தமிழக பாஜக தலைவர் முருகன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காரணத்தால் தமிழக பாஜகவிற்கு வேறு தலைவர் நியமிக்கப்பட இருக்கிறார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு யாரை நியமிக்கலாம் என்ற பல்வேறு யூகங்கள் எழுந்தன . நீண்ட இழிபறிக்கு பின்னர், பாஜக தமிழக மாநில தலைவராக தேசிய எஸ்.சி., எஸ்.டி, ஆணைய துணைத் தலைவராக இருந்த எல் முருகன் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தற்போது மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். அதில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற எதிர்பார்ப்புகள் அரசியல் அரங்கில் ஏற்பட்டுள்ளன. அதற்கான ரேஸில் தற்போதைய நிலவரப்படி, பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன்,, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், , அண்ணாமலை ஆகியோர் உள்ளதாக கூறப்படுகிறது.
வானதி சீனிவாசன் தேசிய மகளிர் அணி தலைவியாக சமீபத்தில் நியமிகபட்டுள்ளதால் அவர் மீண்டும் மாநில தலைவர் பொறுப்பில் நியமிக்க படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது, அதே நேரத்தில் சட்டமன்ற பாஜக குழு தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் அண்ணாமலை அல்லது பாஜக மாநில பொது செயலாளராக உள்ள பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் ஆகியோரில் ஒருவர் புதிய தலைவராக விரைவில் அறிவிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.