புதுதில்லி : குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுடன் சமரசம் செய்துகொள்வதை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது என பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
போக்ஸோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட எப்.ஐ.ஆரை ரத்துசெய்ய கோரி பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஜெயின் அவர்களின் முன்னர் நடைபெற்றது. கடந்த 2019ல் ஹரியானா சிர்சாவில் அமைந்துள்ள மகளிர் காவல்நிலையத்தில் ஒரு எப்.ஐ.ஆர் பதியப்பட்டது.
ஐபிசி 452 ( இருப்பிடத்தில் அத்துமீறுதல் ), குற்றவியல் மிரட்டல் (506) ஆகிய இந்திய தணடனை சட்டப்பிரிவுகள் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச்சட்டம் மற்றும் போக்ஸோ ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவர்களை சந்தித்த குற்றம்சாட்டப்பட்டவரின் தரப்பினர் அந்த அப்பாவி பெற்றோர்களுடன் சமரசம் செய்ய முயற்சித்தனர். மேலும் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனுவும் கொடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் " குழந்தையின் கண்ணியத்தை காகிதத்தில் போடப்படும் ஒப்பந்தத்தின் மூலம் சமரசம் செய்ய பெற்றோர்களை அனுமதிக்க முடியாது.
போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டனை பெரும் குற்றங்களுக்காக பதியப்பட்ட ஒரு எப்.ஐ.ஆரை சமரசத்தை அடிப்படையில் ரத்துசெய்ய முடியாது. இந்த கோரிக்கை மனுவை ரத்துசெய்வதுடன் அடுத்த ஆறுமாதங்களுக்குள் வழக்கு விரைந்து முடிக்கப்படவேண்டும் என உத்தரவிடுகிறேன்" என நீதிபதி ஜெயின் தீர்ப்பளித்துள்ளார்.