ததாக கருதப்பட்டது. இருந்தபோதிலும் உத்தரகாண்ட் மற்றும் உத்திரபிரதேசத்தில் பலம் குறைந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஜூலை 2021ல் என்.டி.ஏ கூட்டணிக்கு குடியரசுத்தலைவர்க்கான் தேர்தலில் பெரும்பான்மைக்கு வெறும் 0.5 சதவிகித வாக்குகள் மட்டுமே குறைவாக இருந்தன. ஆனால் உத்தரகாண்ட் மற்றும் உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபியின் வலிமை குறைக்கப்பட்ட பின்னர் தேவைப்படும் எண்ணிக்கையின் சதவிகிதத்தில் 0.5 இலிருந்து 1.2 சதவிகிதமாக மாறியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தின் 403 தொகுதிகளில் 2017ல் 300 ஐ கைப்பற்றியிருந்த பிஜேபி இந்த 2022 தேர்தலில் 255ஆக குறைந்துள்ளது. 70 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட உத்தரகாண்டில் 2017ல் 57 இடங்களை வென்ற பிஜேபி 2022ல் 47 ஆக மாறியுள்ளது. குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு ஒரு எம்பியின் வாக்கு மதிப்பு 708. அதேபோல ஒரு சட்டமன்ற உறுப்பினருடைய வாக்கு மதிப்பு அந்த மாநிலத்தின் மக்கள்தொகையை பொறுத்து அமைகிறது.
உத்திரப்பிரதேசத்தை பொறுத்தவரை அதன் எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு 208. அதுவே உத்தரகாண்டில் எம்.எல்.ஏ வாக்கின் மதிப்பு 64 ஆக உள்ளது. இதேபோல கோவா மற்றும் மணிப்பூரிலும் பிஜேபி கூட்டணியின் பலம் குறைந்துள்ளது. குடியரசுத்தலைவர் மொத்த வாக்கு மதிப்பு 10.93 லட்சமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
பிஜு ஜனதாதளம் கட்சிக்கு 21 எம்பிக்கள் உள்ளனர். அதேபோல அவர்களின் வாக்குகள் பலம் 14,868. ஒய்.எஸ்.ஆர் காங்கிரசை பொறுத்தவரை 19,824 வாக்கு பலத்துடன் 22 எம்பிக்களை வைத்திருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளையும் தன்பக்கம் இழுக்கும் பட்சத்தில் பிஜேபி பெரும்பான்மையுடன் குடியரசுத்தலைவர் தேர்தலை சந்திக்கும் என்பது திண்ணம்.