தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலையாக இருப்பதாக கொடுத்த பேட்டி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது, குறிப்பாக பாஜக பிரமுகர் பாலசந்தர் நேற்று வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது கொலையை மையமாக கொண்டு பாஜகவினர் டிஜிபி கருத்தை விமர்சனம் செய்து வருகின்றனர்.
செய்தியாளர்களிடம் டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாவது: லாக்கப் மரணங்களை தடுக்கும் வகையில் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆபரேஷன் கஞ்சாவேட்டை 2.0 மூலம் கஞ்சா விற்பனை தொடர்பாக 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 200 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும்.
அதேபோல், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்; சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.தமிழகத்தில் மதக்கலவரம், சாதி கலவரம், சாராய உயிரிழப்பு கிடையாது. ஆகவே, தமிழகம் அமைதியாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் கள்ளச்சாராய விற்பனை இல்லை. மலைப் பகுதி உள்ளிட்ட இடங்களில் ஒரு சிலர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
அதையும் ரெய்டு நடத்தி தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார் இந்நிலையில் டிஜிபி சொல்லிய அன்றே பாதுகாப்பு நிறைந்த தலைநகரில் குறிப்பாக பாதுகாப்பு காவலர் பணியில் இருக்கும் போதே பாஜக பிரமுகர் வெட்டி படு கொலை செய்யப்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுதான் நீங்கள் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நிலையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.