பாஜக மாநில தலைவர் அக்கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் அதில் இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை எனவும் குறிப்பிட்டுள்ளார் இது குறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு :-இரும்பு அடிக்கும் இடத்திலே, ‘ஈ’க்கு என்ன வேலை?பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே..... அனைவருக்கும் வணக்கம்.
“உக்ரேன் நாட்டின் போர்ச் சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்பதற்காக மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் சீரிய முயற்சியில் இந்திய அரசின் வெளிவிவகாரத் துறையும், இந்திய விமானப் படையும், தூதரக அதிகாரிகளும், விமானப் போக்குவரத்து நிறுவனங்களும் கண் உறங்காது.,
போர்க்களத்தில் பணியாற்றி இந்திய மாணவர்களை மீட்டுக் கொண்டுவரும் சூழலில், தமிழக மாணவர்களை மீட்க 3 எம்.பி. மற்றும் ஒரு எம்.எல்.ஏ.வை நான்கு நாடுகளுக்கு அனுப்ப தமிழக முதலமைச்சர் அவர்கள் முடிவு செய்திருப்பது அறிவாலயத் திமுக அரசின் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. திமுக அரசின் ஏட்டுச் சுரக்காய்ச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. ரயில்வே துறை, இந்திய பாதுகாப்புத் துறை, தூதரகம் மற்றும் வெளியுறவுத்துறை போன்ற மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள துறைகள் மாநில அரசின் அதிகார எல்லைக்குள் வருகிறதா? என்பது அறிவாலயம் நபர்களுக்குப் புரியவில்லை! தமிழக அரசு அதிகாரிகளுக்குமா தெரியவில்லை?
வெளியுறவுத் துறையில் நீண்ட அனுபவம் மிக்க நான்கு மூத்த அமைச்சர்கள் இந்திய அரசின் சார்பில் நான்கு நாடுகளில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்கள். பிரதமர் தலைமையில், உலக நாடுகளே வியக்கும்படி அனைத்து மாணவர்களையும் தாயகம் மீட்கும் நடவடிக்கையை, மத்திய அரசின் மீட்புக் குழு சிறப்பாக செயல்படுத்திவரும் இந்தச் சிக்கலான வேளையில் தமிழகம் ஒரு தூதுக் குழுவை அனுப்ப என்ன தேவை? அமெரிக்கா சீனா ஜெர்மனி என்று பல உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களை மீட்க முடியாமல் திகைத்து நிற்கும் வேளையில், தூதரக ராஜதந்திரத்தின் மூலம் போர்க்களத்திலிருந்து, நாட்டு மக்களை மீட்கும் ஒரே நாடு நம் பாரத நாடு மட்டுமே.
இந்திய நாட்டின் உதவியை மற்ற நாடுகள் எல்லாம் நாடி வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் தமிழகம் செய்ய வேண்டிய முதல் பணி, பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, மாநிலத்தில் தேவையான உதவிகளைச் செய்வது மட்டுமே.
உன்னதமான நீட் தேர்வை அரசியலாக்கி, மாணவர்களின் உயிரிழப்புக்குக் காரணமாக்கி, தற்போது மாணவர்கள் பெரிதும் வரவேற்கும் நீட் தேர்வை உக்ரைன் போருடன் சம்பந்தப்படுத்தி, குழப்பத்தை அதிகரித்துவரும் தமிழக முதல்வர், மாநிலங்களுக்குச் சம்பந்தமில்லாத மீட்பு நடவடிக்கையிலும் தலையிட்டு மாணவர்களின் உயிரோடு விளையாட முடிவு செய்து, இதையும் அரசியலாக்கும் இச்செயல், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முன்கள வீரர்களுக்கும், மாணவர்கள் உயிருக்கும் இடையூறாகும். வெளியுறவுத்துறை, தூதரக அதிகாரிகள், விமான நிறுவனத்தினர், இந்திய விமானப்படை, மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் கடுமையான போர்ச் சூழலில் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து, மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட சாதனையைச் சாத்தியமாக்கி இருக்கிறார்கள்.
இந்தியர்களையும், மாணவர்களையும் தாயகம் மீட்க கண்ணுறங்காது உழைக்கும் மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களின் சீரிய தலைமையில் அரும் பணியாற்றும் இந்திய அரசின் வெளியுறவுத் துறையின் குழுக்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தர வேண்டிய மாநில அரசு, காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொண்டு தமிழக மாணவர்களின் உயிர்களோடு விளையாடலாமா? ஆக, தன்னுடைய அதிகார ஆளுமை என்ன என்று உணர்ந்து செயல்படுபவர்தான் மிகச் சிறந்த ஆட்சியாளர்... அப்படி இல்லாதவரை ‘அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு’ என்று வள்ளுவர் வசைபாடுகிறார்.
மு. வரதராசனார் அவர்களின் விளக்கத்தில் இக்குறள்: அறியாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளைக்கூட உலகம் இல்லாமையாகக் கருதாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.