உலகப் பொதுமறையாம் திருக்குறள் ஒரு நீதி நூல் மட்டுமின்றி, வாழ்வியல் நூலாகவும் திகழ்கின்றது. இனம், மொழி, நாடு போன்ற எல்லைகளைக் கடந்து அனைத்து தரப்பு மக்களின் வாழ்வினை நெறிப்படுத்தும் உயரிய நூலாகும்.
உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் தெய்வப் புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் ஒன்றாகும். கி.மு 7 ஆம் நூற்றாண்டில் திருவள்ளுவர் வாழ்ந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. திருவள்ளுவர் இப்படி தான் இருப்பார் என்பதற்கு பல ஊர்களில் உதாரணத்திற்கு இலங்கை,கேரளா,. சென்னை மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் கோவிலே இருந்தாலும், அரசு தரப்பில் இருந்து திருவள்ளுவர் படத்தை வெளியிடும் போது சில மாற்றங்கள் செய்து வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதன் வெளிப்பாடு தான் 1959 ஆண்டு வாக்கில் திருவள்ளுவருக்கு திரு உருவ படத்தை ஏற்படுத்த வேண்டும் என முழுமுதற்முயற்சி மேற்கொண்டவர் திமுக-வை சேர்ந்த ராம தமிழ்ச்செல்வன் அவர்கள்.
தமிழ் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர், தன்னுடைய இயற் பெயரான ராமன் என்பதனை ராம தமிழ் செல்வன் என மாற்றிக் கொண்டார். இவர் தனது பள்ளி படிப்பின் போதே மதராஸ்(சென்னை ) வரும் போது, ஓவியர் பாலா - சீனு (பாலா ப்ரதர்ஸ்) அவர்களை சந்தித்து, திருவள்ளுவருக்கு திரு உருவத்தை ஏற்படுத்த வேண்டும். எனவே ஒரு கையில் எழுத்தாணியும், மறு கையில் ஓலைச்சுவடியும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ள, அதற்கேற்றவாறே வெள்ளுடை அணிந்தவாறு தலையில் ஜடா முடி வைத்தும், முகத்தில் தாடி வைத்தும் அழகான ஓர் உருவத்தை வரைந்து கொடுக்க, அதனை ஆசை ஆசையாக பெற்றுக்கொண்ட ராம தமிழ் செல்வன் தன் கையில் இருந்த 70 ரூபாயை கொடுத்து ஓவியத்தை பெற்றுக்கொண்டு, தன் வீட்டிற்கு கொண்டு செல்லலாமா என நினைத்த போது நம் வீட்டிற்கு கொண்டு சென்றால் தன் குடும்பத்தாருக்கு மட்டுமே தெரியும். ஆனால் பள்ளியில் வைத்து விட்டால் மாணவர்கள் திருவள்ளுவர் பற்றி நன்கு தெரிந்துகொள்வார்கள் என நினைத்து, தான் படித்த பள்ளியில் வைத்து, அதனை பள்ளி தலைமை ஆசிரியர் கையால் திறந்து வைத்தனர்.
அக்காலகட்டகத்தில் ராம தமிழ் செல்வன் அவர்களுக்கும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கும் நல்ல நட்புறவு இருந்தது. இவர்கள் இருவரும் ஒன்றாக சென்னை வரும் போது திருவள்ளுவருக்கு திரு உருவ படத்தை ஏற்படுத்தி, அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என நினைத்து, ஓவியர் வேணுகோபால் ஷர்மா அவர்களை சந்தித்து 3 பேரும் ஒரு ஒப்பந்தம் செய்து திருவள்ளுவர் படம் அச்சிட்டு வெளியிட முடிவு செய்தனர். அதன்படி மிகவும் நுணுக்கமாக திருவள்ளுவருக்கு உருவத்தை கொடுத்து உள்ளனர்.
இதற்குப் பின், மு. கருணாநிதி முதல் அமைச்சராக இருந்தகாலகட்டத்திலேயே இந்தப் படம் அரசுப் பேருந்துகள் அனைத்திலும் இடம்பெறச் செய்யப்பட்டது. இந்தப் படமே அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படமாக அறிவிக்கப்பட்டு தமிழக அரசால் அரசாணையும் வெளியிடப்பட்டது.
ஆக மொத்தத்தில் அரசு தரப்பில் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்திற்கு, ராம தமிழ் செல்வன் பொருள் உதவியோடு தான் உருவம் கொடுக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது. ஆனால் இதுவரை எந்த அரசும் ராம தமிழ் செல்வன் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் வழங்க வில்லை. கௌரவப்படுத்தவும் இல்லை என்பது தான் வேதனை.
ஆனால், திருவள்ளுவர் உருவம் பார்ப்பதற்கு மகரிஷி போன்று இருப்பதால், அவர் உடையில் காவி நிறத்தை சேர்த்தால் எதிர்ப்பு தெரிவிப்பதில் இருக்கும் வேகம், உருவம் கொடுத்தவருக்கு கௌரவப்படுத்துவதில் இல்லை என்றும், மேலும் தங்களை எந்த அரசும் அடையாளம் காட்டவில்லை என்பது தான் வேதனையின் உச்சம் என்கிறார் ராம தமிழ் செல்வன் அவர்களுடைய இரண்டாவது மகன் ராம. இளங்கோவன். பத்திரிக்கையாளர் தேன்மொழி, இவரிடம் ராம தமிழ்ச்செல்வன் குறித்த அனைத்து விவரத்தையும் கேட்டறிந்து தகவலை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற மிக முக்கிய தகவல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, 2013 ஆம் ஆண்டு மறைந்த ராம தமிழ்ச்செல்வன் அவர்களின் குடும்பத்தினருக்காவது அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.