Tamilnadu

மிக மோசமான நிலையை அடைந்த இலங்கை.. இனி தினந்தோறும்.. காப்பாற்ற போவது யார்?

Modi and china president
Modi and china president

இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து நரேந்திரன் பிஎஸ் என்பவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அவை பின்வருமாறு :-


இலங்கையில் நிலைமை மிக மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இனிவரும் நாட்களில் தினந்தோறும் குறைந்தபட்சம் நான்கு மணிநேர மின்வெட்டு இருக்கப்போவதாக இலங்கை எலக்ட்ரிசிடி போர்ட் அறிவுத்துள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் சாதாரண இலங்கையனை மிகவும் பாதிக்கப் போவது நிச்சயம். இலங்கையின் முக்கிய வருமானம் தேயிலை ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையிலிருந்து வருவது. கோவிட் காரணமாக இரண்டு தொழில்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

முக்கியமாக சுற்றுலாத் துறை. வெளிநாட்டுப் பயணிகள் இலங்கை வருவது ஏறக்குறைய நின்று போயிருக்கும் சூழ்நிலையில், சுற்றுலாத்துறையில் பணிபுரிந்த பலர் வேலைகளை இழந்திருக்கிறார்கள்.

இலங்கை அரசாங்கத்தின் கையில் இருக்கும் $3 பில்லியன் அன்னியச் செலாவணி இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கும், பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிக்கும் அந்த $3 பில்லியன் செலவாகிவிடும்.

அதற்குப் பின்னர் இலங்கை இன்னும் மோசமான சூழ்நிலையை எதிர் நோக்கியிருக்கிறது. அவசர உதவியாக இந்தியா $900 மில்லியன் டாலர்களைக் கொடுத்து உதவியிருக்கிறது. இன்னும் $1.5 பில்லியன் கொடுத்து உதவுவதாகவும் அறிவித்திருக்கிறது. 

எனினும், இது இலங்கை நிலவரத்தில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இந்த மாதம் ஏறக்குறைய $500 மில்லியன் கடனாளிகளுக்குக் கொடுத்தாக வேண்டும். அதற்கும் மேலாக சீனாவிடம் வாங்கிய கடன் கழுத்தளவு வந்து நிற்கிறது.

அவர்களுக்கும் வட்டி கட்டியாக வேண்டும். அந்தக் கடனை மீண்டும் restructure செய்யவேண்டும் என்ற இலங்கை அரசின் கோரிக்கையை சீன அரசு இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக் கொள்வதென்றால் இலங்கை அரசு தாங்கள் சொல்லுவதனையெல்லாம் கேட்டாக வேண்டும் என்று சீனா நிச்சயமாகச் சொல்லும். சமிபத்தில் இலங்கை வந்த சீனப் பிரதமரிடம் ராஜபக்ஷே சகோதரர்கள் இன்னும் $500 மில்லியன் கடன் கேட்டிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம்.

தப்பிக்கவே இயலாத கடன் சிக்கலில் இலங்கையைச் சீனா சிக்க வைத்திருக்கிறது. ஹம்பந்தோட்டா துறைமுகத்தை ஏற்கனவே சீனர்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்கள். இனி சீனா கொழும்பு துறைமுகத்தைக் கேட்டு கழுத்தை நெருக்கலாம். அப்படி கொழும்பு துறைமுகம் சீனா வசம் சென்றால் அது இந்தியாவிற்கு மிக அதிகமான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இந்தியாவிற்கு மிகவும் கவலை ஏற்படுத்தும் சூழ்நிலையில் இலங்கை சிக்கிக் கொண்டிருக்கிறது.

ராஜபக்ஷே சகோதரர்கள் இந்திய எதிர்ப்பு மனோபாவமுடையவர்கள். கடந்த சில மாதங்களாக சீனாவுக்குத் தரவேண்டிய அத்தனை கடன்களையும் அடைப்பதற்கு இந்தியா முன் வந்ததாகவும், அதற்குப் பதிலாக இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமையும், இனிமேல் சீனா போன்ற நாடுகளை அருகில் நெருங்கவிடாமல் இருக்கவேண்டும் என்று இந்தியா கேட்டதாகவும் அதற்கு ராஜபக்ஷே சகோதரர்கள் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் கசிகின்றன.

இருப்பினும் இந்தியா திரிகோணமலையில் எண்ணெய் சேமிப்பு டேங்குகளை இயக்குவதற்கு இலங்கையுடன் ஒப்பந்தமிட்டிருக்கிறது. நீண்டகாலமாக இழுவையில் இருந்த அந்தத் திட்டத்தை ஒருவழியாக இலங்கை ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இப்போதிருக்கும் நிலைமையில் ராஜபக்ஷே சகோதரர்கள் இந்தியாவின் உதவியை ஏற்றுக் கொள்வதே நல்லது என்றாலும், அரசியல் ரீதியாக அவர்களுக்கு அது தற்கொலையாகவே முடியும். தமிழர்களுக்கு எதிரான அவர்களின் நிலைப்பாடுகளே சிங்களவர் மத்தியில் ராஜபக்ஷே சகோதரர்களைப் புகழுடன் வைத்திருக்கிறது.

அதனைக் கைவிட்டால் இருவரும் அரசியல் அனாதைகளாகிவிடுவார்கள் என்கிற அச்சம் அவர்களை இந்தியாவின் உதவிக்கு எதிரான நிலைப்பாடு எடுக்க வைக்கும். பாகிஸ்தானையும், சீனாவையும் தனது நட்பு நாடாக இலங்கை எண்ணுகிறவரையில் இந்திய முயற்சிகள் வெற்றிபெறுவது சிரமம்தான். 1971-ஆம் வருட இந்திய-பாகிஸ்தான் போரின்போது, இந்தியாவின் ஆட்சேபணையையும் மீறி பாகிஸ்தானிய விமானங்கள் எரிபொருள் நிரப்பிக் கொள்ள இலங்கை அனுமதித்த கதையும் இருக்கிறது. பதிலுக்கு தமிழ்த் தீவிரவாதிகளை இந்தியா வளர்த்தெடுத்த கோபமும் சிங்களர் மத்தியில் உண்டு.

எது எப்படி இருந்தாலும் இலங்கை மிக,மிக சிரமமானதொரு காலகட்டத்தை எட்டியிருக்கிறது. அதாகப்பட்டது "கர்மா" காலைக்கடித்துக் கொண்டிருக்கிறது. கோவிட் நிலைமை சரியானாலும் இலங்கை மீண்டும் சொந்தக் காலில் எழுந்து நிற்க குறைந்தது ஐந்து வருடங்கள் தேவைப்படலாம். இந்திய உதவியைப் பெற்றால் அதனை ஓரளவு இலங்கை சமாளிக்கும். இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பதனை உங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

சிறப்பு கட்டுரை - நரேந்திரன் பி.எஸ் இது போன்ற உங்கள் கட்டுரைகளை எங்களுக்கு அனுப்பலாம் அனுப்ப வேண்டிய முகவரி [email protected] /9962862170 (WHATSAPP )

More watch videos