சமீபத்தில் நடைபெற்றுவரும் சம்பவங்களை சுட்டிக்காட்டி எழுத்தாளர் சுந்தர ராஜ சோழன் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார் அவை பின்வருமாறு :-
வேல் யாத்திரையினை அதிமுக தடுத்து நிறுத்தியது ஆனால் திமுக பாஜகவின் போராட்டங்களை தடுத்து நிறுத்துவதில்லை என்று ஒரு உளறலை பார்த்தேன்,பாஜக அதிமுகவோடு கூட்டணியில் இருந்தது.அதனால் அவர்கள் வேல் யாத்திரையை தடுத்ததை எதிர்த்து பாஜக போராடவில்லை.அதிமுக செய்ததையே தாங்கள் செய்தால்,எப்படி அவர்கள் தங்களுக்கு எதிராக வியூகத்தை வகுப்பார்கள் என திமுக அரசுக்கு தெரியும் அதுதான் காரணம்.
அடுத்தது,வேல் யாத்திரை வெற்றி என்பதால்தான் இறுதியில் இன்றைய முதல்வர் ஸ்டாலினே கையில் வேல் தூக்கினார் அன்று.அம்மையார் துர்க்கா பேட்டி ஒன்றில் சொன்னார்,"இப்போது எங்கே போனாலும் முருகனின் வேலினை தருகிறார்கள்" என்று..பாஜக நடத்தும் வேல் யாத்திரை தனக்கு சாதகமானது என்பதைக் கூட அன்று அதிமுகஉள்வாங்கவில்லை.
செல்வி.ஜெயலலிதா இல்லாமல் தங்களை விட்டு பல சமூகங்கள் விலகிப்போவதை அதிமுக தலைமைகள் உணரவே இல்லை.அவர்களை மீண்டும் இங்கே இணைத்து வைக்கும் பொதுத்தளம் 'ஹிந்து' என்கிற அடையாள அரசியல்தானே ஒழிய திராவிடமல்ல.காரணம் 'திராவிடம்' என்கிற பொதுத்தளம் திமுகவுக்கு மட்டுமேதான் சாதகமாக அமையும்.அதற்கு உரிமையாளர் அவர்கள்தான்.
பாஜக தன்னை விழுங்கிவிடும், தங்களுக்கு சிறுபான்மையினர்கள் வாக்களிப்பார்கள் என்ற மாயக்கனவுகளை விட்டு அதிமுக வெளியே வர வேண்டும்.இது இரண்டுமே அதிமுகவின் பலஹீனத்தோடு எதிர்கட்சிகள் நடத்தும் உளவியல் விளையாட்டு.அரியலூர் மாணவி விவகாரத்தில் தங்களுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல அதிமுக ஒதுங்கி நிற்பது ஆச்சர்யமாக உள்ளது.
இத்தனைக்கும் செல்வி.ஜெயலலிதா மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வந்தவர், ஹிந்து உணர்வுள்ளவர். இன்றும் அதிமுக வாக்குகளில் பெரும்பங்கு வாக்குகள் பாஜக ஆதரவு மனநிலை கொண்டது.2004 மற்றும் 2006ல் அதிமுக தோற்றதற்கு காரணம் மதமாற்ற தடை சட்டமெல்லாம் கிடையாது.செல்வி.ஜெயலலிதா பலமான கூட்டணியை அமைக்காததும்,2006 ல் விஜயகாந்த் வருகையும்தான்.
முஸ்லீம் லீக் இருக்கும் போது இந்து முன்ணனி இருக்கக்கூடாதா? என எம்ஜிஆரும்,ராமர் கோவில் கட்ட ஆதரவு கொடுத்த செல்வி.ஜெவும் தலைமையேற்று நடத்திய கட்சி இன்று அமைதியாக இருப்பது அதிர்ச்சியே. ஹிந்து மதத்தை சீண்டுவதையும்,நாத்திகத்தை உடைமையாகவும் கொண்ட ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனே தன் அறிக்கையில் தெளிவாக 'மதமாற்றம்' என்ற குற்றசாட்டை பதிய வைத்துள்ளார். ஆனால் அதிமுக இப்படிக் கூட பதிய வைக்கவில்லை.
இந்த விவகாரத்தில் கருத்து சொன்னால் நாம் பாஜகவுடைய துணை இயக்கமாக போய்விடுவோம் என்ற தவறான அறிவுரையை அதிமுக தலைமைக்கு யாரோ கொடுத்துள்ளார்கள்.இதற்கு அஞ்சி தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு விரோதமாக நடந்துவிட்டார்கள் என்பதே எனது பார்வை.செல்வி.ஜெயலலிதா இன்று எதிர்கட்சி தலைவியாக இருந்திருந்தால் நிச்சயமாக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்திருப்பார்..
மக்களின் குரலை,கொந்தளிப்பை எதிர்கட்சி பிரதிபலிக்க வேண்டும்.ஆளுங்கட்சியின் பலஹீனமான இடங்களை தொட்டு அரசியல் செய்யத் தெரிய வேண்டும்.இவற்றை கோட்டை விட்டுவிட்டு கூட்டணிகளுக்குள் அடித்துக் கொள்வது புத்திசாலித்தனமல்ல என குறிப்பிட்டுள்ளார் சுந்தர ராஜ சோழன்