ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தெரிந்தோ தெரியாமலோ பணத்தை இழப்பதும், வீடியோ கேமிற்குள் முழ்கும் இளைய தலைமுறை அதற்கு பெற்றோர் அனுமதிக்கவில்லை என்றால் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் இறங்குவதும் தொடர்கதையாகி வந்தது. இதனால் ஆன்லைன் விளையாட்டுக்களை வெளியிடும் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வந்தது.
இந்நிலையில் 2021ம் ஆண்டு ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விடுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளின் கீழ் ஆன்லைன் வீடியோ கேம் நிறுவனங்களும் அடங்கும் என மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த வரைநெறிமுறைகள் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் வளர்ச்சியை பொறுப்பான முறையில் கட்டுப்படுத்தும் விதமாக அமைவதை உறுதிபடுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் விதிமுறைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கேமிங் தளங்கள் இந்தியாவின் சட்டங்களுக்கு இணங்க வேண்டும், ஆன்லைன் விளையாட்டில் ஏற்படும் புகார்களை குறைதீர்ப்பு முறையில் தீர்க்க வேண்டும், ஆன்லைன் விளையாட்டில் பங்கேற்போர் இந்திய சட்டங்களை மீறி ஆன்லைன் கேமை காட்சிப்படுத்தவோ, பதிவேற்றவோ, பகிரவோ கூடாது.
ஆன்லைன் விளையாட்டில் பங்கேற்பவருக்கு கட்டாயம் சரிபார்ப்பு மற்றும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கான இந்திய முகவரி முக்கியம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. சுய ஒழுங்குமுறை அமைப்பிடம் பதிவு செய்து, அரசிடம் அனுமதி பெற்று பதிவு செய்யப்பட்ட உறுப்பினராக ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் தங்களது கேம்களை பதிவு செய்ய வேண்டும், ஆன்லைன் கேமிங் நிறுவனங்களிடம் இருந்து டெபாசிட் தொகையை திரும்ப பெறுவது, வெற்றி பெறும் விதம், கட்டணம் மற்றும் அதன் கொள்கைகள் குறித்து பயனர்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும். இதுபற்றிய கருத்துக்கள் குறித்து ஜனவரி 17ம் தேதிக்குள் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.